Thursday, February 28, 2013

ரஜினியின் பெருந்தன்மை

ரஜினி நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், சதுரங்கம் ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர். துரை, ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி துரை கூறியதாவது:- என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் ரகுபதி ராகவன் ராஜாராம். அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான். வந்த வம்பையும் விடமாட்டான்.
முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான். இந்த நிலையில், முறைப் பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும் போது துடித்துப் போவான். உன்னைக் கெடுத்தவனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே வில்லனை கொன்று, பிணத்தை முறைப் பெண் முன் கொண்டுவந்து போட்டுவிட்டு பொலிஸில் சரண் அடைவான்.
ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் இணைப் பகுதியில் நடந்தது. அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை கதாநாயகி லதாவுக்கு, இன்னொரு அறையில் விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு கட்டில் தான். மற்றொருவருக்காக தரையில் “பெட்” விரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். அதை ரஜினி ஏற்கவில்லை. நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுக்கிறேன். என்று கூறி அப்படியே படுத்துக்கொண்டார். அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது. சீரியசான கெரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, சதுரங்கம் படத்தில் பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில் தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார். அவர் என்னை எங்கு பார்த்தாலும் அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார். இவ்வாறு கூறினார் துரை.

எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக பதிந்த பாட்டி

யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில் காலையில் முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வோக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும் போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர். அவர் விலையை கூறியவுடன் “மறுநாள் வாங்கி கொள்வதாக” கூறி நகர்ந்திருக்கிறார்.
“ஏன் வேண்டாம் என்று சொல்லுகிaர்கள் என்று கேட்ட பாட்டியிடம் “தனக்கு மட்டுல்ல.... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை” என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். “பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடு” என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், “நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே” என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
“காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்” என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து தான் முதலமைச்சரான பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர். அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.

பாடலில் 56 தடவை 'மே' வந்தது ஏன்?

ஒரு முறை சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா, சிங்கப்பூர் போய் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். மலேசியாவில் குறிப்பாக மே மாதத்தில் படமாக்க வேண்டும் என்பது இயக்குனரின் திட்டமாக இருந்தது.
காரணம் மலேசியாவின் பிரபல மலர் கண்காட்சி அப்போதுதான் தொடங்கும். அதற்கான அவசரத்தில் படப்பிடிப்புக் குழுவினர் இருந்தனர்.
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் தயாராக இருந்தன.
சிவாஜி, மஞ்சுளா கால்iட்டுகளும் ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட போதும் கண்ணதாசன் எழுதி கொடுக்கவில்லை ‘அப்புறம் தருகிறேன்’ என்பதே அவரது பதிலாக இருந்திருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம்.
எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷ¥ட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.
மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.
பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.
அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார்.

மாணவர்களின் தற்கொலையை ஆராயும் 4

பவர் ஸ்டார் மூவீசுக்காக பால். வெங்கடேஷ் தயாரிக்கும் படம் ‘4’ பாலாஜி சக்ரவர்த்தி, தர்வின், வித்யாஸ்ரீ, ஹேமா நடிக்கின்றனர். இசை, குட்லக் ரவி, ஒளிப்பதிவு, இயக்கம், பகவதி பாலா, இப்படத்தின் பாடல் சி. டியை விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் வெளியிட, சார்லி பெற்றுக்கொண்டார். பிறகு படம் குறித்து பகவதி பாலா கூறியதாவது;
தமிழகத்தில் 8 இலட்சம் மாணவர்கள்
பிளஸ் 2 பரீட்சை எழுதுகின்றனர். தோற்பவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவற்றில்
சிலரைப் பற்றியே ளியுலகிற்கு தெரிகிறது. அது ஏன் என்பதை ஆராய்ந்து, அதற்கு சரியான தீர்வைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. நான்கு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அதில் தோல்வி அடைந்ததும், பெற்றோருக்குப் பயந்து அந்த ஊரைவிட்டு ஓடுகின்றனர்.
அப்போது பள்ளியின் முதல்வர் திடீரென்று கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தது மாணவர்கள்தான் என்று நினைத்து பொலிஸ் அவர்களை துரத்துகிறது. ஆனால் நிஜமாகவே கொலை செய்தவர்கள் மாணவர்களை சிக்க வைக்க துரத்துகின்றனர்.
இப்படி திகிலான கதையுடன், மாணவர்களின் தற்கொலை பற்றியும் சொல்லியிருக்கிறேன்.

எப்ப வந்தாலும் என் கதை கலக்கும்

இப்போதைக்கு எனது சொந்தக் கதையை படமாக்கப் போவதில்லை என்று நடிகை சோனா அறிவித்துள்ளார். பிரபல கவர்ச்சி நடிகை சோனா தேவ் என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்து இயக்குகிறார்.
இதில், ‘எனது சொந்த வாழ்க்கையை சொல்லப் போவதாகவும், திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் படத்தில் இருக்கும். இருட்டு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்றெல்லாம் மிரட்டியிருந்தார்.
இந்த அறிவிப்பால், யார் யாரைப் பற்றிய ரகசியங்களை சோனா காட்சிகளாக வைத்து கவிழ்க்கப் போகிறாரோ என்று பரபரப்பாக எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது அத்தனையும் புஸ்ஸாகிவிட்டது. ஆம் சோனா திடீரென அந்த முடிவை கைவிட்டு விட்டாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘யோசித்துப் பார்த்தேன். இப்போதே என் கதையைச் சொல்லிவிட்டால், அப்புறம் என்னை யாரும் ரசிக்க மாட்டார்களே. எனவே இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்துவிட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும் எப்போது வந்தாலும் என் கதை கலக்கும் என்றார்.

ஐதராபாத் குண்டு வெடிப்பு; டொக்டர் ராஜசேகர் - ஜீவிதா 5 லட்சம் நிவாரண உதவி


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவும், இறந்தவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் ஆந்திர அரசு நிதி திரட்டுகிறது. இதில் முதன் முறையாக திரைப்பட நட்சத்திரங்களான தமிழ் நாட்டைச் சேர்ந்த டொக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகள் 5 லட்சம் நிதி அளித்துள்ளனர். ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து இதனை அவர்கள் வழங்கினர்.
இது குறித்து டொக்டர் ராஜசேகர் கூறும்போது, ‘நடந்திருக்கும் கொடுமைக்கு இது சிறிய தொகைதான். என் படம் ‘மகாகானி’ 1ஆம் திகதி வெளிவருகிறது. இது வெற்றி பெற்று நல்ல வருமானத்தை கொடுத்தால் இன்னொரு பெரிய தொகையை நிதியாக கொடுப்பேன். இதேபோன்ற பயங்கரவாத செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமலாபால் ஸ்பெயினில் ரகசிய லிப்லொக்

தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி கட்டி பவ்யம் காட்டும் அமலாபால், அக்கட ஆந்திரா தேசத்தில் படு கவர்ச்சி நாயகியாக ஆட்டம் போடுகிறார். கோடி ரூபாய் சம்பள நடிகை பட்டியலில் சேர்ந்து விடவேண்டும் என்பதற்காக எத்தகைய காட்சிகளிலும் நடிக்கத் தயார் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார்.
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் “இத்தரம்மாயிலதோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுன் கதாநாயகன் அமலாபால் கதாநாயகி. இந்தப் படத்தில் மூன்று இடங்களில் லிப்லொக் முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இதற்கான படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கேயே இந்த மூன்று காட்சிகளையும் எடுத்து விட இயக்குனர் பூரி ஜெகன்னாத் முடிவு செய்தார். இதனை அவர்களிடம் சொன்னபோது முதலில் தயங்கியவர் அல்லு அர்ஜுன், அமலாபால் அடுத்த நொடியே ஒகே சொன்னாராம். இயக்குநர், கெமராமேன் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு வெவ்வேறு பின்னணியில் லிப்லொக் முத்தக் காட்சிகளை எடுத்தாராம்.
முதல் காட்சி மட்டும் ஏழு டேக் வரை சென்றது என்றும், அடுத்த காட்சிகள் ஒரே டேக்கில் முடிந்தது என்றும் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். கடைசி வரை முத்தக்காட்சி படங்களை வெளியிடாமல் திரையரங்கில் மட்டுமே அந்த காட்சிகளை காணும் வகையில் திட்டம் வைத்திருக்கிறாராம் பூரி ஜெகன்நாத்.

உதட்டு முத்தம் வேண்டாம் இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா?

உதட்டு முத்தம் வேண்டாம்

பெரும்பாலும் நடிகைகள்தான் உதட்டு முத்தக்காட்சி என்றால் முகம் சுழிப்பார்கள். ஆனால் சமீபகாலமாக நடிகைகளே கூட அந்த விடயத்துக்கு தயாராகத்தான் வருகிறார்கள். ஆனால் கருப்பம்பட்டி படத்தில் நடித்துள்ள அஜ்மலோ, உதட்டு முத்தக்காட்சியா? வேண்டவே வேண்டாம் என்று டைரக்டரிடம் மன்றாடியிருக்கிறார். இந்த மாதிரி காட்சிக்காக சில நடிகர்கள் அலையோ அலையென்று அலைகிறார்கள். நீங்கள் என்னடான்னா உதட்டு முத்தம் என்றதும் இப்படி அலறுகிaர்களே? என்று கேட்டதற்கு, நடிகைளுடன் நெருக்கமாகவே இப்போதுதான் நான் நடிக்க பழகி வருகிறேன். இந்த நேரத்தில் உதடு கவ்வி முத்தம் கொடுப்பதென்பது எனக்கு நடுக்கத்தை கொடுக்கிறது என்றாராம்.
ஆனால் அப்படத்தில் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாஜ்பாய், முத்தக்காட்சி என்றதும் பல்லால் உதட்டை கடித்துக் கொண்டு, இன்றைக்கு நானா, அஜ்மலான்னு ஒரு கை பார்த்துடுவோம் என்று தில்லாக கெமரா முன்பு வந்து நின்றாராம். அவரது வேகத்தை தெரிந்து கொண்ட கருப்பம்பட்டி பட டைரக்டரா பிரபு ராஜ சோழன், அவரை அழைத்து, அஜ்மல் முத்தக்காட்சியில் நடிக்க தயங்குகிறார். இதனால் நீங்கள் அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று காட்சியை மாற்றி விட்டேன் என்று சொன்னாராம். இதனால் புல் மூடோடு வந்து நின்ற அபர்ணா, வெறுத்து விட்டாராம். அதோடு, முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய அஜ்மலை அதன் பிறகு பார்க்கும்போதெல்லாம், புதிதாக வயசுக்கு வந்த பெண்ணை கலாய்ப்பது போல் விரட்டி விரட்டி கலாய்த்தாராம் அபர்ணா பாஜ்பாய்.

21 வயதில் 21 படங்கள் 21 குழந்தைகள்

ஹன்சிகா.... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் வன் நடிகை, மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் வன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் “மாப்பிள்ளை” படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம்பிடித்தார். தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்- 2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் பாடங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்.
இது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நிரந்தரமாக ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஹன்சிகாவின் திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி பிரபல பெண்கள் இதழான ஜே. எப். டிபிள்யூ (ஜஸட் ஃபார் வுமன்) இதழ் ஹன்சிகாவை இளம் சாதனையாளராக தேர்வு செய்து அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்குகிறது. ஹன்சிகாவுடன் நடிகைகள் சரோஜாதேவி, த்ரிஷா, சமூக சேவகர்கள் சுஜாதா மோகன், அலமேலு வள்ளி, விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விஞ்ஞானி தோமஸ் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

