Tuesday, August 26, 2014

எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு

  சென்ட்ரல் ஸ்டுடியோவின் நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.எம்.சுப்பையா, அந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரும் பின்னர் பட்சிராஜா பிலிம்ஸ் அதிபரானவருமான எஸ்.எம். ஸ்ரீராமுலுவின் சகோதரர் எஸ்.எம்.சுப்பையாவை சுருக்கமாக எஸ்.எம்.எஸ். என்றும் நாயுடு என்றும் திரையுலகத்தினர் அழைத்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் எஸ்.எம். சுப்பையாவுக்கும் நல்ல நட்புறவு உண்டு. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்திற்கு இசையமைத்தவர் சுப்பையாதான். அதில்தான் முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது (1947). ‘காசினிமேல் நாங்கள்’ என திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம்.என். நம்பியார் வாயசைத்தார்.
1949 இல் எஸ்.எம்.எஸ். இசையில் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில்தான் தமிழ்த் திரையில் புகழ் கொடி நாட்டிய கவியரசர் கண்ணதாசன் முதன் முதலில் பாடல் எழுதினார். கலங்காதிரு மனமெ. உன் கவலைகள் யாவும் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடலை கண்ணதாசன் எழுத அதனை கே.வி.ஜானகி பாடினார்.
அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘வேலைக்காரி படத்திற்கும் எஸ்.எம். சுப்பையாதான் இசை. ‘ஓரிடம் தனிலே நிலையில்லாத உலகினிலே’ என்ற பாடல் அப்படத்தில் இடம்பெற்றது.
மேல்நாட்டு இசைக்கருவிகள் திரையிசைக்குப் பயன்படுத்தப்பட்ட போதும் இந்தியத் தன்மை கொண்ட இசையிலேயே நாட்டம் கொண்டிருந்தார் எஸ்.எம். சுப்பையா. மேல்நாட்டு பாணி நடிகரான சந்திரபாபுவை ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’ என்ற பாடல் மூலம் திரையில் பாட வைத்தவர் சுப்பையாதான்.
திரை இசைக்காக முதன் முதலாக தங்க இசைத்தட்டு விருது பெற்ற பெருமைக்குரிய ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை எஸ். ஜானகியின் குரலில் பாட வைத்தவரும் எஸ்.எம். சுப்பையாதான் (கொஞ்சும் சலங்கை) ‘திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே), ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்) ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ (மன்னிப்பு), ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ (நாடோடி மன்னன்) என என்றும் அழியாத பாடல்கள் பலவற்றைத் தந்துள்ளார் எஸ்.எம். சுப்பையா.
    1950 களின் இறுதியிலும் 1960 களின் தொடக்கத்திலும் புகழில் இருந்த அவர் 1976 ஆம் ஆண்டில் “கவிராஜ காளமேகம்’ என்ற படத்திற்கு கடைசியாக இசையமைத்தார். எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன், ஆர். சுதர்சனம் போன்றவர்களும் எஸ்.எம். சுப்பையா இசையமைத்த காலத்தில் தமிழ்த் திரையுலகில் இசையமைத்து வந்தனர்.
‘மாசிலா உண்மைக்காதலே’, ‘அழகான பொண்ணு நான். அதற்கேற்ற கண்ணுதான்’ போன்ற பாடல்கள் இடம்பெற்ற அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்.
தட்சிணாமூர்த்தியின் இசையில் வெளியானது. இசைச்சித்தர் என்றழைக்கப்பட்ட சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் பாடியதுடன் இசையும் அமைத்து வந்தார். ரத்தக்கண்ணீர் படத்தின் பாடல்கள் இவரது இசையமைப்பில் உருவானவை.

சமூகப்படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய திருடாதே மிகப்பெரிய வெற்றி

