Friday, June 9, 2017



ஆவேசத்தில் எஸ்.ஜானகி.

 ரேடியோ பண்பலை நிகழ்ச்சியில், தன் குரலில் பேசிய நபரால் கடும் கோபத்தில் இருக்கிறார், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. ''இது, மிகப்பெரிய மோசடி வேலை. இதனால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்' என ஆவேசப்பட்டுள்ளார்.

ஜூன் 2 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள். அன்றைய தினம், பிரபல ரேடியோ பண்பலையில், ரசிகர்கள் பங்கேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாடகி எஸ்.ஜானகியே போன் செய்து, இளையராஜாவைப் புகழ்வது போலவும், ஒரு பாடலைப் பாடுவது போலவும் ஒலிபரப்பானது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அவரிடம் பேசியபோது, ''அப்படி நான் எதுவும் பேசவோ, பாடவோ இல்லை. ஒலிபரப்பானது என் குரலே இல்லை'' எனக் கொந்தளித்த எஸ்.ஜானகியைக் கூலாக்கி பேச வைத்தோம்.
அந்தத் தனியார் பண்பலையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் நான் பேசுவதுபோல ஒலிபரப்பான ஆடியோவை என் ரசிகர்கள் பலரும் எனக்கு அனுப்பினார்கள். 'இது உங்கள் குரல் போல் இல்லையே' என்று சொல்லியிருந்தார்கள். 'நான் எதுவும் பேசவில்லையே. பேட்டியும் கொடுக்கவில்லையே' என்ற குழப்பத்துடன் அந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இளையராஜா பிறந்தநாள் தொடர்பான அந்நிகழ்ச்சியில் என் குரலில் வேறு யாரோ பேசியிருக்கிறார். அதுவும் என் கருத்துகளுக்கு மாறான கருத்தில் அவர் பேசியிருப்பது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே, சம்பந்தப்பட்ட பண்பலை நிறுவனத்துக்குப் போன்செய்து விசாரித்தேன். 'பாடகி ஜானகி பேசுகிறேன் என்றதாலும், உங்கள் குரலைப்போலவே இருந்ததாலும் நாங்களும் ஆரம்பத்தில் நம்பிவிட்டோம். கொஞ்ச நேரம் கழித்துதான் அந்தக் குரலில் சில மாற்றத்தைக் கவனித்து சந்தேகப்பட்டோம். ஆனால், நேரலை நிகழ்ச்சி என்பதால், நடுவில் குறுக்கிட முடியவில்லை. பிறகு, அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்தபோதுதான், பேசியது ஓர் ஆண் என்பது தெரியவந்தது. அவரைக் கடுமையாக எச்சரித்தோம்' என்று சொன்னதோடு நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கேட்டார்கள்.

ஆனால், நடந்தது ரசிகர்களுக்குத் தெரியாதல்லவா... அந்த நிகழ்ச்சியைக் கேட்ட ரசிகர்களும், இனி அந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் கேட்கும் ரசிகர்களும், உண்மையாகவே நான் பேசியிருப்பதாகவே நினைப்பார்கள் அல்லவா? ஒருவர் குரலில் பேசி மற்றவர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய மோசடி வேலை. ஓர் ஆண், பெண் குரலில் பேசி ஏமாற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல். நடந்த இச்செயலால் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன். இனியும் இதுமாதிரியான நிகழ்வுகள் தொடரத்தானே செய்யும். சம்பந்தப்பட்ட நபர்மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் அறியாமையாலும் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால், அவர் செய்த தவறை மன்னித்துவிட்டேன். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். ஒருவரைப் போலவே பேசி ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய இதுபோன்ற செயல்பாடுகளில் என்னுடைய ரசிகர்கள் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி யாராவது என் குரலில் பேசி ஏமாற்றினால், நிச்சயமாக போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்" என ஆவேசமாக முடித்தார் எஸ்.ஜானகி.