Wednesday, February 20, 2013

சொந்த வீட்டை விற்று கடன் கொடுத்தவர் ராஜேஷ்

1968 இல் 15 ரூபாவுடன் சென்னைக்கு வந்தவர்
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனைகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய சோதனையால் நடிகர் ராஜேஷ் சொந்தமாகக் கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.
1984 ஆம் ஆண்டு வெளியான ‘சிம்ம சொப்பனம்’, ‘எழுதாத சட்டங்கள்’, 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மண்ணுக்குள் வைரம்’ ஆகிய படங்களில் சிவாஜிகணேசனுடன் ராஜேஷ் நடித்தார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘சிவாஜிக்கு எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்தான். அவர்கள் குடும்பத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் 60 ஆண்டு பழக்கம் இருந்து வந்தது. 1985க்குப் பிறகு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜி என்னிடம் பேசும்போது, ‘நான் நாடக மேடையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவன். ஆனால் நீ நேரடியாக சினிமாவுக்கு வந்திருக்கிறாய். உனக்கும், எனக்கும் வித்தியாசம் உண்டு’ என்பார். அவர் மாபெரும் கலைஞர்.
ஒருமுறை, ‘உங்கள் படத்தைப் பார்த்துத்தான் நடிக்க கற்றுக் கொண்டேன்’ என்று கூறி, அவர் நடித்த பல படங்கள் பற்றி விரிவாகக் கூறினேன். அதற்கு அவர், ‘இவ்வளவு படங்களைப் பார்த்துவிட்டு எப்படி பாடம் படித்தாய்?’ என்று சிரித்தபடி கூறினார்.
ஒரு நாள் காக்கி சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு சிவாஜியைப் பார்க்க சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ‘என்ன? என்னைப் போல உடை அணிந்து இருக்கிறாயே’ என்றர். அதுபற்றி கேட்டேன்,
‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுங்கள். எல்லோருக்கும் பயன்படும்’ என்று கூறினேன். அதன் பிறகுதான் தன் வாழ்க்கை வரலாற்றை எழுத ஏற்பாடு செய்தார்.’
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
அதன் பின்னர் ‘சத்யா’, ‘மகாநதி’ முதலான படங்களில் கமல்ஹாசனுடனும், ‘மக்கள் என் பக்கம்’, ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்களில் சத்யராஜுடனும் ராஜேஷ் நடித்தார்.
திரைப்படங்களில் நடித்து வந்த ராஜேஷ் 1988 ஆம் ஆண்டு தேர்தலில் எம். ஜி. ஆரின் மனைவி ஜானகியின் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். எம். ஜி. ஆரிடம் வைத்து இருந்த அன்பின் காரணமாக அவர் மனைவிக்காக பிரசாரம் செய்தார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘எம். ஜி. ஆரை சிறு வயது முதலே மாபெரும் சக்தியாகக் கண்டேன் நான் முதன் முதலாக என் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக எம். ஜி. ஆரை சந்தித்தேன். காளிமுத்துதான், என்னை எம். ஜி. ஆரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
எனது திருமணத்திற்கு எம். ஜி. ஆர். வரவில்லை. அதன் பிறகு, 1987 ஆம் ஆண்டு எனது தங்கை திருமணத்திற்கு, எம். ஜி. ஆர். வந்தார். அப்போது நான் எம். ஜி. ஆரிடம் நடிகர் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
எனது வீட்டை திறந்து வைத்ததும், எம். ஜி. ஆர்தான். ஒரு முறை, ‘கடவுள் வாழ்த்துப் பாடும்’ என்ற பாடலில் கத்தியை அவர் லாவகமாக பிடித்த ஸ்டைலை பற்றி நான் குறிப்பிட்ட போது அவர் கண்கலங்கிவிட்டார். நான் எம். ஜி. ஆர். சிவாஜி, எம். ஆர். ராதா ஆகியோரை ரசித்தேன் அவர்கள் 3 பேரும் என் நடிப்புக்குள்ளும், என் வாழ்க்கைக்குள்ளும் இருப்பார்கள்.’
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
1985 ஆம் ஆண்டு ராஜேஷ் சொந்தமாக சென்னையில் ஒரு வீட்டை கட்டினார். கிரகப்பிரவேசத்துக்கு அப்போது முதல் அமைச்சராக இருந்த எம். ஜி. ஆர். வந்திருந்து, குத்துவிளக்கேற்றி வீட்டை திறந்து வைத்தார்.
வீட்டை சிறப்பாக கட்டி முடித்த ராஜேஷ், அந்த வீட்டில் ஒரு நாள் இரவுதான் தங்கினார். 6 ஆண்டுகளில் கடன் பிரச்சினை காரணமாக வீட்டை விற்றுவிட்டார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘1968 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபோது, என் பெற்றோரிடம் ரூ. 15 மட்டும் வாங்கி வந்தேன். சென்னையில் சித்தி வீட்டில் தங்கி அவர்களிடம் கடன் வாங்கிப் படித்தேன். 2 ஆண்டுகளுக்கான படிப்பு செலவு 850 ரூபாவை திருப்பிக் கொடுத்தேன்.
1985 ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியும், சிலரிடம் கைமாற்றாகப் பணம் வாங்கியும் வீடு கட்டத் தொடங்கினேன். அந்த நேரத்தில் எனக்கு பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது. எனது புது வீட்டில் நான் ஒருநாள் மட்டுமே தங்கினேன். அந்த வீட்டில் குடியேறாமல், தொடர்ந்து வாடகை வீட்டிலேயே தான் இருந்தேன்.
நான் புதிதாக கட்டிய வீட்டில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடந்து வந்தன. முதலில் ‘மக்கள் என் பக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் பாலாஜிதான் முதல் ஷ¥ட்டிங்கை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வீட்டில் நடந்த படப்பிடிப்புக்களில் சிவாஜி, ரஜினி, ரிஷிகபூர், அம்ஜத்கான் என அனைத்து மொழி நடிகர்களும் நடித்து உள்ளனர். மாதம் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும்.
பிறகு ஒரு கட்டடத்தில், படப்பிடிப்பும் குறையத் தொடங்கியது. கடன் பிரச்சினையும் இருந்து வந்தது. அதனால் 6 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டை விற்று விட்டேன். அந்த பணத்தைக் கொண்டு வங்கிக் கடனையும் சிலரிடம் கைமாற்றாக வாங்கிய கடனையும் அடைத்தேன். 1992 ஆம் ஆண்டு கடன்களைஅடைத்து முடித்தேன். இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

மிஸ்ஸியம்மா மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பி.சுசீலா


சுகமான குரலென்றால் சுசீலாவின் குரல் என்ற கண்ணதாஸனின் வார்த்தைகள் சத்தியமானது. 1952ல் திரையுலகத்தில் நுழைந்த பி. சுசீலா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். (1969, 1971, 1971, 1982, 1983)
சரியான உச்சரிப்பால் தமிழை கெளரவப்படுத்திய பி. சுசீலா 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.
‘ஆந்திராவில் விஜயநகரம் என்கிற சரித்திரப் புகழ்வாய்ந்த ஊரில் நான் பிறந்தேன். அப்பா முகுந்தராவ், அம்மா சேஷாந்திரம், படிக்கிற போதே எனக்கு கர்நாடக சங்கீதம் சொல்லித் தரவேண்டும் என்று நினைத்தார் அப்பா. எனக்குச் சங்கீதம் கற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. ‘சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளமாட்டேன்’ என்று அழுவேன். மகளே அழு, ஆனால் நன்றாகப் பாடி முடித்த பின் அழு’ என்று சொல்வார்.
பள்ளிப் படிப்பு முடித்த பிறகு சங்கீதத்தில் டிப்ளோமா வாங்கினேன். என் அக்கா, குடும்பத்தோடு சென்னையில் இருந்தார் என்பதால் அடிக்கடி சென்னை வருவேன். அப்படி வரும்போது சென்னை வானொலியில் ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடுவேன். பாப்பா மலர் நிகழ்ச்சியை நடத்தும் வானொலி அண்ணா ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார். என் அப்பாவைச் சந்தித்து, ‘சுசீலா சினிமாவில் பாடினால் நன்றாக இருக்கும்’ என்றார். நான் சினிமாவில் பாடுவதில் அப்பாவுக்கு இஷ்டமில்லை. ஆனால் எனக்கோ சினிமாப் பாடல் பாட ரொம்பப் பிடிக்கும்.
கடைசியில் சினிமாவில் பாடுவதற்கு அப்பா அனுமதி கொடுத்தார். பெண்டியால் நாகேஸ்வர ராவ் இசையமைப்பில் ‘ஏதுக்கழைத்தாய்’ என்கிற பாட்டுதான் முதல் முதலாக நான் சினிமாவுக்காகப் பாடிய பாட்டு. கொஞ்சம் இடைவெளி விட்டு ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் அஞ்சலிதேவிக்காக ஒரு தாலாட்டுப் பாடல் பாடினேன். இதே படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தார் நடிகை லலிதா. இவர் விக்கி, விக்கி பாடுகிற ‘உன்னை கண் தேடுதே’ பாட்டு வெளியானது தான் தாமதம், தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் என் பெயர் பரவி விட்டது. இப்படி ஆரம்பமானது பி. சுசீலாவின் திரை வாழ்க்கை.
‘பெற்ற தாய்’ படத்திற்கு பின் ஏவி. எம். ஸ்டுடியோவிற்காக பணியாற்றிய பி. சுசீலாவிற்கு தமிழ் சொல்லித் தர லெஷ்மிநாராயணன் என்பவரை ஏவி.எம். ஏற்பாடு செய்தார். குறுகிய காலத்தில் தமிழை தன்வசப்படுத்திக்கொண்ட பி. சுசீலா ‘மிஸ்ஸியம்மா’ படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். 1955ல் தொடங்கி 1975 வரை வெளிவந்த அநேக படங்கள் பி. சுசீலாவின் பாடலோடு தான் வெளிவந்தன. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் நூற்றுக்கு மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடிய பி. சுசீலாவின் குரல் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.
தமிழக அரசு மூன்று முறை (1969, 1981,1989) மாநில விருதையும், ஒருமுறை பாரதிதாசன் விருதையும், 1991 கலைமாமணி விருதையும் வழங்கி பி.சுசீலாவை கெளரவித்திருக்கிறது.
என் தலைக்கு மேலே ஒரு மேகம் குடைபிடித்துக்கொண்டே வருவதுபோல் கடந்த இருபத்தைந்து வருடங்களாய் என் வாழ்வின் ஓரமாகவே நீங்கள் நடந்து வந்திருக்கிaர்கள் தாயே’ என்று சுசீலாவைப்பற்றி அவரது ரசிகரான வைரமுத்து ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்போல் அநேக தமிழர்களின் வாழ்வோடு பி. சுசீலாவின் குரல் கலந்திருக்கிறது.