எம்.ஜிஆர். பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில சமூகப் படங்களில் நடித்தாலும் வேட்டி சட்டை அணிந்து நடிப்பார். அவர் கோட்டு சூட்டு முதலான நவீன உடைகள் அணிந்து நடிக்க வழி வகுத்த படம் “திருடாதே” இந்தப் படம் உருவானதில் ஒரு கதையே அடங்கி இருக்கிறது.
இதுபற்றி தமிழரசு கழகப் பிரமுகரும், பட அதிபரும், பிற்காலத்தில் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவராக ஆனவருமான சின்ன அண்ணாமலை ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது, “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜாராணி கதைகளில் நடித்து புகழ் பெற்று கொண்டிருந்த சமயம் அவர் நடித்துக் கொண்டிருந்த ‘சக்ரவர்த்தி திருமகள் என்ற திரைப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
‘சக்ரவர்த்தி திருமகள்’ ஒரு ராஜாராணி கதைததான். எம்.ஜி.ஆர்.தான் அதில் கதாநாயகன் அஞ்சலிதேவி கதாநாயகி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் அதில் நடித்தார்கள்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆருடன் நான் நெருங்கிப் பழகியது ‘சக்ரவர்த்தி திருமகள்’ படப்பிடிப்பின் போதுதான். படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்பு காலங்களில் தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம்.
அதனால் எம்,ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும் மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் “நீங்கள் ஏன் ராஜா ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிaர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டேன் “சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆர் ‘பாகவதர் கிராப்’ தான் வைத்திருப்பார். எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் நினைத்தேன். அதாவது தனக்கு சமூகக் கதைக்கு ஏற்றமுகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச் சண்டை முதலியவைகள் சமூகக் கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டுதான் சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.
பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர். சிறிது நேரம் யோசித்து “சரி தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்” என்று சொன்னார். நான் முன்னமே இந்திப்படமான ‘பாக்கெட்மார்’ என்னும் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி. ஆருக்குக் காண்பித்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. “சரி இந்தக் கதையையே எடுக்கலாம்.
இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொன்னார்.
மறுநாள் சியாமளா ஸ்டூடியோ மேக் அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது, நானும் எனது கூட்டாளியான வி. அருணாசலம் செட்டியாரும் சென்று “சாவித்திரி பிக்சர்ஸ்” என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம்.
அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம். என்று சொன்னோம். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். “எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால் ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்iட் கொடுத்துவிட்டேன். ஆனால் ‘கால்iட்’ நேரம் பூரவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் கொடுத்திருக்கிறேன்.
அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தை சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர் நடி¨கைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்” என்று சொன்னார்.
நான் அப்போது பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக் சர்ஸ் கம்பெனியில் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். ‘தங்கமலை ரசகியம்’ எனது கதையாதலால் என்னை பந்துலு தன் கூடவே வைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும் போது நான் ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும் அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன். உடனே பத்மா “இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய் மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள்.
தமிழ் படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப் படத்தில் ஒரு சிறு ‘சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். “தங்கமலை ரகசியம்” படத்தில் அழகு மோகினி யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒது நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்” என்று சொன்னேன்.
பத்மா சிபாரிசு செய்த பெண் மாநிறமாக இருந்தார். ஆனால் அவர் முகம் கேமிராவுக்கு ஏற்றதாக தோன்றியது, மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணை அழைத்து வந்தார்கள். நடன மணிகளில் ஒருத்தியாகப் போட பந்தலு சம்மதித்தார். அழகு மோகினி யவ்வன மோகினி நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால் மேற்படி நடனக் காட்சியை
டைரக்ட் செய்யும்படி ப, நீலகண்டனை ஏற்பாடு செய்திருந்தார். பத்மா சிபாரிசு செய்த பெண் மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார். காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், என்னை தனியாக கூப்பிட்டு “இந்தப் பெண் காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள்.
கொஞ்சம் யோசியமால் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். பின்னர் நடனக் காட்சி படமாக்கப்பட்டு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். எல்லோரும் ஆகா என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ் நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த பணம் ரூபாய் இரு நூற்றி ஐம்பதுதான்.
பின்னர் அதே பந்துலு, அ சரோஜாதேவிக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன். ஒவ்வொரு படத்திற்கும் பணம் எவ்வளவு என்று நினைக்கிaர்கள்? முதல் படத்திற்கு ரூபா மூவாயிரத்து ஐநூறு, இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம், மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.
மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் சென்று புதுமுகம் சரோஜா தேவி பற்றி சொன்னேன். “ஒரு ‘டெஸ்ட்’ எடுங்கள் பார்க்கலாம்” என்று சொன்னார் ‘சரி என்று சிட்டாடல் ஸ்டூடியோவில் ஒரு டெஸ்ட்’ எடுத்தோம். “டெஸ்ட் எடுப்பது” என்பது பலமாதிரி நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. டெஸ்டை’ எம்.ஜி.ஆர். பார்த்தார்.
கூட நாங்கள் சிலரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும் போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். அதுவும் ஒரு ‘செக்ஸியாகத்தானே இருக்கிறது இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டு விடுங்கள்” என்று சொன்னார்.
எங்களது “சாவித்திரி பிக்சர்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலம் ‘பார்க்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் பா. நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும் ஏ.எல்.சீனிவாசன் “நெகடிவ்” உரிமை வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து வேலை துவங்கினோம். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்த போதுள் எம்.ஜி.ஆர். “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம்.
அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதேபோல் நாம் பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 500 பரிசு அளிப்பதாகவும் கூறினார். எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில எங்கள் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன் மேற்படி படத்திற்கு
“திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம். எம்.ஜி.ஆருக்கும் அந்தப் பெயர் ரொம்பவும் பிடித்து விட்டது. மா,லெட்சும ணனுக்கு 500 ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். ‘திருடாதே’ படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும் “திருடாதே” படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் “என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும்.
ஆகவே படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் இலாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்லுகிறேன்” என்று சொன்னார். நான் சிறிது யோசித்தேன்.
அவர் விடவில்லை. “என் பேச்சை கேளுங்கள்” என்று விடாப்பிடியாகச் சொன்னார் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம். ‘திருடாதே’ படத்திற்காக எனக்கு கிடைத்த பணத்தை வைத்துத்தான் ‘கடவுளின் குழந்தை’ என்ற படத்தை நான் எடுத்தேன்.
அதன்பின் “திருடாதே’ ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிடப்படமாக ஓடியது. அந்தப் படத்துக்கு நான் தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போயிற்று.
ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் ‘திருடாதே’ நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு சின்ன அண்ணாமலை கூறியுள்ளார்.
“திருடாதே” தயாராவதில் மிகவும் தாமதமானதால் “நாடோடி மன்னன்”, “கல்யாணப் பரிசு” ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார்.