வசந்த முல்லையென அசைந்தாடிய தாமரைக்கண்ணாள்ராஜசுலோசனா

‘அமுதும் தேனும் எதற்கென்று வினவ வைத்து, வசந்த முல்லை போலே அசைந்தாடிய வெண்புறாவென ரசிக மனங்களை மயங்க வைத்த நாயகியான அந்தத் தாமரைக் கண்ணாளை மறந்துவிட இயலுமா?நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளில், ஆனால் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே 1934ல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான பெஜவாடாவில் (இன்றைய ஆந்திரா, விஜயவாடா) பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு -தேவகி தம்பதியர்க்கு மகளாகப் பிறந்தவர் ராஜீவ லோசனா. இதையே அழகு தமிழில் சொன்னால் தாமரைக்கண்ணாள்.

குழந்தைகளின் வாயில் நுழையாத அளவுக்கு வடமொழியில் பெயர் வைத்தால் என்னவாகும் என்பதற்கு இந்தப் பெயரே நல்லதொரு உதாரணம். ராஜீவ லோசனா என்ற பெயர் கொண்ட ஐந்து வயதுப் பெண் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது, தலைமையாசிரியர் பெயரென்ன என்று கேட்க, அந்தக் குழந்தை மழலை மொழியில் ராஜீவ லோசனா என்பதைக் குழறலாகச் சொல்ல அது ராஜசுலோசனா என்று பிறர் காதுகளில் ஒலித்தது.பள்ளிப் பதிவேட்டில் தொடங்கி அந்தப் பெண் குழந்தை வளர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்துத் தன் வாழ்நாளின் இறுதி வரை அதே பெயராலேயே புகழ் பெற்றார் ராஜசுலோசனா. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டு, ஆந்திரத்தில் பிறந்தவர் என்றாலும் வளர்ந்தது, படித்தது, நடிப்புத்தொழில், வாழ்க்கை என எல்லாமே சென்னை என்றானது.

அப்பாவுக்குச் சித்தூர் சொந்த ஊர். முன்னதாக தாத்தா காலத்திலேயே சென்னை மாநகரில் குடியேறியவர்கள் அவர்கள். வெள்ளைக்காரன் காலத்தில் மதராஸ் சதர்ன் மராட்டா ரயில்வேயாக இருந்தபோது, ஜெனரல் மானேஜரின் அந்தரங்கச் செயலாளராக, அப்பா பணியாற்றியது சென்னையில் தான். (டி.ஆர். ராமச்சந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘சபாபதி’ படத்தில் ரயில் என்ஜினில் ‘S & S.M. Railway’ என்று எழுதப்பட்டிருக்கும்.) ஒரு நிறைவான நடுத்தரக் குடும்பச்சூழலில் பிறந்து வளர்ந்து 50களில் நடிக்க வந்தவர் ராஜசுலோசனா. அப்போதைய நடிகைகளிலேயே இனிமையான குரலும் மென்மையாகப் பேசும் திறனும் கொண்டவர். அவர் வசனம் பேசும் பாங்கு அதை நன்கு வெளிப்படுத்தும். அபாரமான நட்டியத்திறன், சிரிக்கும்போதே கண்களும் சேர்ந்தே சிரிக்கும் அழகுக்குச் சொந்தக்காரர்.

கலையின் மீதான ஆர்வத்தின் வெளிப்பாடு
அவருடைய அம்மாவுக்கு இசை, நடனம் போன்ற கலைகளில் நல்ல ஆர்வம் இருந்ததால், இயல்பாகவே அது மகளுக்கும் தொற்றியது. திரைப்படங்களில் திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா பத்மினி இருவரும் ஆடுவதைப் பார்த்து, தானும் அவர்களைப் போல் நடனமாட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டது. மகளின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாத தாய் தந்தையர் அமைவது ஒரு வரம். அந்த வரம் குழந்தைக்கு தடையின்றிக் கிடைத்தது. திருவல்லிக்கேணியில் அமைந்திருந்த சரஸ்வதி கான நிலையம், நடனத்தின் ஆரம்ப கட்டப் பாடங்களை அவருக்குச் சொல்லித் தந்தது.