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் மனிதர்களுக்கு வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்துகொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது.
மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்ட திட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்க்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.
பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்.
இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது.
எகிப்து, லிபியா உட்பட உலக நாட்கள் பலவற்றிலும் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.
அத்தகைய சமநிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டும் அறிவொளி பெற வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும்.
போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப் பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு, தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்போது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப் பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படம் சமுதாயம் கதாநாயகி ஜெயகெளரி

இலங்கையில் தயாரிக்கப் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் சமுதாயம். 1962 ம் அண்டில் வெளிவந்த இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஹென்றி சந்திரவன்ச. இத்திரைப்படம் 16 மிமீ அகலத்திலேயே வெளிவந்தது. அறிஞர் அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி கதையைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார்.
எஸ்.என். தனரெத்தினம் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். ஜெயகெளரி கதாநாயகி. வில்லனாக ஏ.எஸ். ராஜா நடித்தார். மற்றும் ஆர். காசிநாதன், ஆர்.வி. ராசையா, இரத்தினகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார்கள். எம். ஆர். ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார்.
செலவைக் குறைப்பதற்காக இப்படத்துக்கான அனைத்துப் படப்பிடிப்புகளும் கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்தார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன. வினோதினி இந்திராணி செல்லத்துரை, அம்பிகா தாமோதரம், முகமட் பியாஸ் ஆகியோர் இத்திரைப்படத்தின் பின்னணிப் பாடல்களை பாடியுள்ளனர். சந்திரவன்ச ‘சமுதாயம்’ தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய’ என்னும் சிங்களத் திரைப்படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்’ படத்தின் தழுவலே அதுவாகும்.

மைதானத்தை கலக்கிய கமலின் மகள்கள்

ஐதராபாத்தில் நடந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணியும், கர்நாடக புல்டோசர் அணியும் மோதியன.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போல சென்னை - கர்நாடக அணிகள் கருதப்படுகின்றன.
சென்னை அணியின் தூதராக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளார். வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டியது அவரது கடமை.
அண்மையில் நடந்த போட்டிக்கு அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு துணையாக தங்கை அக்ஷரா ஹாசனும் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
இருவரும் மைதானத்தை சுற்றி வந்தும், விசில் அடித்தும், ஆட்டம் போட்டும் கலக்கினார்கள். ஆனால் மழை வந்து ஆட்டம் பாதியிலேயே நின்று விட்டதால் இருவரும் கவலையுடன் சென்றனர்.
அக்ஷராவின் அழகு இன்னும் மெருகேறி இருப்பதாக சிலர் பேசிக் கொண்டனர். ‘எத்தனை கோடி கொடுத்தாவது இந்த பொண்ணை நம்ம படத்துல நடிக்கவச்சிடனும்’ என்று சில இயக்குனர்கள் கூறினார்கள்.

இயக்குனர்களை துரத்தும்

திவ்யா
சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ரம்யா. அதையடுத்து சில படங்களில் நடித்தவர், கெளதம்மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தபோது தனது பெயரை திவ்யா ஸ்பந்தனாஸ் என்று புதுப்பித்துக்கொண்டார்.
அதையடுத்து தனுசுடன் பொல்லாதவன் படத்தில் நடித்து ஓரளவு பரபரப்பான இடத்தை எட்டிப் பிடித்தார். இருப்பினும் அந்த இடத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பரபரப்பை கூட்டும் முயற்சியில் இருந்ததால், அரசியல் கோதாவில் குதித்த அவர் இனிமேல், நமக்கு செட்டாக மாட்டார் என்று அவரை ஓரம்கட்டினார்கள் இயக்குனர்கள்.
இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் மட்டும் சில படங்களில் நடித்து வரும் திவ்யா ஸ்பந்தனாஸ் மீண்டும் கோலிவுட்டில் சில அபிமானத்திற்குரிய இயக்குனர்களை துரத்தி வருகிறார்.
குறிப்பாக கெளதம்மேனன், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களிடம் மீண்டும் தன்னை ஆதரிக்குமாறு உரிமையோடு சான்ஸ் கேட்டு வருகிறார் நடிகை. மேலும், கடந்த வாரத்தில் சென்னைக்கு விசிட் அடித்த திவ்யா தன்னுடன் நடித்த சில இளவட்ட ஹீரோக்களை சந்தித்து எல்லா நடிகைகளையும் திருமணத்துக்குப் பிறகு தான் ஓரங்கட்டுவீர்கள்.
ஆனால் என்னை பீல்டில் இருக்கும்போதே ஓரங்கட்டுகிaர்களே என்ன காரணம்? என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் நடிகை. அதற்கு, திருமணம் ஆகலேன்னாலும் உடம்பு திருமணமான நடிகைகள் மாதிரி ஏறிப்போச்சே, இப்போது நாம் ஜோடி சேர்ந்தால், அக்காளும் தம்பியும் மாதிரி இருக்குமே என்று நறுக் பதில் சொன்னார்களாம்.
இதனால் கடுப்பான நடிகை தன்னைப் பார்த்து இப்படியொரு வார்த்தை சொன்ன அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், கர்நாடகத்துக்கு ஓட்டம் பிடித்திருக்கிறார்.

கார்த்திகாவுக்கு ஆடு மேய்க்க பயிற்சி

சில படங்களில் எங்குபார்த்தாலும் ஆளாக தெரிகிறது என்பார்கள். ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திகா நாயகியாக நடித்துள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் எந்த காட்சியில் பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தையாகத்தான் தெரிகிறதாம்.
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் ஆடு இல்லாத காட்சியே இல்லை என்கிறார்கள்.
இதுபற்றி அப்படத்தின் நாயகி கார்த்திகாவைக் கேட்டால், உண்மைதான், அந்த படத்தில் நான் ஆடுமேய்க்கும் பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன்.
அதனால் இப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமான போது ஆட்டுடன் பழகியிருக்கிறாயா? என்றுதான் கேட்டார்கள். நானோ ஆட்டுக்குட்டியை இதுவரை தொட்டுக்கூட பார்த்ததில்லை என்று சொன்னேன்.
அதையடுத்து என்னை தேனிக்கு கூட்டிச்சென்று சில ஆடுமேய்ச்சிகளிடம் சொல்லி ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்துச் செல்வது என்பதை சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது எந்த மாதிரி ஆடுகளுக்கு புரியுற மாதிரி குரல் கொடுக்க வேண்டும் என்றும் சீட்டி அடித்து காட்டினார்கள்.
இப்படியாக நடிப்பு பயிற்சியை விட ஆடு மேய்ப்பதற்காகத்தான் நிறைய பயிற்சி எடுத்தேன் என்று சொல்லும் கார்த்திகா, படத்தில் எனக்கு முதுகெலும்பு போன்ற கதாபாத்திரம் என்பதால் நிறைய சீன்களில் நான்தான் வருவேன்.
நான் வந்தால் ஆடுகளும் வந்தாக வேண்டும். அதைப்பார்த்துதான் எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தைக் கூட்டமாக தெரிவதாக சொல்கிறார்கள் என்று தெளிவுபடுத்துகிறார் கார்த்திகா.

Wednesday, February 13, 2013

ஜமுனாராணி சினிமாவில் அறிமுகமானது நடன மங்கையாக


மறக்க முடியாத பழைய குரல்களில் ஒன்று ஜமுனாராணியினுடையது. இன்று குத்துப் பாடல்கள் என இளசுகளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனா ராணியும் ஒருவர். ஜமுனா ராணி எல். ஆர். ஈஸ்வரி ஆகியோரின் அந்தக் கால குத்துப் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை மட்டுமல்லாது முதியவர்களையும் கவர்ந்திழுத்தன.
1952 ஆம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வளையாபதி படத்தில் டி. எம். எஸ். ஸ¤டன் இணைந்து குளிர்தாமரை மலர்ப் பொய்கை என்ற பாடசாலை முதன் முதலாகப் பாடினார் ஜமுனாராணி. அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதே படத்தில் உள்ள இன்னொரு பாடலான குலுங்கிடும் பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால் என்ற பாடல் தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.
டி.எம். செளந்தரராஜனின் கம்பீரக் குரலுக்கு இணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள் இன்றையக்கும் மறக்க முடியாதவையாக உள்ளன. ஏழுவயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணி பாடியவர். நான்கு வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் போன்ற பெருமைகளின் சொந்தக்காரர் ஜமுனாராணி.
1964 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தியாகய்யா வெளியானபோது பிரபல இசை வித்தகர்களின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றன. அவர்களுடன் ஏழு வயதான ஜமுனாராணியும் மதுரை நகரிலோ என்ற பாடலைப் பாடி இருந்தார். நடன மங்கையாகத் தான் சினிமாவில் ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில் தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார்.
தீன பந்தாஜீவன் முக்திராவால் மீதி, கருடகர்வ பங்கயம் போன்ற தெலுங்குப் படங்களில் ஜமுனா ராணி நடனமாடி இருந்தார். 1952 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்த்திரை உலகின் பெரும் புரட்சியை உருவாக்கிய தேவதாஸ் படத்தில் ஜமுனா ராணி பாடிய “ஒ தேவதாஸ் படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே’ என்ற பாடல் ஜமுனா ராணிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

அம்பிகாவின் மறுமணமும் முறிவு

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சொத்தையே ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு போன நட்சத்திர நடிகைகள் குடும்பத்தில் அம்பிகாதான் மூத்தவர். அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் ஒரு மணாளனுக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்றவர் மிகச் சில ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் திரும்பி வந்தார்.
தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் அவரை டைவர்ஸ் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். “அருணாச்சலம்” படத்தில் ரஜியுடன் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றி தனது செகண்ட் இன்னிங்ஸை துவக்கினார்.
இந்த நேரத்தில் தொலைக்காட்சியிலும் நடிக்க வாய்ப்பு வரவே அதிலும் நடிக்கத் துவங்கினார். அப்படி தன்னுடன் நடிக்க வந்த ரவிகாந்த் என்கிற நடிகருடன் ஜோடியாக நடித்தவர், வெகு சீக்கிரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ரவிகாந்துடனேயே ஜோடி சேர விரும்பினார். ரவிகாந்த் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.
பல இரண்டாவது மனைவிகள் சொல்வதைப் போலவே, ‘ரவியின் முதல் மனைவி அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ என்றார் அம்பிகா. ரவிகாந்த் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்பு, இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த ஒருமித்த தம்பதிகள் பத்தாண்டுகள் கழித்து தங்களிடையே ஒத்து வரவில்லை என்பதை உணர்ந்து முறைப்படி பிரிந்துவிட்டார்கள். பிரிந்த வேகத்தில் ரவிகாந்த் மீண்டும் ஒரு திருமணம் செய்து செட்டிலாகிவிட்டது ஒரு தனிக்கதை!