Wednesday, August 13, 2014

கம்பீர குரல் கொண்ட கே.ஆர்.ராம்சிங் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஜோடியாக நடித்தார்

தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன் அவரையடுத்து எஸ். எஸ். ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே. ஆர். ராம்சிங்.
கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்தவர்.
கே. ஆர். ராம்சிங் 1915இல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால், தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவளியினர்.
நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் “இன்டர் மீடியட்” (தற்போதைய “பிளஸ் - 2”) வரை படித்தார்.
பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம் சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.
தனது நடிப்பால் கணீரென்ற குரல் வளத்தால் புகழ்பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த “ஸ்ரீராமபால கான வினோத சபா” என்ற நாடகக் கம்பனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பனியில் எம். எஸ். விஸ்வநாதன், நடிகர் ஆர். முத்துராமன், எம். கே. முஸ்தபா, “சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன், எம். எஸ். எஸ். பாக்கியம், எஸ். எம். ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.
கே. ஆர். ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். “புயலுக்குப் பின்” என்ற நாடகத்தில் ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
பின்னர் “திருமழிசை ஆழ்வார்” பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது. நாடகத்தில் புகழ்பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.
1947ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், “விஸ்வாமித்ரா” என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக. அன்றைய “கனவுக்கன்னி” டி. ஆர். ராஜகுமாரியும். கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் (“மனோகரா” கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.
தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஜீவன்”, “பிலோமினாள்”. “எதிர்பாராதது” உட்பட பல நாடகங்களில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.
டி. என். ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த “மின்னல் வீரன்” திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர்.
“புயல்” என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த “கன்னியின் காதலி” படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ். ஏ. நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.
கே. ஆர். ராமசாமி கதாநாயகனாக நடித்த “விஜயகுமாரி” படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார் ராம்சிங், பிரபல இயக்குனர் கே. ராமநாத் டைரக்ட் செய்த படம் இது.
1958 ல் எம். ஜி. ஆர். பிரமாண்டமாக தயாரித்த “நாடோடி மன்னன்” படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப் படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.
இதன்பின் எம். ஜி. ஆர். - சாவித்திரி நடித்த “மகாதேவி” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம். ஜி. ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பற்றுவது போலுவம் ராம்சிங் நடித்தது. ரசிகர்களை கவர்ந்தது.
சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த “மருதநாட்டு வீரன்” படத்தில் பி. எஸ். வீரப்பாவும். ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.
பிறகு “நாகநந்தினி”, “தோழன்” ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் “தோழன்” படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!
இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் “டப்” செய்யப்பட்ட போது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.
ராஜ்கபூரின் “ஆ” என்ற படம் தமிழில் “அவன்” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.
அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான “மொகல் - ஏ - ஆஜாம்” என்ற படம் தமிழில் “அக்பர்” என்ற பெயரில் டப்” செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.
இடையே “தாழம்பூ”, “ஆசை முகம்”, “அஞ்சல் பெட்டி 520”, “பாட்டொன்று கேட்டேன்”, “பாக்தாத் பேரழகி”, “அரசகட்டளை”, “ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது”, “துணிவே துணை” முதலிய படங்களில் நடித்தார்.
பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, “டப்பிங்” படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக் கணக்கான “டப்பிங்” படங்களுக்கு குரல் கொடுத்தார்.
விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர் ராம்சிங்தான்.
பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக் கால் வில்லனாக ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால். அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது.
சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் தொழிலில் கவனமாக இருந்ததால் உடல் நலம் குன்றியது. கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18 ஆம் திகதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.
ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.
இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும். ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.
தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் உட்பட பல விருதுகளும். பரிசுகளும் பெற்றவர் ராம்சிங்.