ஆரம்பகட்ட குருவாக இருந்து பயிற்றுவித்தவர் லலிதாம்மா; பின்னர் குருவாக வாய்த்தவர் கே.என்.தண்டபாணி பிள்ளை. பத்மினி, வைஜெயந்திமாலா என திறமை மிக்க நடன மணிகளை உருவாக்கியவர். பரதம் பயின்றதுடன் ஆர்வம் குறைந்து விடாமல் குச்சுப்புடி, கதக்களி என அந்தந்த கலை வல்லுநர்களிடம் பயின்றார். இவ்வளவு நடன வகைகளையும் கற்றுத் தேறிய பின், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? நல்ல இசைத்திறன் வாய்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதியரசருமான டி.எல்.வெங்கட்ராமய்யர் தலைமை ஏற்க அரங்கேற்றம் அமோகமாக நடந்தது.

அடுத்தகட்டம் அரங்கேற்றம்
அடுத்த முயற்சி எதிர்பாராத நேரத்தில் அமைந்தது. ஆம், எம்.சி.சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்தக் குழுவில் ஆட வேண்டிய ஒரு நடனப்பெண் அன்று வர முடியாத சூழல். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கோ தர்மசங்கடம். அப்போதுதான் குழுவின் தலைமை நடனப்பெண் லலிதாவுக்கு, தன்னுடன் நடனம் கற்றுக் கொண்ட தோழி ராஜசுலோசனாவின் நினைவு வந்தது. நிலைமையைச் சொல்லி அவரை அழைத்து வரவும் ஏற்பாடுகளை செய்தார்.தோழிக்கு உதவியாக ராஜசுலோசனாவும் வந்து சேர்ந்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணன் மற்றும் பாம்பாட்டி நடனங்கள் ஆடி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார். தோழி லலிதாவும் மனம் மகிழ்ந்தார். அந்தத் தோழியும் பின்னாட்களில் திரைப்பட நடிகையாக மாறி தாம்பரம் லலிதா என அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு திரைப்பட, நாடக இயக்குநரின் கண்களில் தப்பாமல் சிக்கினார் ராஜசுலோசனா. அது அவரைத் திரையுலகை நோக்கி நகர்த்திச் சென்றது.

கன்னடத்தின் வழியாக அறிமுகம்
நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் எச்.எல்.என்.சிம்ஹாவின் கண்களுக்கு ராஜசுலோசனா அழகானதொரு பெண்ணாக மட்டு மல்லாமல், எதிர்காலத்தில் திறமை வாய்ந்த ஒரு நடிகையாகவும் வருவார் என்று தோன்றியது. நடிப்பதற்காக வீட்டாரை அணுகிக் கேட்டபோது, பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தாயாரின் ஆதரவு கொஞ்சம் பலமாக இருந்ததால், அவற்றை எல்லாம் சமாளித்து கன்னடத்தில் ‘குணசாகரி’ திரைப்படத்தில் ஒரு சிறு வேடமளித்தார். 1953ல் வெளியான இப்படம் பிரமாதமாக ஓடியது. தமிழில் ‘சத்தியசோதனை’ என மொழிமாற்றமும் செய்யப்பட்டது. சிறு வேடம் என்றாலும் ஆரம்பமே நல்ல தொடக்கம்.

தமிழின் சறுக்கலும் அங்கீகாரமும்
1952ல் சிவாஜியின் முதல் படமாக ‘பராசக்தி’ வெளியானபோது, அதில் ‘மங்களகரமான’ தங்கை கல்யாணி வேடம் ஏற்றிருக்க வேண்டியவர் ராஜசுலோசனா. ஆனால், துரதிர்ஷ்டம் அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. திருமணத்துக்குப் பின் அவர் கர்ப்பவதியாக இருந்ததால், அந்த வாய்ப்பு அவரைவிட்டு விலகி, ஸ்ரீரஞ்சனியிடம் தஞ்சமடைந்தது. அதனால் நேரடி தமிழ்ப் படமாகவும் தமிழின் முதல் படமாகவும் அமைந்தது ‘நால்வர்’. அடுத்தடுத்து 1954ல் வெளியான ‘மாங்கல்யம்’, ‘பெண்ணரசி’ இம்மூன்று படங்களுமே ஏ.பி.நாகராஜனின் படங்கள். இவை ராஜசுலோசனாவை தமிழகத்தில் பரவலாக அறிமுகம் செய்தன என்றால் மிகையில்லை.

