Tuesday, June 25, 2013

பல சாதனைகள் படைத்த ‘வசந்த மாளிகை’

காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

1972 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘வசந்த மாளிகை’ தற்போது ‘டிஜிட்டல் ரெஸ்டடேரேன்’ செய்யப்பட்டு ‘சினிமாஸ்கோப்’ முறையில் மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் பிரேம் நகரம் என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக்தான் ‘வசந்த மாளிகை’.
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வரர ராவ், வாணி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
பின்னர் இந்த படம் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி நடிக்க பிரேம் நகர் என்ற பெயரில் 1974 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
மூன்று மொழிகளிலும் படத்தை இயக்கியவர் கே. எஸ். பிரகாஷ்ராவ்.
கொடூரி கெளசல்யா தேவி எழுதிய ‘பிரேம் நகர்’ என்ற நாவலை மையமாக வைத்துதான் இந்த படத்தையே உருவாக்கினார்கள்.
தமிழ், தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். ஹிந்திப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ். டி. பாமன்.
மூன்று மொழிகளிலுமே இந்த படத்தின் பாடால்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
தமிழில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்படுகின்றன.
படத்தின் கதையும் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் ஒன்றாக இருந்ததாம். அதனால் கவிஞர் இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக பாடல்களை எழுதி தந்தார் என்று அப்போது சினிமா வட்டாரத்திதில் பேசிக் கொண்டார்களாம்.
‘ஏன் ? ஏன் ? ஏன் ? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே பெருங்குடி மகனே நான் கொடுக்கட்டுமா’, ‘கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ’, ‘மயக்கமென்ன இந்த மெளனமென்ன’, ‘குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்து விடலாம்’, ‘யாருக்காக இது யாருக்காக’ என அனைத்துப் பாடல்களுமே கேள்வியின் வடிவம் அதிகம் இருக்கும்.
இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தவுடன் ஹீரோவாக சிவாஜிகணேசன் மட்டுமே நடிக்கப் பொருத்தமானவர் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.
ஹீரோயினாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயின் அழகான தோற்றம் தமிழிலும் நடிக்க வைத்து விட்டது.
சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், பண்டாரிபாய், பாலாஜி, சுகுமாரி, ரங்காராவ், வி. கே. ராமசாமி, புஷ்பலதா, ராமதாஸ், சி கே. சரஸ்வத, சி. ஐ. டீ. சகுந்தலா, ரமா பிரபா, செந்தாமரை என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
படத்தின் வசனம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று அதை எழுதியர் பாலமுருகன்.
இப்படத்தில் முதலில் கிளைமாக்கில் சிவாஜிகணேசன் இறந்து விடுவதாக காட்சியமைத்திருந்தார்கள். தியேட்டரில் மக்கள் அதை விரும்பவில்லை என்று அறிந்ததும், பின்னர் சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஒன்று சேர்வது போல காட்சியை மாற்றி தியேட்டர்களுக்கு பிரின்ட் போட்டு அனுப்பி வைத்தார்கள். படத்திற்கு கூட்டம் அலை மோதியது.
இலங்கையில் அதிக ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் ‘வசந்த மாளிகை’ 12 ஊர்களில் 14 அரங்குகளில் ஓடியது.
இலங்கையில் இரண்டு அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடும் வித்ததில் ஓடிய முதல் படமும் ‘வசந்த மாளிகை’ தான்.
கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 287 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் ஓடியது.
தமிழ் நாட்டில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரெளன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.
மேலும், தஞ்சை, கோவை, சேலம், வேலூர், ஈரோடு, கடந்தை, மாயவரம் ஆகிய ஊர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும், மற்ற பல ஊர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இது அந்த காலத்தில் மாபெரும் சாதனை.
இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய நான்கு ஊர்களில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மாயவரத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரைப்பிடப்படுவதும் வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழாப் படங்களை 1959, 1961 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மூன்றாவது முறையாக 2 வெள்ளி விழாப் படங்களை தந்தது.
‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது. எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார். நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன இந்த மெளனமென்ன’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார் அதுதான் சிவாஜி தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.
இப்படத்திற்காக ‘அடியம்மா ராசாத்தி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. அது ரெக்கார்டு பிளேயார்களிலும் இடம்பெற்று வானொலிகளிலும் வெகுகாலம் ஒலிபரப்பாகி வந்தது ஆனால் திரைப்படத்தில் ஏனோ இடம் பெறவில்லை. முதன் முதலாக வண்ணத்தில் ‘ஸ்லோமோஷன்’ முறையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘வசந்த மாளிகை’. இப்படி பல சிறப்புக்களையும் சாதனைகளையும் புரிந்தது வந்த மாளிகை. காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment