Wednesday, July 19, 2017




குரல் கொடுத்தவருக்கே
குரல் கொடுக்க யாரும் இல்லை

நடிகர்களுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளில் எஸ்.எஸ்.சுரேந்தர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த பொழுது, இந்த டப்பிங் விசயத்தில் அவர் மனதில் கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. அந்த இளைஞரின் நெஞ்சில் ஒரு எள்ளைப்  போட்டால் பொரியும் போலிருக்கிறது. அவ்வளவு வேக்காடு..!

"நூறு படங்களுக்கு மேல் டப்பிங் பேசி விட்டேன். நெஞ்சத்தைக் கிள்ளாதேவில் பிரதாப்புக்கு, அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கு. காதல் ஓவியத்தில் கண்ணனுக்கு. உயிருள்ளவரை உஷாவில் கங்காவுக்கு மற்றும் ரவீந்தர், ஷங்கர், விஜய்பாபு, சுதாகர், விஜயகாந்த் போன்றோருக்கும் குரல் கொடுத்திருக்கேன். மொத்தத்தில் மோகனுக்குத்தான் அதிகமாக முப்பது படங்களுக்கு மேல் கொடுத்திருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லையில் தொடங்கி விதி, நான் பாடும்பாடல் வரை குரல் கொடுத்திருக்கிறேன்.

நெஞ்சத்தைக் கிள்ளாதேவில் பிரதாபுக்கு சூட்டபிள் வோய்ஸ் கிடைக்காததால் அவருக்கு என்னை பேசச் சொல்லி விட்டார் டைரக்டர் மகேந்திரன்.    படம் முடிந்து பார்த்த போது 'நீங்கள் எனக்காக பேசியிருக்கலாம் சுரேந்தர் ' என்று வருத்தப்பட்டுக் கொண்டார் மோகன்.

டப்பிங் பேசுவது எனக்கு பிடிக்காத விஷயம். பாடுவதற்காகத்தான் விருப்பப்பட்டேன். அதற்காகத்தான் வந்தேன். சட்டம் ஒரு  இருட்டறை, தாமரை நெஞ்சம் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறேன். நான் பாடும் பாடலில் மோகனுக்கே பாடியிருக்கிறேன். 

நான் டப்பிங் கொடுத்தது பீல்டில் ஒரு கனெக்ஷன் இருக்கட்டுமே என்பதற்காகத்தான்.   இது காரணமாக வேறு பல துறைகளை தியாகம் பண்ண வேண்டி வந்தது. வாய்ஸ் கொடுப்பவன்தானே என்ற இளக்காரத்தில் பாடவும் நடிக்கும்கிடைக்கும் சான்ஸ்கள் குறைந்தன.

என் கல்யாணத்திற்கு சிவகுமார், சங்கிலி முருகன், சுரேஷ் போன்ற நான் வோய்ஸ் கொடுக்காத நடிகர்கள் வந்திருந்தார்கள். ஆனால் நான் வோய்ஸ் கொடுத்தவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் என்னவோ முற்போக்கு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், நாம் என்னவோ எஸ்.டி காஸ்ட் போலவும் ஒதுங்கி வாழத் தலைப்படுகிறார்கள் என்றார் சுரேந்தர்.



'ஆலு' என அழைப்பதில் தனி அழகு


எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.

அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

"மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் 'ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப்  போகமாட்டார். என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. 'ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.

எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. 'ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.

"தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் 'ஏனோதானோ' என்றிருந்தது.

நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் 'ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். 'மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.

மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங்களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.

அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், 'ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.

இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?

ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.

"என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.

எப்போதும் என்னை வாய் நிறைய 'ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.