வசீகரங்களின் ஒன்றிணைவு
இஸ்லாமியப் பின்னணியில், கர்ண பரம்பரைக் கதையாகவும் அமைந்து சக்கை போடு போட்ட படம் ‘குலேபகாவலி’. இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு மூன்று நாயகிகள். தன் வசீகரிக்கும் சிரிப்பாலும் சொக்க வைக்கும் பார்வையாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி இருக்க, அவருடன் மற்றோர் காந்தக் கண்ணழகியான ஜி.வரலட்சுமியும் கைகோர்க்க, மூன்றாவதாக வந்து இணைந்தவர் ராஜசுலோசனா.மூன்று நாயகி களுக்கும் ஒவ்வொரு சிறப்பான பாடல் காட்சி இப்படத்தில் உண்டு. அந்த வகையில் ‘ஆசையும் உன் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா….’ என்று ஆதிவாசிப் பெண்ணாக, கள் குடித்து போதையில் மயங்கிய கண்களுடனும் வார்த்தைக்கு வார்த்தை விக்கலுடனும் அந்தப் பாடல் முழுதும் சாகசமும் திகிலும் கலந்த கலவையாக அமைந்திருக்கும்.மதுவின் போதையில் தள்ளாடுவது போல் தங்கள் கூட்டத்தையும் தலைவனையும் நம்ப வைத்து, தண்டனை நிறைவேற காத்திருக்கும் கதாநாயகனையும் அவனைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும் சாகசக்காரியாக ரசிகர்களை, அதிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களைக் கொள்ளை கொண்டார்.

குத்தாலம் அருவியை நினைத்தாலே சில்லிடும்
‘நல்லவன் வாழ்வான்’ சி.என்.அண்ணாதுரையின் திரைக்கதை வசனத்தில் உருவான படம். பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் உலா வரும் போலி வேடதாரிகளை தோலுரித்துத் தொங்கவிட்டது. எம்.ஜி.ஆர், ராஜசுலோசனா இணை அனைவரையும் மயங்க வைத்தது. ஆண் வேடமிட்டுக் கதாநாயகனின் வீட்டுக்குள் வந்து தங்கியிருக்கும் காட்சிகளில் இளமை துள்ளும். கதாநாயகன் குளிக்கக் கிணற்றில் தண்ணீர் இறைத்து உதவுவது என ராஜசுலோசனா அடிக்கும் கூத்துகள் ரசிக்க வைப்பவை.

இளமையின் முறுக்கும் குறும்புத்தனமும் கொண்ட இளம் காதலர்கள் இயல்பாக தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்வதும், ஆடிப் பாடி ரசிகர்களை வசீகரிப்பதும் மாறாத இளமைக் கொண்டாட்டம். வழக்கமாக மரங்களைச் சுற்றி டூயட் பாடுவதும், செயற்கைப் பூங்காக்களில் கட்டியணைத்து காதலிப்பதுமான பாடல் காட்சியாக அல்லாமல், முற்றிலும் மாறுபட்டு வீடுகளுக்குள் இளம் தம்பதிகளுக்குள் இயல்பாக நிகழும் கும்மாளமாகவே இக்காட்சியை நினைக்கவும் ரசிக்கவும் முடியும். ‘குத்தாலம் அருவியிலே குளிச்சது போலிருக்குதா?’ பாடலை நினைத்தாலே கொளுத்தும் கோடையும் சில்லிட்டுப் போகும். அத்தனை உற்சாகமான பாடலும் அசத்தல் ஆட்டமும் மறக்கக் கூடியதல்ல.