எட்டே வார்த்தைகளில் ஒருவனின் சரித்திரத்தையே படம்பிடித்து காட்டிய கவிஞன்

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டி ருந்த தமிழ்த் திரை யுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன்.
“மதனமோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவன். அந்த செட்டி நாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது. “பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.
“பாடுவது கவியா? - இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?
இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.
கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும், அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.
“நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.
உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொது அறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.
இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்களான பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும். பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புக்களையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா - இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
(பாடுவது கவியா)

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லை.
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமாக
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(பேசுவதி கிளியா)

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
(பேசுவது கிளியா)

1975இல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை

வள்ளல் மனிதநேய சிகரத்திற்கு ஒரு சமயம் 1975 ல் ஒரு சோதனை ஏற்பட்டது. அதாவது (அப்போது தி.மு.க அரசு) வருமானவரி பாக்கி இவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதை இவ்வளவு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்று மக்கள் திலகத்துக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.
இதை அறிந்த மக்கள் திலகம் மிகவும் மனம் நொந்து போனார். கடவுளை நினைத்து நான் யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை, யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை. இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? இதைப் பற்றி மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார்.
பிறகு, இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அவரே ஒரு முடிவுக்கு வந்தார். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும். “சத்யா ஸ்டுடியோ” வை விற்று, இந்த அரச கடனை கட்டிவிடலாம். நான் சம்பாதித்து வாங்கிய சொத்துதானே, மேலும் இது நமக்கு இலாபகரமாக இல்லை. அதோடு சில மாதங்களாக ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் கரண்டுக்கு, டெலிபோனுக்கு நிலத்துவரி.
கட்டிடவரி இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் நாம் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த ஸ்டுடியோக்களுக்கு செலவு செய்ய முடியும். எனவே இதைவிற்றுவிடலாம் என்ற முடிவோடு தன்னுடைய உற்ற நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இந்த விஷயத்தை மிக உருக்கமாக சொன்னார். இதைக் கேட்ட அவருக்கு உடம்பே புல்லரித்துவிட்டது.
அவர் சிறிது நேரத்திற்கு பின் சார் இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உஙகளை பொறுத்தவரையில் சரிதான். ஆனால் இப்போது உள்ள உங்களுடைய மதிப்புக்கு இது சரிவராது. அரசியல்வாதிகளும் பொதுமக்களும் இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிaங்க? நீங்க சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டி பறக்கிaங்க, இந்த நேரத்தில் யாரோ ஒரு வருமான வரி அதிகாரி உங்களுக்கு வரிபாக்கி இருக்கு அதை. உடனே கட்ட வேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டார் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது சரி இல்லை. தயவு செய்து எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் பிறகு அதைப்பற்றி பேசுவோம்.
இந்த விஷயத்தை நினைத்து கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த பெரிய மனிதர் போய்விட்டார். பிறகு, அவர் வருமானவரி அதிகாரிகளை சந்தித்து எப்படி இவ்வளவு பெரியதொகை பாக்கி ஏற்பட்டது.
உங்களுடைய கணக்கு விவரம், முழுமையாக விபரம் எழுதிக் கொடுக்க நாள் கழித்து உங்களுக்கு பாக்கி இருக்கிறது? என்று இப்போ எழுதி உள்Zர்கள். இதற்கு சரியான பதில் எழுத்து வழியாக அனுப்புங்கள் என்று அவர் சென்னை வருமானவரி உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவர் மீண்டும் மக்கள் திலகத்திடம், சார் இது விஷயமாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டேன். அதாவது நியாயப்படி ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வளவு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்Zர்கள் அது தவறு. மீண்டும் கணக்கு பார்த்து சரியான பதிலை அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்து உள்ளேன்.
தயவு செய்து நீங்கள் ஸ்டுடியோவை விற்கனும் என்று நினைக்காதீர்கள்.
கடன் உங்களை விட இன்னும் பெரிய கோடீஸ்வரர் என்று சொல்பவருக்கு கூட இருக்கும் நீங்கள் கடன்காரனாக வாழக்கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதைக் கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் குறுக்கிட்டு சார் இப்போ இது வெறும் கட்டுக்கதைதான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் சார், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு கடன்காரன் என்ற சொல்லைக் கேட்க கூடாது. இதுதான் என்னுடைய இலட்சியம்.
அடுத்து சார் இந்த ஸ்டூடியோவில் இருந்து எந்தவித இலாபமும் இல்லை. சமீபகாலமாக ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கும் கரண்டுக்கும். போனுக்கும் நான் என் கையில் இருந்து கொடுத்து வருகிறேன். இப்படி இருந்தால் எப்படி சார் எல்லாவற்றையும் என்னுடைய நடிப்புத் தொழிலில் இருந்துதானே சார் சமாளிக்கனும் சினிமாவைத் தவிர, வேறு எனக்கு என்ன தொழில் இருக்குது, என் உடல் உழைப்பை தவிர இந்த விஷயம் மக்கள் திலகம் அவர்களுக்கு ஒரு பெரிய சிந்தனையை உருவாக்கியது.
அது தான் 1976 ல் “சத்யா ஸ்டூடியோ” வை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக (லீசுக்கு) வாடகைக்கு கொடுத்து சிரமத்தை தீர்த்துக் கொள்ளனும் அல்லது விற்றுவிடனும், பிறகு, ஒரு மாதத்தில் எப்படியோ அந்த பெரிய மனிதர் உதவியால் அரசாங்க கடனை தீர்த்திடலாம் என்று எண்ணினார்.
மக்கள் திலகம் சத்தியா ஸ்டூடியோவை அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட வருசத்துக்கு குறைந்த வாடகைக்கு எழுதி கொடுத்துவிட்டு ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பினார்.

