Tuesday, December 15, 2015

மனோரமா- இது வெறும் பெயரல்ல. அவர் எங்களின் அம்மா

மனோரமா- இது வெறும் பெயரல்ல. அவர் எங்களின் அம்மா. அன்பான ஆச்சி.
’"தந்துவிட்டேன் என்னை' படம் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகம். அதன்பின் சில படங்களில் இணைந்து நடித்தேன். மலையாளப் படங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்துபவை; தமிழ்ப் படங்கள் வார்த்தைகளை முன்னிறுத்தி வசன உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவை. வசன உச்சரிப்பில் ஒரு ஜனரஞ்சகத்தை தந்து வெற்றிபெற்றவர் மனோரமா. அதுமட்டுமல்லாமல்; தன்னுடன் நடிப்பவர்களுக்கும் வசன உச்சரிப்பை கற்றுத்தர அக்கறை காட்டுபவர்.

திரைக் கோட்பாட்டு வரையறைக்குள் சிக்காத ஒரு திராவிட முகச்சாயல் அவருக்கு உண்டு. அவரின் வசன உச்சரிப்பும், அதை சிதைக்காத உடல்மொழியும், யதார்த்தத்தை மீறாத ஒழுங்கும்தான் அவரது பலம். இதுதான், காலம் கடந்தும் திரையுலகில் தனி ஆளுமையாக அவரை நிற்கவைத்தது.

அந்தந்த காலத்துக்கு ஏற்ப தன்னை அவர் புதுப்பித்துக்கொண்டார். முதலில் நகைச்சுவை நடிகையாக வலம்வந்தவர், பிறகு அம்மா வேடங்களில் கம்பீரமாக நின்றார். அவரின் குரலும், பாடும் விதமும் தனித்தன்மை வாய்ந்தது. அவரின் குரலில் மண்ணின் மணம் வீசும். அது ஒரு வசீகர காந்தக் குரல். இவையெல்லாம்தான் அவரை, மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடவைத்தது.

கமல் சார் மூலம்தான் மனோரமா எனக்குள் முழுதாக நிரம்பினார். "நாகேஷ், மனோரமாதான் எனக்குப் பிடித்த நடிகர்கள்' என்று கமல் எப்போதும்  சொல்லிக்கொண்டே இருப்பார். ‘"ஒவ்வொரு முறையும் நடிப்பதற்குமுன் மனோரமா ஒத்திகை பார்ப்பார். அவ்வளவு தொழில் பக்தி அவருக்கு'’ என்று சிலாகிப்பார்.

மேடை நாடகம் என்றால் ரீ-டேக் எடுக்கமுடியாது. அதனால் ஒத்திகை பார்க்கலாம். ஆனால் சினிமாவுக்கு எதற்கு ஒத்திகை? என்று நினைத்துப் பார்ப்பேன். ஆனால் அது அவரது சின்சியாரிட்டியின் அடையாளம்.

அவர் கலைக்காகவே வாழ்ந்தவர். சிரிப்புக் காட்சிகளில் மட்டுமல்ல் அழ வைக்கும் காட்சிகளிலும் மிகையில்லா உணர்ச்சிகளைக் காட்டி, நம்மைக் காட்சியோடு கரைத்துவிடுவார். இது அவருக்குக் கைவந்த கலை.

படப்பிடிப்பு நாட்களில் மனோரமா அம்மாவுடன் இருப்பதே எங்களுக் கெல்லாம் ஒரு ஆராதனை அனுபவம்தான். அவர்களுடன் இருக்கும்போது நிறைய கதை கேட்போம். அவர் தனது பொக்கிஷமான தருணங்களை எங்களோடு பகிரும்போது எங்களுக்குள் வண்ண வண்ண மலர்கள் மலர்வதுபோன்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஒரு முறை, ‘"எப்படிம்மா தி.நகருக்குக் குடிவந்தீங்க?' என்று தற்செயலாகக் கேட்டேன். ‘"அண்ணன் சிவாஜிதான் என்னோட வீட்டு பக்கத்துலேயே வந்துடும்மா... நாங்க உனக்கு ஒத்தாசையா இருக்கோம்ன்னு சொன்னாரு. அவர் பாசத்தை மீறமுடியுமா'ன்னு’ சொன்னாங்க. சிவாஜி மனோரமாமீது வைத்த பாசத்தைக்கேட்டு நெகிழ்ந்துபோய்விட்டேன். மனோரமாவின் உடன்பிறவா அண்ணனாகவே இருந்தவர் சிவாஜி.