தைப்பொங்கலின் சிறப்பும் உடன்பிறப்பின் நேசமும்
மிகச் சரியாக தைப்பொங்கல் நாளன்று 1959ல் வெளியாகி ஓஹோவென்று ஓடிய படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. அண்ணன் தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக எஸ்.எஸ்.ஆரும் ராஜசுலோசனாவும் அன்பும் அன்யோன்யமும் கொண்ட உடன் பிறப்புகளாக ஆரம்பக் காட்சிகளிலேயே தோன்றுவார்கள். ‘தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்’ பொங்கலின் சிறப்பை தனித்தன்மையைப் பட்டியலிடுவதுடன் கிராமத்து மண் மணம் கமழும் ஆடல் பாடலும் என்றுமே மறக்கவியலாதவை. இன்றைய விவசாயிகளின் நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க முடியாது.அதேபோல அந்த மாட்டுவண்டிப் பயணப் பாடல் ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா…’ அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் வாரிவிட்டுக் கொள்வதும், பின் அசடு வழிய சுதாரித்துக் கொள்வதுமாக ரசித்துச் சிரிக்க வைப்பார்கள். சீர்காழியின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் ‘அமுதும் தேனும் எதற்கு?’ பாடல் பற்றி சொல்ல வார்த்தைகள்தான் ஏது? கம்பீரமும் இசையின் நுட்பமும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டம் அது.

பல மொழிகளில் பல வடிவம் எடுத்த கைதிகள்
‘கைதி நம்பர் 911’, இது 1959ல் இந்தியில் வெளியாகி ஓட்டமாக ஓடிய படம், தியேட்டரை விட்டு அல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் இதை அப்படியே தமிழில் எடுத்தபோது எண்ணுக்கு மாற்றாக ‘கைதி கண்ணாயிரம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இதில் ஜெயிலரின் குழந்தைக்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நடித்தார் ராஜசுலோசனா. அவர் அந்தக் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்த பாடல் துணிச்சலையும் தன்னம்பிக்கை யையும் ஊட்டக்கூடியது.படத்தின் உச்சக்கட்ட காட்சியிலும் அப்பாடல் மறுபடியும் இடம் பெறும். ராஜசுலோசனா இளம் சந்நியாசினி வேடத்தில் கையில் தம்புராவோடு சிறுவனைக் காப்பாற்ற வீதியில் இறங்குவார். கள்வர்களால் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் சிறுவன், ‘புயலைக் கண்டு நடுங்க மாட்டேன், முயன்று நானே வெற்றி கொள்வேன்.’ என்று டீச்சர் சொல்லிக் கொடுத்ததைத் தன் வாழ்க்கையின் இக்கட்டான நேரத்தில் பயன்படுத்தி, தான் இருக்கும் இடத்தையும் வெளிப்படுத்துவான்.

ஆனந்தக்கண்ணீர் கன்னங்களில் வழிய, டீச்சர்’ ‘சபாஷ்’ என உணர்ச்சி மேலீட்டில் பாராட்டுவார். அது பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ‘கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்’ என்ற பட்டுக்கோட்டையின் உணர்வுப்பூர்வமான பாடலும் கூட. அந்த டியூன் மட்டும் வழக்கம்போல இந்தியிலிருந்து இறக்குமதியானது.ஆம்! அசல் இந்திப் படத்தில் இடம்பெற்ற, லதா மங்கேஷ்கர் பாடிய ‘மீட்டி மீட்டி பேட்டீங்’ பாடலின் நகல் வடிவமே அப்பாடல். இந்தப் படம் தமிழில் பெற்ற வெற்றியால் அது மீண்டும் தெலுங்கில் ‘கைதி கன்னையா’ ஆனது. அதிலும் தவறாமல் ராஜசுலோசனாவே இடம் பெற்றார். மூன்று மொழிகளிலுமே பெருவெற்றி பெற்றது இந்தப் படம்.