77ல் வெளிவந்த ரஜினி படங்கள்

அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலசும்மா செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக்குறி, ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்), ஆடு புலி ஆட்டம், காயத்ரி, குங்கும் ர§க்ஷ (கன்னடம்), ஆறுபுஷ்பங்கள், தொலிரேயி கடிசிந்தி (தெலுங்கு), ஆம் மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்)
கவிக்குயில்
எஸ். பி. தமிழரசி தயாரித்த இந்தப் படத்தில், சிவகுமார், ஸ்ரீதேவி பிரதான வேடத்தில் நடித்தனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக லட்சுமி ஸ்ரீ நடித்தார். மற்றும் எஸ். வி. சுப்பையா, ‘படாபட்’ ஜெயலட்சுமி ஆகியோரும் நடித்தனர். ஆர். செல்வராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர். இளையராஜா இசை அமைப்பில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் பெரிய ஹிட்டாகியது.
ரகுபதி ராகவன் ராஜாராம்
இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜயகுமார், சுமித்ரா, ராம்குமார், ஷோபனா ஆகியோர் நடித்தனர். ராம் – ரஹீம் கதை - வசனம் எழுதிய இப்படத்தை இயக்கியவர் துரை.
முதலில் இப்படத்துக்கு ரகுபதி ராகவராஜாராம் என்று பெயர் வைத்திருந்தனர். தணிக்கை குழுவின் ஆலோசனைப்படி ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ என்று மாற்றப்பட்டது.
புவனா ஒரு கேள்விக்குறி
ரஜினிகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மகரிஷி எழுதிய கதைக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம். எஸ். பி. முத்துராமன் டைரக்ஷனில் ரஜினி நடித்த முதல் படம்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார் கெட்டவராகவும், கெட்டவராக நடித்து வந்த ரஜினிகாந்த் நல்லவராகவும் நடித்தனர்.
இந்த மாற்றம் நன்றாக ‘கிளிக்’ ஆகியது. மாறுபட்ட வேடங்களையும் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். சிவகுமாரால் கைவிடப்பட்ட சுமித்ராவுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும் நல்லவராக அவர் நடித்ததை ரசிகர்கள் வரவேற்றனர்.
ரஜினி பாடுவதுபோல அமைந்த ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள! ஒரு ராணியும் இல்லை வாழ! என்ற பாடல், பெரிய ஹிட் ஆகியது.
2.9.1977 ல் வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப் படத்துக்கு, தமிழக அரசு ரூ. 1 இலட்சம் மானியம் வழங்கியது.

கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத் தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா

தீபாவளி பாடல்
நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடு பொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது காலம். எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம்.
வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன. முன் எப்போதையும் விட தற்போது, செய்யும் வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க, ஒரு நாளாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன. சுற்றுச் சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிக நல்ல விசயம். ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது. பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள்.
யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை. உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயலவேண்டும்.
பட்டாசின் தீமைகள் குறித்துப் பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் முடிந்தவரை பட்டாசை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம்.
எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம். பண்டிகைகள் காரணமாக வித விதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை. காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை.
காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக்கொண்டாடுவோம்.
தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன்.
எ.எம். ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாண பரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னைக் கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட’ பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது. இப்பாடலை ஜிக்கி பாடியுள்ளார்.

மகனை களமிறக்கும் வடிவேலு.

ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை களமிறக்க இருக்கிறார் வடிவேலு.
என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வடிவேலு. இவர், வின்னா, சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் கொமெடியில் முத்திரை பதித்தவர். இன்று தமிழகத்தில் தனக்கென பெரிய ரசிகர்களை கொண்ட வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா, அழகப்பன் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். இதற்கான தயாரிப்பாளரும் தயாராகிவிட்டார்.
எனவே வடிவேலு தனது மகனை அறிமுகப்படுத்தும் புதிய படத்தின் அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

வாலிபர்களை மயக்க ஹன்சிகா வசியம்

ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளங்களில் ஆண் வாடையே பிடிக்காதவர் போன்று யாருமே இல்லாத இடமாக பார்த்து அமர்ந்திருப்பார் ஹன்சிகா.
அதனால் ரொம்ப ஆட்ச்சாரமான பொண்ணா இருக்கும் போலிருக்கு என்று நடிகர்கள் அவரை விட்டு விலகியே நின்றனர். அதையடுத்து, அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்துவிட்டதால், அடுத்தடுத்து நடிகையை சீண்டுவாரே இல்லை.
அப்போதுதான், சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம், ஆனால் தோல்வியால் நாம் சறுக்கி விழும் நேரத்தில் தாங்கிப்பிடிக்க யாராவது நல்ல ஹீரோக்கள் அருகில் இருந்தால் தப்பித்து விடுவோம் என்று சில அனுபவசாலி நடிகைகள் ஹன்சிகாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதோடு சினிமா உலகின் சீக்ரெட்டுகளையும் ஓதியிருக்கின்றனர்.
அதன் பிறகுதான் அவர்கள் சொன்ன சீக்ரெட் மந்திரங்களை மூளையில் போட்டு ஊற வைத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் ஹன்சிகா. அதனால், அதுவரை தாமரை இலையின் தண்ணீராக இருந்தவர் பின்னர் நடிகர்களிடம் சகஜமாக பழகத் தொடங்கியிருக்கிறார்.
ஹன்சிகா இப்போது ஜெட் வேகத்தில் சினிமாவில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் வெற்றி பெற்றாலும், தற்போதைக்கு நடிகையை தாங்கிப் பிடிப்பதென்னவோ வாட்டசாட்டமான சில வயசு நடிகர்கள்தான். இப்படி இளவட்ட நடிகர்களை அம்மணி மொத்த குத்தகை எடுத்துவிட்டதால் அடுத்தபடியாக உள்ள சில நடிகைகளால் மேற்படி நடிகர்களை எட்டிப்பிடிக்கவே முடியவில்லையாம்.
அந்த அளவுக்கு அவர்களின் பார்வை அக்கம் பக்கம் திரும்பாத அளவுக்கு வசியம் பண்ணி வைத்திருக்கிறாராம் நடிகை.

