Tuesday, July 24, 2018

ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாக…..


* *
சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
கவியரசு கண்ணதாசன்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

நேற்றுவரை யாரெனத் தெரியாத ஒருவர் மீது திடீரெனக் காதல் ஏற்படுகிறது. காதல் என்னும் மாயம் தீண்டிய உடன் இனி ஒருவர் இல்லாமல் அடுத்தவர் வாழ முடியாது என்ற அளவுக்கு நெருக்கமான உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.
‘உனக்கெனப் பிறந்தேன்’ என்ற எண்ணத்தையும் ‘அவளில்லாமல் நானில்லை’ என்னும் உணர்வையும் ஏற்படுத்தும் காதலின் அதிசயம் பல பாடல்களில் பதிவாகியிருக்கின்றன. உணர்விலும் சொற்களிலும் நெருக்கமான பாடலொன்று இது:



படம்: வாழ்க்கைப் படகு
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
பாடல்:
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
(நேற்று)


உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன?
பூமுகம் சிவந்தா போகும்
(நேற்று)


பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்தது கனவோ என்று
வாடினேன் தனியாய் நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
(நேற்று)

சாிநிகரான காதல் ஜோடி கமல்- ஸ்ரீதேவி




கமல்- ஸ்ரீதேவியின் ஜோடிப் பொருத்தம் 80-களில் ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது, கொண்டாடப்பட்டது. உண்மைக்கு சரி நிகரான காதல் ஜோடியாக இவர்களின் நடிப்பில் மென்மையும் நளினமும், வசீகரமும் வெளிப்பட்டது.
தேவிகாவுக்கு சிவாஜி போலவே ஸ்ரீதேவிக்கு முதல் சினிமா கதாநாயகனாக கமல் அமைந்ததாலோ என்னவோ இந்த ஜோடியும் நடிப்பில் அந்நியோன்யத்தை அள்ளி வழங்கியது. அதனாலேயே இந்த ஜோடியைப்பற்றி கிசுகிசுவும் கிளம்பியது . இது ஸ்ரீதேவியின் தாயாரின் காதுகளுக்கு எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த ஸ்ரீதேவி தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம், “ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார். “அப்படியெல்லாம் இல்லையம்மா” என ஸ்ரீதேவி பதில் சொல்வது வழக்கமாம். ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க ஸ்ரீதேவியின் தாயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில்... “என்ன, கமலஹாசனை கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர், உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் கமல்ஹாசனை கல்யாணம் பண்ணிக்க திட்டம்போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். ஆனால் அதற்குள் ஸ்ரீதேவி பொலிவுட் சென்று பிரபலமானார். அமமாவின் எதிர்ப்பை மீறி போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.
“27 படங்களில் நானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்தோம். அவரை மறக்கவே முடியாது. எங்களுக்குள் நிஜத்திலும் காதல் இருப்பதாக ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நானும் ஸ்ரீதேவியும் திருமணம் செய்துகொள்வோம் என சந்தேகப்பட்டார் ஸ்ரீதேவியின் தாயார்” என கமல் பின்னாளில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். சிவாஜியை தேவிகா அழைத்தது போலவே கமலை கடைசிவரை “சார்” என்றுதான் அழைத்து வநதார் ஸ்ரீதேவி.

தேவிகாவின் சிவாஜி




ரீலுக்காக ஜோடி போட்டாலும் அதில் ஓர் ரியல் தன்மை மிளிர்ந்தால், அந்த ஜோடி பொருத்தமான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வழக்கம். நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ, இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது இண்டஸ்ரியில். இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம்,

“ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார்.

“அப்படியெல்லாம் இல்லையம்மா” என தேவிகா பதில் சொல்வது வழக்கமாம்.

ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும் அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால்
தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.

மதுரை ஸ்ரீமுருகன் டாக்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை திருமணம் செய்துகொண்டார் தேவிகா. சிவாஜியை “சார்” என்று அழைத்து கடைசிவரை தன் குரு ஸ்தானத்திலேயே வைத்திருந்தார் தேவிகா.

பாட்டுக்கு பாட்டாலே நன்றி சொல்லிய பாடல்


மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பான எங்கள் தங்கம் படத்தின பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அதில் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஓன்று நான் அளவோடு ரசிப்பவன்" மற்றொன்று நான் செத்து பிழைச்சவன்டா இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிவிட்டு அடுத்த வரிக்காக யோசித்து கொண்டிருந்த வாலியின்; அருகில் வந்த கருணாநிதி என்ன பல்லவி எழுதி விட்டீர்களா என்று கேட்டார். நான் அளவோடு ரசிப்பவன் என்று முதல் வரியை சொன்னார் வாலி எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று கருணாநிதியிடம் இருந்து வந்தது இரண்டாவது வரி. எம் ஜி ஆரின் வள்ளல் தன்மையை மனதில கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடலை கடகடவென எழுதி முடித்தார் வாலி. பாடல் எம் ஜி ஆரிடம் சென்றது. பாடலின் இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்து கொடுத்த விஷயம் எம் ஜி ஆருக்கு தெரியாது.

சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை சந்தித்தார் வாலி. அவரை வரவேற்று பேசிய எம் ஜி ஆர் நான் அளவோடு ரவிப்பவன் பாட்டு பிரமாதம் அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை என்று கூறிய எம் ஜி ஆர் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். அண்ணே இந்த முத்தத்தை; நீங்க கருணாநிதிக்கு தான் கொடுக்கணும் என்று கூறிய வாலியிடம் ஏன்? ஏன்று புரியாமல் கேட்டார் எம் ஜி ஆர். விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம் ஜி ஆர்.

அதன் விளைவு அந்த படத்தில் இடம்பெற்ற நான் செத்து பிழைச்சவன்டா என்ற பாடலின் பல்லவியை எழுதி எம் ஜி ஆரிடம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம் ஜி ஆர் உயிர் பிழைத்த பிறகு வெளியான இந்த பாடல்; அவருக்கு சரியாக பொருந்தியது. திருப்தியடைந்த எம் ஜி ஆர் வாலியிடம் இந்த பாடலின் இரண்டாவது சரணத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குனனு எழுதிடுங்க என்று எம் ஜி ஆர் கூற இதையடுத்து பிறந்த வரிகள் தான ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துறும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டமிது. தனது கொடை உள்ளத்தை அளவின்றி கொடுப்பவன் என்று புகழ்ந்து கூறிய கருணாநிதியின் போர்க் குணத்திற்கு எம் ஜி ஆரின் பதில் மரியாதை

Wednesday, July 18, 2018

பாடல் எழுதிய சம்பளம் முத்துக்குமார் குடும்பத்துக்கு



தான் பாடல் எழுதியதற்கான சம்பளத்தை சிவகார்த்திகேயன் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்க கூறியிருக்கிறார்.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.


யோகிபாபு, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ஓகஸ்ட் மாதம் 10-ம் திகதி திரைக்கு வருகிறது. அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படமும் திரையிடப்பட இருக்கிறது.
‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த மூவருமே பாடல் எழுதியதற்காக சம்பளம் வாங்கவில்லை என்கிறார்கள்.
இதில் சிவகார்த்திகேயன் மட்டும் தனக்கு கொடுக்க நினைக்கும் சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்க கூறியிருக்கிறார்.. காரணம், சிவகார்த்திகேயனுக்காக முதன்முதலில் பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார். சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான ‘மெரினா’வில், மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். அதனால் தான் தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படிச் செய்திருக்கிறார் நா.முத்துக்குமார்.
‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடலில், நயன்தாரா மற்றும் யோகிபாபு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடல் வீடியோவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டு பயங்கர பிரபல்யமாகியுள்ளது.

பார் புகழும் பாடகனான பேய் ஓட்டப் பாடியவன் செந்தில்!


`எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு'' என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா. 
 


வெஸ்டர்ன், பொப், கர்நாடக சங்கீதம் என எல்லா வகையான இசையும் தமிழனின் நாட்டுப்புறக் கலைக்குத் தலைவணங்கி, சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் நாட்டுப்புறக் கலைஞன் செந்திலை டைட்டில் வின்னராக அறிவிக்க வைத்துள்ளது. சந்தோஷம், கோபம், அழுகை போன்ற மனித உணர்வுகளை மையமாக வைத்ததே இசை என்பதை தன் மண்வாசனை நிறைந்த குரலின் மூலம் நிரூபித்து, ஒட்டுமொத்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் தலைநிமிரச் செய்திருக்கிறார் செந்தில் கணேஷ்.
``எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு'' என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா. 

``எனக்கு என் தம்பின்னா உசுரு. எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க, ஒரு பையன். நான்தான் வீட்டுக்குப் பெரியவ. என் தம்பி செந்திலை என் புள்ளை மாதிரிதான் பார்த்துப்பேன். எனக்குக் கண்ணாலம் நடந்தப்போ அவன் பாடசாலையில படிச்சுட்டிருந்தான். செந்திலு என்னை அம்மானுதான் கூப்பிடுவான். அவனை விட்டுட்டு புருஷன் வீட்டுக்குப் போறோமேன்னு கவலையா இருந்துச்சு. என் வீட்டுக்காரரு சொந்தம்கிறதால அந்தக் கவலையே வராத மாதிரி நடந்துகிட்டாரு. அப்பாவும் புள்ளையும் மாதிரிதான் ரெண்டு பேரும் இருப்பாங்க. 