கணவன்மார்களின் தேசிய கீதம்
படித்த, காதல் மனைவியின் உதாசீனத்தைப் பொறுக்க முடியாமல், முறையான கல்வியறிவற்ற, முரடன் என்று மனைவியால் உதாசீனப்படுத்தப்படும் கணவன் மனம் வெதும்பிப் பாடும் ‘நான் கவிஞனுமில்லை; நல்ல ரசிகனுமில்லை’ பாடல் இன்றளவும் மனைவியால் புறக்கணிக்கப்படும் கணவன்மார்களின் தேசிய கீதம். ‘படித்தால் மட்டும் போதுமா?’ என்று படித்த, பண்படாதவர்களை பார்த்துக் கேள்வி கேட்பதாகவும், படிக்காதவர்கள் அனைவரும் முட்டாள்களல்ல என்றகருத்தை ஆழமாகவும் சொல்லிய படம்.சிவாஜி கணேசனுக்கு மனைவியாக நடித்துப் பெண்களின் பெரும் கோபத்துக்கும் ஆளானார். தாயாக நடித்த எம்.வி.ராஜம்மா பேசுவதாக ஒரு வசனம் உண்டு. அது ‘என்னங்க, பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு, இன்னும் உங்க பெண்ணைப் பையனாகவே வச்சிருக்கீங்களே’ என்பார்.அப்போது ஆணைப் போல பேன்ட், ஷர்ட் அணிந்த தோற்றத்தில் காட்சியளிப்பார் ராஜசுலோசனா. ஆண் அணியும் உடைகளைப் பெண் அணிந்தாலும் அவள் ஆணாகவே பார்க்கப்படுவாள் என்ற செய்தியைச் சொல்லாமல் சொல்லியது அந்தக் காட்சி. இப்போதும் காட்சிகள் மாறவில்லை என்றே தோன்றுகிறது. ராஜசுலோசனாவின் திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க, மறக்க முடியாத ஒரு படம் அது.

நொடிதோறும் மாறும் முகபாவம்
அதன் பின் வரிசையாக ‘சாரங்கதரா’, ‘அம்பிகாபதி’, ‘வணங்காமுடி’, ‘ரங்கோன் ராதா’ என பல படங்களில் சிவாஜியுடன் நடித்தார் அதில் பலவும் ராஜாராணிப் படங்கள், ரங்கோன் ராதா, ராஜா ராணி சமூகப் படங்கள். ‘ராஜாராணி’ சமூகப் படம் என்றாலும் படத்தில் இடம்பெறும் நாடகத்தில் ராஜாவும் ராணியுமாக தோன்றினார்கள் இருவரும்.கலைஞர் கருணாநிதியின் நீளமான வசனங்களை சேரன் செங்குட்டுவன் உணர்வு ததும்பப் பேசும்போது, அவனருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருப்பாள் மனைவி. சில மணித் துளிகள் நீளும் அந்தக் காட்சியில் மனைவியாக நடித்த ராஜசுலோசனா வெறுமனே நின்று கொண்டிருக்காமல், கணவன் பேசும் வசனங்களுக்கு ஏற்ப நொடிதோறும் அவரது முகபாவம் மாறிக் கொண்டேயிருக்கும்.

மகிழ்ச்சியில் திளைத்து, துன்பத்தில் துவண்டு, கொடுமை கண்டு பொங்கி என அத்தனை பாவங்களையும் ஒரு வரி வசனம் இல்லாமல் தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை அந்தக் காட்சியில் பாவங்களின் வழியாகவே திறமையாக வெளிப்படுத்தியிருப்பார். கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளிவந்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றிருப்பார். பல சிறப்புகளைக் கொண்ட அப்படம் ஏனோ சரியாகப் போகவில்லை. எம்.ஆர்.ராதா, சந்திரபாபு போன்ற பண்பட்ட நடிகர்களுக்கு ஈடு கொடுத்து அதில் நடித்திருப்பார்.

முதன்மை இடமில்லை; தவிர்க்கப்படவுமில்லை
அனைத்து மொழிகளிலும் முதன்மைக் கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவியைப் போல ஒரு மொழியின் முதன்மையான கதாநாயகி என்ற இடத்தை மட்டும் ஏனோ அவர் பெறவில்லை. ஆனால், தவிர்க்க முடியாதவராகவும் இருந்தார். அனைத்து மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே பேசி நடித்ததும் தனிச்சிறப்பு.