தீபிகாவுக்கு லுங்கி அணிவித்த ஷாருக்

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனின் கொஸ்ட்யூம் ஒன்று, மும்பை வட்டாரத்தைக் கலக்கி வருகிறது. அதுவேறு ஒன்றுமில்லை. லுங்கியும், சட்டையும் தான்.
தமிழ் சினிமாவில் பொதுவாக காட்சியில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏற்றிக் கட்டி லுங்கி மற்றும் கழுத்தில் கர்ச்சீப் சகிதம், சுவிட்சர்லாந்தில் ஒரு பாட்டு வைப்பார்கள். அப்படித்தான் விஜய் படத்தில் என்னோட லைலா பாட்டை செட் செய்து பட்டையைக் கிளப்பினார்கள்.
அதே பாணியில், ஷாருக்கானும் ஒரு படத்தில் தீபிகாவை வித்தியாசமாக காட்டியுள்ளார். அந்த காட்சியும் இப்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டதாம். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பொலிவுட் படத்தில்தான் இந்தக் களேபரம், அது என்ன என்று பார்ப்போமா....?
இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் லுங்கி, சட்டையில் படு ரவுசாக காட்சி தருகிறார் தீபிகா. அதேபோல் ஷாருக்கானும் வேட்டி, சட்டையில் கலங்கடிக்கிறார். கூடவே டான்ஸர்களும் சுத்தமான தமிழ் முகங்களுடன் காட்சி அளிக்கின்றனர்.
இது குறித்து தீபிகா கூறுகையில், உண்மையில் இந்த கொஸ்ட்யூமை செலக்ட் செய்தது ஷாருக்கானும், டைரக்டர் ரோஹித் ஷெட்டியும் தான். ஷாருக்கான், லுங்கியை எடுத்து ஷெட்டியிடம் கொடுத்து தீபிகாவுக்கு இதை அணிவித்தால் வித்தியாசமாக இருக்குமே என்றார். அதை ஷெட்டியும் ஏற்றார். அதேபோல் தனது சட்டையையும் கொடுத்தார் ஷாருக். நான் போட்டுள்ள கூலிங் கிளாஸ் மட்டும் தான் என்னுடையது.
தீபிகாவுக்கு பெரும் ஏற்றம் கொடுத்த படம் ஓம் சாந்தி ஓம். அதுதான் அவரது முதல் படமும் கூட. அப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நம்ம ஊர் சகலகலா நடிகர் டெல்லி கணேஷ¤ம் நடிக்கிறாராம்.
பொலிவுட் வாழ்க்கை குறித்து தீபிகா கூறுகையில், கடுமையாக உழைத்தால் பலன் கிடைக்கும், இது எனது அனுபவம். அடுத்தடுத்து எனது படங்கள் இந்த ஆண்டு வரவுள்ளன. சென்னை எக்ஸ்பிரஸ் வருகிறது.
தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள கோச்சடையான் வருகிறது என்றார் புன்னகையுடன். சல்மான் கானுடன் அவரது கிக் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிaர்களாமே என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை. அது தவறான தகவல் என்று மறுத்தார் தீபிகா. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சிப் பிரியாணியும் உண்டாம்.
அது பிரியாமணியின் குத்துப் பாட்டு, ஷாருக்கானே கூப்பிட்டு பிரியாமணியை குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுக் கொண்டாராம் இதனால் சந்தோஷமாக ஒத்துக்கொண் டாராம் பிரியாமணி. முதலில் நயண்தாராவைத்தான் இதற்காக நாடியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிடவே பிரியாமணியைப் பிடித்தனராம்.

உனக்கு 20 எனக்கு 40

இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்குமான காதலை சொல்லும் படமாக உருவாகிவருகிறது. ‘உனக்கு 20 எனக்கு 40’ அக்ஷய என்பவரே கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார்.
நாயகியாக ஷாலனி, அம்ருதா என்ற இருவர் நடிக்கிறார்கள். தன் தோழி வீட்டுக்கு அடிக்கடிவரும் ஹீரோயின் தோழியின் தந்தை மீது காதல்கொள்கிறாராம். தோழியின் சகோதரனும் ஹீரோயினை காதலிக்கிறாராம்.
ஹீரோயின் அப்பாவுக்கு கிடைத்தாரா, மகனுக்கு கிடைத்தாரா என்பதுதான் கதையாம். பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம். ‘இது நிறைய இடத்தில் நடக்கிற விஷம்தான்.
பள்ளிக்கூட மாணவனை ஆசிரியை காதலிக்கவில்லையா? டியூசனுக்கு வரும் மாணவி ஆசிரியரைக் காதலிக்கவில்லையா, அதைத்தான் படத்தில் சொல்கிறோம்.
இப்படி முறைகேடான உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்கிறோம்’ என்கிறார் இயக்குனர் கே. பி. எஸ். அக்ஷய்.

Wednesday, February 6, 2013

ரஜனியின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்

ரஜனியின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்

புவனா ஒரு கேள்விக் குறி
ரஜினிகாந்தின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படத்தின் இயக்குனர் எஸ். பி. முத்துராமனிடம் புவனா ஒரு கேள்விக்குறி தொடர்பாக பேட்டி கண்டபோது,
ரஜினிகாந்தை நல்லவராக நடிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? என் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’
வில்லன் வேடத்திலும், ஸ்டைல் நடிப்பிலும் அவர் ஏற்கனவே முத்திரை பதித்திருந்தார் அவரை, புதுமையான வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்.
இந்தப் படத்தில் 2 கதாநாயகர்கள் அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமாரை கெட்டவராகவும், கெட்டவராகவே நடித்து வந்த ரஜினிகாந்தை நல்லவராகவும் நடிக்க வைக்கத் தீர்மானித்தோம்.
இதுபற்றி அறிந்ததும், ‘ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஏற்பார்களா?’ என்று சிவகுமார் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிறகு அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்தார்.
புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ரஜினிக்கு ஏக மகிழ்ச்சி அற்புதமாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார். இந்தப் படம் வெளியாகும் வரை, சிறந்த வில்லனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் மட்டுமே ரஜினியை ரசிகர்கள் நினைத்தார்கள்.
அவர் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிய படம், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ இப்படம், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு எஸ். பி. முத்துராமன் கூறினார்.

பிரபு-குஷ்பு மனதில் காதலை விதைத்தது யார்?

பிரபு – குஷ்பு ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாவத்தைச் செய்தவர்கள் சாட்சாத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான். அதில் சந்தேகமில்லை.
பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் குஷ்புவும் திருமண வைபவமொன்றின் போது....
பிரபு – குஷ்புக்கே தோன்றியிருக்காத ஒரு எண்ணத்தை “காதல் இருக்கா.....? இருக்கோ.....? இருக்காம்ல்ல....? என்ன சொல்ல மாட்டேங்குaங்க?” என்றெல்லாம் தினம்தோறும் அந்த எண்ணத்தை அவர்களது மனதில் விதைத்து திருமணம் வரையிலும் கொண்டு போய்ச் சேர்த்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது தமிழ்ச் சினிமா பத்திரிகை உலகம். போதாக்குறைக்கு இந்த இருவருக்குமே ஒருவரே பி.ஆர்.ஓ. வாகவும் இருந்ததினால் நட்பு காதலாகி, கசிந்து திருமணத்தில் முடிய வேண்டிய கட்டாயம்!
அதுவரையிலும் ‘அன்னை இல்ல’த்தின் அடுப்படி வரையிலும் உரிமையுடன் சென்று தானே எடுத்துப்போட்டு சாப்பிட்டு வரும் அளவுக்கு பழக்கமாகி இருந்த குஷ்புவை, திரும்பவும் அந்த வீட்டுக்குள் கொஞ்ச காலம் நுழையாதபடிக்குக் கொண்டு சென்றது அந்த மண விவகாரம். நடிகர் திலகத்திற்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மூன்று மாதத்தில் இந்த ஜோடி பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.
அந்த நேரத்தில் பிரிவது என்று இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பாராட்டுக்குரியது. ஒரு திருமணத்தால் குடும்பமே பிரியக்கூடிய அளவுக்கு போகுமென்றால் பத்துப் பேரின் சந்தோஷத்திற்காக இருவர் துயரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்பதால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்கள்.
பத்திரிகைகளுக்கு இதுவும் ஒரு பரபரப்புச் செய்திதான். மஞ்சள் குளித்தன பத்திரிகைகள்! ஆனாலும் ரசிகர்களுக்கு மனம்கொள்ளா வருத்தம்தான்....! அவர்களுக்குப் பிடித்த ஜோடியல்லவா...!?



