Monday, January 7, 2019

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே..."

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே' என்ற
திருநாவுக்கரசரின் பாடலோடு உதித்தது.


வாழ்ந்துகெட்ட மனிதன், வாழ்ந்துகெட்ட குடும்பம், வாழ்ந்து கெட்ட சமூகம் என்று தனிமனிதனில் தொடங்கி ஒரு சமூகம் வரை நன்றாக இருந்து, பின் என்ன காரணத்தினாலோ நொடிந்து போய்விடும். அதன் பின்னணியில் சாட்டையோடு ஒரு கை இருக்கும் அல்லது ஆசை எனும் தொட்டில் இருக்கும்.
ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கவேண்டிய இடங்களில், ஒருவர் ஆட்டுவிக்கிறார், ஒருவர் ஆடுகிறார். ஆடுவதோ ஆட்டுவிப்பதோ முக்கியமின்றி, ஆட்டுவிப்பதற்கான காரணமே முக்கியமாகிறது. சாட்டை இருக்கிறது என்பதற்காக ஆட்டுவிப்பவர்களே பெருகிவிட்டனர் இன்று.
பெரும்பாலும் எளியோரை வலியோர் ஆட்டுவித்தலே அதிகம். எனில் வலியோரை ஆட்டுவிக்க ஒருவரும் இல்லையா? இருக்கிறான் அவன் பேர் இறைவன் என்கிறார் கண்ணதாசன்.
``என் கையில் என்ன இருக்கு. அவன் சுற்றிவிடுறான். நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்'' என்று பலரும் கடவுளைக் கைகாட்டி விடுவார்கள். கண்ணதாசனின் தத்துவார்த்தப் பாடல்கள் பலவற்றிலும் அவர் கடவுளைக் கேள்வி கேட்கிறார். கடவுளிடம் இருந்து பதில் பெறுகிறார். எல்லாம் உன்னால்தான் என்று கடவுளிடம் கோபித்தும் கொள்கிறார்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பம்பரம் என்றால் ஆடத்தானே வேண்டும். அதிலும் தானாக ஆடமுடியாது. ஆட்டுவித்தலுக்கேற்ப ஆடவேண்டும். அதுதான் விதி. சாட்டை சுழற்றிவிட்டால் ஆடவேண்டிய பம்பரம்தான் நாம் அனைவரும். சாட்டை சுழற்றும் கைகள் எவருடையவை என்பதைப் பொறுத்து ஆடல் சுகமாகவோ சுமையாகவோ இருக்கிறது.
ஆசையெனும் தொட்டிலில் ஆடாதோர் யார் என்கிறார் கண்ணதாசன். ஆசை என்பது எப்போதும் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டேயிருக்கும். ஆடிக்கொண்டிருப்பதால் அதனைத் தொட்டில் என்கிறார். உண்மையில் ஆசைதான் நம்மை இயக்குகிறது. ஆசைப்பட்டபடி வாழத் துடித்துதான் அதில் சிக்கிக்கொள்கிறோம். ஆகவேதான் ஆசையே அத்தனைக்கும் காரணம், ஆசையை அறுத்துவிடு என்றார் புத்தர்.
`ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே'
என்று திருநாவுக்கரசரின் பாடல் ஒன்றுண்டு.
அதனை முதலடியாகக்கொண்டு தன் அனுபவப்பின்னலால் கவியரசர் வார்த்த பாடல் இது.
தன்னிடம் இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நாயகனாய் சிவாஜிகணேசன் நடித்திருப்பார். டி.எம்.எஸ்ன் குரல் நம் ஆன்மாவைத் திறப்பதாய் அமைந்திருக்கும்.
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நாம் விரும்பித் தோற்கும் இடங்களை நாமே நன்கறிவோம். குடும்பம், உறவு, காதல், நட்பு என்று வேறு வழியில்லாமல், பாசத்தின் பொருட்டு கிடைத்த தோல்வியை சுகமாக எடுத்துக்கொள்வோம். அவன் ஏமாற்றிவிட்டான் என்றுகூட சொல்லாமல்... நண்பன்தானே என்று அந்த வலியைக் கடந்து சென்றிருப்போம். அந்த வலிக்கு ஒத்தடம் தருவதாக அமைந்த வரிகள் என்று இதனைச் சொல்லலாம்.
பாஞ்சாலி மானம் காக்க கடைசிப் புகலிடமாய் கண்ணனை நினைத்து சேலை கேட்கிறாள். என்னுடைய உறவினர்களையே எதிர்த்துப் போரிட்டு நான் எதைப் பெறப்போகிறேன். இந்தப்போர் அவசியம்தானா? எனக்கு விளங்கவில்லை. எனக்குப் புரியவில்லை கண்ணா என்று பார்த்தன் என்னும் அர்ஜுனன் கீதை கேட்கிறான்.
எல்லாவற்றையும் இழந்த ஒருவன் மீண்டும் இறைவனிடம் என்ன கேட்பான்? இழந்தவற்றையெல்லாம் கொடு என்றுதானே? ஆனால் இன்னும் இன்னும் நன்மை செய்து துன்பத்தை வாங்கிக்கொள்ளும் உள்ளத்தைக் கொடு என்று கண்ணனிடம் கேட்கிறார் கவியரசர். இப்படிக்கூட கேட்கமுடியுமா என்று நாம் யோசிக்கும் வேளையில் அதற்கான விடையை அடுத்த சரணத்தில் அவரே அளிக்கிறார்.
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா.
உள்ளத்தில் உள்ள ஒளியே உலகம். அதுவே கடவுள். அதுவே எல்லாமும். அதனை உணர்ந்துகொண்ட நொடியில் துன்பங்கள் அனைத்தும் தானாய் விலகும்... என்று பாடலின் முடிவில் நம் துன்பங்களையும் துடைத்தெறிகின்றன கவியரசரின் கரங்கள்.

No comments:

Post a Comment