நளினமான நடன அசைவுகள் அவரை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தும். நன்றாக நடனமாடிக் கொண்டிருந்தவருக்கு சோதனையாக ஒரு விபத்தில் கால் எலும்புமுறிவு ஏற்பட்டு சில காலம் ஓய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கியது ‘பாரத விலாஸ்’ திரைப்படத்தில். இன்றளவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகச் சொல்லப்படும் அப்படத்தில் கேரளத்தின் மலபார் பகுதி பிரதிநிதியாக ஜமீலா என்ற இஸ்லாமியப்பெண் வேடமேற்று நடித்திருப்பார்.

குணச்சித்திரமும் வில்லத்தனமும்
70களில் அவர் ஏற்று நடித்த படங்கள் பல குடும்பத்தைக் குலைக்கும் ‘பாதகத்தி’ வேடங்கள். அப்படித்தான் ரசிகர்களால் அவர் அறியப்பட்டார். ‘இதயக்கனி’ யின் வில்லி, லில்லி ரசிகர்கள் கையில் சிக்கியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள். அத்தனையும் அவர் நடிப்புக்குக் கிடைத்த பரிசுகள்தான்.இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘பாலாபிஷேகம்’, ‘காஞ்சி காமாட்சி’, ‘அடுக்குமல்லி’ என தன் பல படங்களில் அவரைப் பயன்படுத்திக்கொண்டார். திகில் படமென்றாலும் பிரமாதமான வெற்றியைக் கொடுத்த படம் ‘துணிவே துணை’யில் வில்லி, கொள்ளைக் கூட்டத்தலைவி. ரஜினியுடன் ‘காயத்ரி’, விஜயகாந்த்துடன் ‘சபாஷ்’, டி.ராஜேந்தருடன் ‘வேலன் காட்டிய வழி’. தமிழில் அதுவே அவருக்கு இறுதிப்படமும் கூட.

அசல் வாழ்க்கை நாயகி
ராஜசுலோசனாவுக்குத் திருமணமாகி ஷ்யாம் சுந்தர் என்ற மகன் பிறந்த பிறகு விவாகரத்து பெற்றார். பின் மீண்டும் 1963ல் இயக்குநர் சி.எஸ். ராவை திருமணம் செய்து கொண்டார். முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சி.புல்லையாவின் மகன் சி.எஸ்.ராவ். இவர் தெலுங்குப் படங்களில் நடித்திருப்பதுடன், ஏராளமான படங் களையும் சொந்தமாகத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவர்களுக்கு ஸ்ரீ, தேவி என இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். மகன் ஷ்யாம் சுந்தர், பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகள் சுசரிதாவை மணந்துள்ளார். 1961ல் ’புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்’ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கி பலருக்கும் நடனத்தைப் பயிற்றுவித்தார். இப்பள்ளி 1986ல் வெள்ளிவிழா கொண்டாடியது. இவரின் மகள் தேவி நல்ல நாட்டியக் கலைஞர். மகனும், மகள் ஸ்ரீயும் அமெரிக்காவில் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டில் சி.எஸ்.ராவ் மரணமடைந்தார். 2013ல் ராஜசுலோசனாவும் தன் 77ம் வயதில் மறைந்தார்.

(ரசிப்போம்!)

ராஜசுலோசனா நடித்த தமிழ்ப் படங்கள்

நால்வர், மாங்கல்யம், பெண்ணரசி, மலைக்கள்ளன், எல்லாம் இன்பமயம், வணங்காமுடி, ஆசை, மர்மவீரன், தை பிறந்தால் வழி பிறக்கும், ராஜாராணி, சாரங்கதரா, படித்தால் மட்டும் போதுமா?, குலேபகாவலி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், பரிசு, ரங்கோன் ராதா, கவிதா, கைதி கண்ணாயிரம், மணாளனே மங்கையின் பாக்கியம், சகோதரி, கவலை இல்லாத மனிதன், திருமால் பெருமை, பறக்கும் பாவை, பாரதவிலாஸ், பாலாபிஷேகம், காஞ்சி காமாட்சி, காயத்ரி, அடுக்குமல்லி, இதயக்கனி, துணிவே துணை, இளஞ்ஜோடிகள், சபாஷ், மனைவி சொல்லே மந்திரம், எங்க வீட்டு வேலன்.