ரஜனிகாந்தின் பத்மினி

படம்: பண்ணையாரும் பத்மினியும்
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமாகி, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களின் மூலம் பிரபலமானவர். விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
யார் அந்த பத்மினி?
இந்தப் படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் புதுமையான முறையில் நடந்தது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலா பேசும்போது “பண்ணையாரும், பத்மினியும் என்றால், அது காதல் கதையா, கள்ளக்காதல் கதையா? பண்ணையார் யார், பத்மினி யார்? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். இது ஒரு நகைச்சுவை படம். பண்ணையாராக ஜெயப் பிரகாஷ் நடிக்கிறார். அப்படியானால் பத்மினி யார்? என்று புதிர் போட்டார்.
பிறகு “அந்த பத்மினியை பார்க்கிaர்களா? என்று அவர் கேட்டதும், பின்னால் இருந்த திரை விலகியது. அங்கே, 1970களில் பிரபலமாக இருந்த ‘பிரிமியர் பத்மினி’ என்ற பியட் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
“இதுதான் பத்மினி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜனிகாந்த் முதன் முதலாக வாங்கிய கார் இதுதான். 5004 என்ற எண் உள்ள அந்த காரை அவர் இப்போதும் வீட்டில் நிறுத்தி வைத்து இருக்கிறார். ‘படிக்காதவன்’ படத்திலும் இதே காரைதான் அவர் பயன்படுத்தினார். படத்தில் அந்த கார் பல சாகசங்கள் புரியும். அதுபோல் இந்த காரும் படத்தில் பல சாகசங்கள் செய்ய இருக்கிறது’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலா விளக்கம் அளித்தார்.

ஸ்ருதி Busy

அப்பா கமல் ‘விஸ்வரூபம்’ எடுத்துவிட்டு படும் வேதனைகளை சொலிலமாளாவிட்டாலும், அவரின் மகள் ஸ்ருதி இந்த ஆண்டு நிற்பதற்கு நேரமில்லாமல் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பறந்து பறந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ‘வாய்ப்புக்கள் வரும் போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிலும் ஒன்றிரண்டு வெற்றிப் படங்கள் அமைந்துவிட்டால் முதல் வரிசைப் பட்டியலில் நானும் இடம் பெற்றுவிடுவேன் என்கிறார்.
முக்கியமாக ரவிதேஜா இயக்கத்தில் பலுபு என்ற படத்தையும், பிரபுதேவா ஏற்கனவே தெலுங்கில் எடுத்த ராமய்யா வஸ்தாவய்யா மீண்டும் இந்தியில் எடுக்கும் படத்தையும் மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. இதுவரை தான் நடிக்காத காமெடி, ஆக்ஷன் கலந்த கதாபாத்திரத்தில் ‘பலுபு’ படத்தில் நடிப்பதால் அது புது அனுபவமாக இருக்குமாம்.

என்னை ரசிக்கட்டும - இனியா

‘என்னை ரசிக்கட்டும்’ இப்படி வேறு எந்த நடிகை சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ‘வாகை சூடவா’ படத்தில் அழகாக கண்ணியமாக நடித்து ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்கள் மனதிலும் இடம் பிடித்த இனியாதான்இப்படிச் சொல்லியிருக்கிறார்.
காரணம், இவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் கண்பேசும் வார்த்தைகள் இதில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறார்.
‘சூட்டிங்கிங் மானிட்டரில் பார்த்த போது ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய திரையில் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் கூடுதலாக கிளாமர் காட்டி விட்டோமோ என்று தோன்றியது.
இருந்தாலும் பரவாயில்லை என் ரசிகர்களுக்கு நான் படைக்கும் கிளாமர் விருந்தாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இன்னொன்று, என்னாலும் கிளாமர் காட்டமுடியும் என்பதை சினிமா உலகினருக்கு சொன்ன மாதிரியாகவும் இருக்கட்டும் என்கிறார் தைரியமாக இனியா.

கடலில் காணாமல் போன நடிகை லட்சுமி மஞ்சு

சூப்பர் ஸ்டாரின் நண்பரும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான மோகன்பாபுவின் மகள் லுட்சுமி மஞ்சு இவர் நடிகை மட்டுமில்லை. தயாரிப்பாளரும் ஆவார். தற்போது தமிழ் தெலுங்கில் மறந்தேன் மன்னித்தேன். தலைவன் வருகிறான் படங்களை தயாரித்து வருகிறார்.
கடல் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் மணிரத்னம். அவர் படத்தில் நடிக்கக்கொடுத்து வைத்திருக்கணுமே என்று லட்சுமியும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
படத்தில் விலை மாது கேரக்டர் அதே நேரத்தில் அர்ஜுனின் ஆசை நாயகி, அவரின் எதிரியான அரவிந்தசா மியை அர்ஜுனுக்காக பழிசு மத்துவது போன்ற கேரக்டர் ஆஹா பெரிய கேரக்டராக இருக்கே இதில் நடித்தால் தமிழில் பெரிய இடத்துக்கு வந்து விடலாம் என்று நடித்தார். லட்சுமி சுமார் 10 காட்சிகளும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினார் மணிரத்னம்.
தெலுங்கு, தமிழில் கடந்த 1ம் திகதி படம் வெளிவந்தது. ஓடியபோய் ஆர்வத்துடன் பார்த்தார் லட்சுமி. அர்ஜுனுடன் இவர் நடித்த பாடல் காட்சியைக் காணவில்லை. அதுமட்டுமில்லை. அர்ஜுனும் இவரும் இணைந்து நடித்த பல காட்சிகள்படத்தில் இல்லை. அரவிந்தசாமி இவரை சந்திப்பது குண்டு காயம் பட்டு அர்ஜுனை பார்த்து இவர் அழுவது.
அர்ஜுன் தப்பிய பிறகு அவரை பொதுமக்கள் அரவிந்தசாமியுடன் தவறான உறவு இருப்பதாக நினைத்த இழுத்துக் கொண்டு செல்வது, தேவாலயத்தில் அறவிந்தசாமி மீது பலிபோடுவது என்ற நான்கு காட்சிகள் மட்டுமே இருந்தது. இதைப் பார்த்த லட்சுமி மஞ்சு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கெனவே படத்தின் விளம்பரங்களை பரமோஷன்களில் தன்னை புறக்கணிப்பதில் வருத்தத்தில் இருந்த லட்சுமிக்கு இது மேலும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
இதனை தன் டுவிட்டரில் லட்சுமி பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடல் படம் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எனது காட்சிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தன. நான் நடித்த பாடல் காட்சி இல்லை. மணிசார் எது செய்தாலும் அதற்கு நல்ல காரணம் இருக்கும் இதற்கும் அப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் மீது இன்னும் நல்ல மதிப்பு இருக்கிறது. பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ் டைம்’ என்று டுவிட் செய்திருக்கிறார்.