Monday, August 4, 2014

மக்கள் திலகத்தின் அரசியல் பிரமுகர்களுக்கான அறிவுரைகள்

ஒருநாள் மக்கள் திலகம் மாம்பலம் அலுவலகத்தில் மந்திரி சபை அமைத்ததைப் பற்றி பேசிய போது, 1980ல் நடந்த எம்.பி. தேர்தலில் (அ.இ.அ.தி.மு.க.) நம்ம கட்சி படுதோல்வி அடைந்தது. அதனால், மந்திரி சபையை கலைத்தார்கள். அதேநேரம் மனம் தளராமல் அடுத்து நடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ஆட்சியில் மக்கள் எம்மை அமர்த்தினார்கள்.
ஆக எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும்.
அவர்களை நாம் எப்போதும் சந்தித்துக் கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னைத் தலைவராக தேர்ந்து எடுத்துள்Zர்களோ அதேபோல் தான் நம்மை மந்திரிகளாக இருக்க ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பனாகிவிட்டேன் அதனால்தான்.
இப்போ என்னால் ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும். இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல். ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்

பாலச்சந்தருக்கு சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட அனுபவபங்கள்

சிவாஜி கணேசன் நடித்த ‘எதிரொலி’ என்ற ஒரே படத்தைத்தான் கே. பாலச்சந்தர் இயக்கினார். என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு. இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது,
சிவாஜி அலங்கார நிபுணரான இராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர் என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது. நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக் கொண்டு வந்துடுங்க’ என்றார் சிவாஜி.
இதை இராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்
கதைசொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியாருக்கும் போனதில்லை. முதல் தடவையான சூரக்கோட்டைக்கு சென்றேன். அங்கு சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நன்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார் ‘சாப்பிட்டீங்களா?’ என்று கேட்பார். நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால் கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். ‘ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்’ என்றார்.
அதேபோல மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. ‘கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டார்.
ஆனல். பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவினிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால் படம் தள்ளிக் கொண்டே போயிற்று. இதற்கிடையே. ராமகிருஷணன் இறந்து போனார். அதனால் அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன்பிறகு சிவாஜியை வைத்து ஜி.என். வேலுமணி தயாரித்த ‘எதிரொலி’ படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல்நாள் படப்பிடிப்பு சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை, கால் நடுங்கின. ‘பராசக்தி’, ‘மனோகரா’ படங்களை பார்த்து பிரமித்துப் போன எனக்கு அவரை எப்படி இயக்குவது என்ற தடு மாற்றம்.
அவர் நடிப்பை பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும் கை, கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால் ஒரு ‘சக்சஸ்’ அல்லது ‘வெற்றி’ என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல். ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
‘நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்’ என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே ‘அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிaர்களோ அப்படியே நடிக்கிறேன்’ என்றவர். வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினார்.
நான் படித்துக் காட்டினேன். ‘நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!’ என்றார் சிவாஜி.
‘என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கிaங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!’ என்றேன்.
‘இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே..
இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்’ என்று விடாப்பிடியாகச் சொன்னார் சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது. இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி :-
‘ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா...?
இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி. நான் திடுக்கிட்டேன். ‘என்ன சார்... என்ன சொல்aங்க?’ என்று கேட்டேன்.
‘இல்லை நான் நடிக்கும் படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று மீண்டும் சொன்னார். எனக்குப் பெரும் அதிர்ச்சி ‘அப்படியானால். நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா? என்று நான் கேட்க, ‘இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும் நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவசர நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா? என்று சிவாஜி கேட்டார்.