"வாழ்க்கையில் பொருளாதாரமும் முக்கியம். வருமானத்தை நல்ல வழியில் முதலீடு செய்மா'ன்னு அண்ணன் சொன்னாரு. அதுக்கப் புறம்தான் எனக்குப் பொறுப்பு கூடுதலாச்சு'’ என்று சிவாஜி சார்மீது தனக்கிருக்கும் அளவில்லாத அன்பை அவ்வப் போது எங்களிடம் பகிர்வார் மனோரமா.

"தாமிரபரணி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, மனோரமா அம்மாவோடு சேர்ந்து ஒரு கோவிலுக்குப் போனேன். அப்போது திடீரென, "ரோகிணி, ரயில் டிக்கெட்டை எங்கயோ விட்டுட்டேன்' என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் படபடப்பாக ஆனது... ஆனால் அம்மாவோ, "பரவால்லை; சமாளிச்சுக்கலாம். ட்ரைன்ல ஏறு'’ என்றார். ஏறிவிட்டோம். டி.டி.ஆர் வந்தார். அவருக்கு அம்மா யார் என்று தெரிந்தாலும், தன் கடமையைச் செய்யவேண்டுமே என்றார். அந்த நேரத்தில் ரகுவரன் தற்செயலா போன் செய்தார். அவரிடம் இதைச் சொன்னேன். பிறகு அவர் டி.டி.ஆரிடம் பேச, அவர் குறைந்த அளவு மட்டும் பைன் போட்டார். ஆனால் மனோரமாவோ, "அரசாங்கத்துக்கு உண்மையா இருக்க ணும்ப்பா' என்றபடியே முழு அபராதத்தையும் கட்டினார். அப்படிப்பட்ட மனம்கொண்டவர் அவர்.

 இயக்குனர் ஸ்ரீதர் சாரின் மனைவியும் மனோரமா அம்மாவும் மிக நெருங்கிய தோழிகள். ஒருமுறை ஸ்ரீதர் சார் உடல்நிலை சரியில்லாதபோது, அவரைப் போய்ப் பார்க்கலாம் என்று மனோரமா அம்மாவிடம் நான் சொன்னேன். "அவங்க அனுமதி கொடுத்தா போய்ப் பார்க்கலாம்' என்று அம்மா சொன்னார். அதேபோல அனுமதிபெற்று ஈ.சி.ஆர். வீட்டில் அவரைச் சந்தித்தோம். யாரை சந்திக்கப் போனாலும், அவரே கடைக்குச் சென்று பொக்கே வாங்கி, அதில் தன் கைப்படவே வாழ்த்தை எழுதித்தருவது அம்மாவின் வழக்கம். ஸ்ரீதர் சாருக்கும் இப்படி தன் கைப்பட வாழ்த்தை எழுதினார். அது ஸ்ரீதர் சாரை நெகிழவைத்தது.

மனோரமா அம்மா, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைப் பார்த்தபோது மனதுக்கு பாரமாக இருந்தது. உடல் தளர்ந்தபோதும் அவர் காட்டிய அன்பு குறையவே இல்லை. அப்போது அவர் என்னிடம், "உலகத்திலேயே மிகப்பெரிய ஏழ்மை எது தெரியுமா? நமக்குப் பிடித்த விஷயத்தைச் செய்யமுடியாமல் வீட்டில் உட்கார்ந்து இருப்பதுதான்'’ என்றார். உடல்நிலை சரியில்லாத போதும்  நடக்கமுடியவில்லையே, முன்புபோல் நடிக்க முடியவில்லையே என்றுதான் வருத்தப்பட்டார்.

அந்த அளவுக்கு கலைத் தாகம் கொண்டவர் அம்மா. கலைஞரின் புறநானூற்று வசனத்தைப் பேசுவது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அடிக்கடி எங்களிடம் கம்பீரமாகப் பேசிக் காட்டுவார். அப்போது அவரிடம் ஒருவித பெருமிதம் மிளிரும்.

’"கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஆனால் அதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோர்ந்து படுத்துவிடாமல் நம்மை நாம் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உன்னிடம் கலை இருக்கு. அதை நம்பிப் போ. அது உன்னைக் கைவிடாது'“ என்பார் என்னிடம். அவர் ஒரு தன்னம்பிக்கைக் கவிதை.

ஒட்டுமொத்த பெண்களுக்கும் வழிகாட்டக் கூடியதாக, தன்னம்பிக்கை தரக்கூடியதாக அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், மனோரமா மறக்கமுடியாத அம்மா.