``ஒரு காலத்துல எங்க ஊருல அடிக்கடி பேய் ஓட்டுவாக. அப்போ பாடும் பாட்டை செந்தில் கேட்டுட்டு வந்து வீட்டுல பாடிக்கிட்டே திரியும். `என்னத்த இங்கே வந்து பேய் ஓட்டிகிட்டு இருக்கே'னு நான்கூட ஏசியிருக்கேன். அப்போ எனக்குக் கண்ணாலம் ஆகலை. ஆனா, `இவனுக்குப் பாடும் திறமை இருக்கு புள்ள'னு என் புருஷன் அப்பவே சொல்வாரு. அப்போ அது எனக்குப் பெருசா தெரியல. என் தம்பியும் என் வீட்டுக்காரரும் சாயங்காலம் ஆயிருச்சுன்னா, பாட்டு படிக்க ஆரம்பிச்சிருவாங்க. கிராமம், விவசாயம், வயக்கா வரப்புனு எதையாவது பாட ஆரம்பிச்சுருவாங்க. என் தம்பியோட குரலுக்கு ஏத்த மாதிரி என் வீட்டுக்காரர் வரி எழுதி, மெட்டுப் போட்டுக் கொடுப்பார். என் தம்பி பாடுறதை எங்க ஊரு ஜனங்க கைதட்டி ரசிக்கும். அந்தக் கைதட்டல்தான் அவனை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கு. அவனுக்குத் திறமை இருக்கு அவனை பெரிய ஆளா ஆக்குறதுதான் நம்ம கடமை'னு சொல்வாரு. அதுக்காக, எங்க ஊரு பக்கம் நடக்கும் திருவிழாவுல என் தம்பி பாடறக்கு வாய்ப்பு கேட்டு என் வீட்டுக்காரர் போவாரு. நாட்டுபுறக் கலைஞர்களுக்கு அவ்வளவு ஈஸியா வாய்ப்பு கிடைச்சுருமா? அதுவும் புதுசா பாட ஆரம்பிச்சவங்களுக்கு யாரு வாய்ப்பு கொடுக்க கையைத் தூக்குவாங்க. ஆனால் எந்தச் சூழலிலும் என் தம்பி ஏமாந்துறகூடாதுன்னு பல மேடை ஏறி இறங்குவாரு என் வீட்டுக்காரரு. `இந்த மேடை இல்லைன்னா என்னடா? உனக்கு ஆயிரம் மேடை இருக்கு'னு அவனை தேத்துவாரு. அவரு விதைச்ச விதைதான் இன்னைக்கு விருட்சமா வளர்ந்து நிக்குது.
பொருளாதார ரீதியாக எவ்வளவோ கஷ்டம் இருந்தப்ப அவன்கிட்ட சொன்னதுகூட கிடையாது. அவன் சிரிச்சுட்டே இருக்கணும்னு சொல்வாரு. மாமன் - மச்சானால் இவ்வளவு ஒற்றுமையா இருக்க முடியுமான்னு ஆச்சர்யமா யோசிப்பேன். ஆனா அவரு செந்திலை மச்சானா பார்த்ததே இல்லே. மகனா பார்க்கிறாருன்னு லேட்டாதான் புரிஞ்சுச்சு. அவனோட அடையாளத்துக்காக நிறையவே கஷ்டப்பட்டாரு. இது எங்க குடும்பத்தின் வெற்றி'' என்ற சித்ரா, ராஜலெட்சுமி பற்றியும் குறிப்பிட்டார்.
``கொலேஜ் படிக்கும்போது ராஜியை விரும்பறதை என்கிட்டதான் முதல்ல சொன்னான். என் புருஷனும் அவன் இஷ்டத்துக்கு விட்டுருனு சொல்லிட்டாரு. நாங்க தேடிக் கண்டுபிடிச்சுருந்தாலும் இப்படி ஒரு பெண்ணைக் கட்டி வெச்சுருப்போமான்னு தெரியலை. அவ்வளவு அனுசரணையான பொண்ணு. எங்க குல தெய்வம் அவன்கூடவே இருந்து, எப்பவும் சந்தோசமா வெச்சுக்கும். அவன் குரலை சாகுற வரை கேட்டுட்டே இருக்கணும்'' என ஆனந்தக் கண்ணீரில் தழுதழுக்கிறது சித்ராவின் குரல்.