‘இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே’ என்று நான் சொல்ல, ‘அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால். படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று சொல்லி முடித்து விட்டார் சிவாஜி. அவர் சந்தேகப்பட்ட படி சிவாஜி ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை’ இவ்வாறு பாலச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.

நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல். எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், வசனகர்த்தா எட்டுத் துறைகளில் கொடி நாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை

திரையுலகின் அஷ்டாவதானி எனப் புகழ்பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளில் சிறந்த திறமைசாலி ‘அறிவாளி’ நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை, நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல். எடிட்டர். ஸ்டூடியோ அதிபர்.
வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடி நாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸடார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் ‘ராஜமுக்தி’ திரைப்ப டத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் ‘ரத்னமுமார்’ திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த ‘சண்டிராணி’ என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.
தெலுங்கில் 1945 இல் வெளிவந்த ‘ஸ்வர்க்கசீமா’ திரைப்படத்தில் “ஓஹோ...பாவுரமா” என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்குத் திரைப்பட உலகில் ‘பாவுரமா பானுமதி’ என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழந்த என்.டி.ஆர். நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
நடிகர் திலகத்துடன் ‘கள்வனின் காதலி’ யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க ‘கள்வனின் காதலி’யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷ¥ட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939 இல் திரையுலகில் களமிறங்கியர்.
நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷ¥ட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ். ராகவனிடம் “பையன் எப்படி நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!” என்றாராம்.
நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது... நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து “அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது” என்றாராம் பரிதாபமாய்.
(இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும், நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்த காட்சியும் பிரமாதமாகவே இருக்கும்) கல்கியின் ‘கள்வனின் காதலி’, கொங்கு நாட்டுத் தமிழை புகழ்படுத்திய ‘மக்களைப் பெற்ற மகராசி’ ‘அண்ணாவின் ரங்கோன்’ ராதா (நடிப்பின் இலக்கணம் என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்” ‘அம்பிகாபதி’ ‘அறிவாளி’, ‘மணமகன் தேவை’, ‘ராணி லலிதாங்கி’ படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா.
ராஜபக்தி (வில்லி) தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார். “வெயிற்கேற்ற நிழலுண்டு” “வெண்ணிலா ஜோதியை வீசுதே”. “போறவளே போறவளே பொன்னுரங்கம்”, “கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே”, “மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு” போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம் ‘அறிவாளி’ நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார். அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூட என்னால் பார்க்க முடியவில்லை.
தத்துவம் ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா சொந்தமாக தன் மகன் பெயரில் ‘பரணி ஸ்டுடியோ’ என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. ‘பரணி பிக்சர்ஸ்’ பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் ‘மணமகன் தேவை’ என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி Western hero  போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக, அழகுறக் காட்டியிருந்தார்கள்.
ஏவி.எம்.ன் ‘அன்னை’ படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustain music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி “நீயுஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை” என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது. கொங்குநாட்டு தமிழின் பெருமையை நடிகர் திலகம் வாயிலாகப் பறைசாற்றிய ‘மக்களைப் பெற்ற மகராசி’ காவியத்திலிருந்து நடிகர் திலக மும், பானுமதியும் அசத்தும் “போறவளே... போறவளே.. பொன்னுரங்கம்” பாடல் மிகவும் பிரபல்யமானது.