Thursday, October 9, 2014

6 முறை தேசிய விருது பெற்றார், பாலசுப்பிரமணியம்

சிறந்த பின்னணி பாடகர் என்று, 6 முறை தேசிய விருது பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

36 ஆயிரம் பாடல்கள் பாடி உலக சாதனை நìகழ்த்திய பாலசுப்பிரமணியம், தேசிய விருது பெறுவதிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

"அகில இந்தியாவிலும் சிறந்த பின்னணி பாடகர்'' என்ற தேசிய விருதை 6 முறை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.

அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள் வருமாறு:-

1. சங்கராபரணம் (1979) தெலுங்கு.

2. ஏக் துஜே கேலியே (1981) இந்தி.

3. சாகரசங்கமம் (1983) தெலுங்கு. இப்படம், தமிழில் வெளிவந்த "சலங்கை ஒலி''யின் தெலுங்குப்பதிப்பு.

4. ருத்ரவீணா (1989) தெலுங்கு.

5. கானசாகரகானயோகி (1995) கன்னடம்.

6. மின்சார கனவு (1996) தமிழ்.

பாலசுப்பிரமணியம் பெற்ற பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் அளவே இல்லை.

தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1981-ல் பெற்றார்.

சிறந்த பாடகர் என்பதற்காக தமிழக அரசின் விருதை 4 முறையும், ஆந்திர அரசின் விருதை 12 முறையும் பெற்றார்.

சினிமா ரசிகர்கள் சங்கம் 22 முறை விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பேட்டியில், தன்னைப்பற்றிய பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார்.

கேள்வி:- விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இசைத்துறையும் மாறி வருகிறது. இதனால் இசைத்துறை எதிர்காலத்தில் மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இந்த மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் இசைக்குழுவோடு மட்டும்தான் ஒரு பாடலை பதிவு செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டுமே பாடமுடியும். இப்பொழுது பின்னணி இசையை தனியாக சேர்த்துக்கொண்டு பாடல்களை தனியாக பதிவு செய்யும் வசதி வந்த பிறகு ஒரே நாளில் பத்து பனிரெண்டு பாடல்களை ஒரு பாடகரால் பாட இயலும். நான் 36 ஆயிரம் எண்ணிக்கையை தொடுவதற்கும் இந்த விஞ்ஞான வளர்ச்சிதான் காரணமாக இருந்தது. இந்த விஞ்ஞான வளர்ச்சியை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

கேள்வி:- திரையுலகில் உங்களுடைய வாரிசு யார்?

பதில்:- நான் என்ன மகாராஜாவா, எனக்கு வாரிசு யார் என்று சொல்ல! எனக்குப் பிறகு, நிறையப் பேர் பாட வந்திருக்கிறார்கள். அதில் யாரை என்னுடைய வாரிசு என்றுக் கூற முடியும்? மனோ நன்றாகப் பாடுகிறார். உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன் மிகவும் சிறப்பாகப் பாடுகிறார்கள். எல்லோரும் நன்றாக உழைத்துப்பாடி, முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை?

பதில்:- நான் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்டுக் கூறுவது கடினம். எல்லா பாடல்களுமே மக்களுக்கு போய்ச்சேர வேண்டும். எந்தவித குறையுமின்றிதான் பாடுகிறோம். சில பாடல்கள் மட்டுமே மாபெரும் வெற்றியை அடைந்து விடுகின்றன.

கேள்வி:- தமிழ்ப்பாடகர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

பதில்:- கே.ஜே.ஜேசுதாஸ். அற்புதமான குரல் வளம் உள்ளவர். அவர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு, உழைத்து, திரையுலகில் முன்னேறியவர் கே.ஜே.ஜேசுதாஸ். அவர் திரையுலகில் சேர்ந்த பிறகு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்கொண்டு, கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம் இரண்டிலும் முன்னணியில் இருப்பவர்.

கேள்வி:- அரசியலில் இருந்து ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?

பதில்:- எனக்குப் பிடிக்காதது அரசியல். நான் அதிலிருந்து ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுகிறேன். அரசியலை, பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொள்வதோடு சரி.

கேள்வி:- உங்களுக்கு எத்தனை இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியும்?

பதில்:- ஹார்மோனியம், புல்லாங்குழல், பாத்சோ போன்ற இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியும்.

கேள்வி:- உங்களுக்கு எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்? பிடித்த எழுத்தாளர் யார்?

பதில்:- ஆங்கிலத்தில் கதைப் புத்தகங்கள் பிடிக்கும். கிரைம் கதைகளாக இருக்க வேண்டும். வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை வாங்கிப் படித்து ரசித்திருக்கிறேன். சுவையாக எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் எனக்குப் பிடிக்கும்.

கேள்வி:- உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்?

பதில்:- மகாத்மா காந்தி. அவரைப்பற்றி அதிகம் படித்திருக்கிறேன். காந்தி திரைப்படத்தை 11 முறை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த தியாகமும், நாட்டின் மீது அவருக்கு இருந்த பற்றையும் கண்டு வியந்திருக்கிறேன். காந்தி திரைப்படம் தெலுங்கில் வெளியானபோது காந்தியின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க கிடைத்த அரிய வாய்ப்பை, எனது வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

கேள்வி:- ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள், உங்கள் வெற்றிக்குப்பின்னால் யார்?

பதில்:- நான் இந்த பழமொழியை நம்புவதில்லை. என்னுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்ணும் கிடையாது. என் வெற்றிக்கு பின்னால் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.''

இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.

சக்களத்தி படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமான அம்பிகா

மலையாளப் படங்களில் நடித்து வந்த அம்பிகா, 1979-ம் ஆண்டில் தமிழ்ப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். படத்தின் பெயர் "சக்களத்தி.'' இதில் ஷோபா, சுதாகர் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இரண்டாவது கதாநாயகியாக அம்பிகா நடித்தார்.

கே.பாக்கியராஜ் நடித்து டைரக்ட் செய்த "அந்த 7 நாட்கள்'' படத்தில் கதாநாயகியாக நடித்தார், அம்பிகா.

இது சூப்பர் ஹிட் படம். இந்தப் படத்தில் அம்பிகாவின் நடிப்பும் சிறப்பாக அமைந்தது. அதனால் பெரும் புகழ் பெற்றார்.

இசையில் நாட்டம் கொண்ட மலையாள இளைஞனாக பாக்கியராஜ் நடித்தார். வாடகைக்கு வீடு தேடி அலையும் அவருக்கு அம்பிகாவின் வீட்டில் இடம் கிடைக்கும்.

சிறு சிறு நìகழ்ச்சிகளால், பாக்கியராஜ் மீது அம்பிகாவுக்கு காதல் ஏற்படும். இருவரும் வீட்டை விட்டு ஓட முடிவு செய்வார்கள். ஆனால், அம்பிகாவின் பெற்றோர் அதைக் கண்டுபிடித்து, அம்பிகாவை வேறு மாப்பிள்ளைக்கு (ராஜேஷ்) திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

பாக்கியராஜை காதலித்த அம்பிகா, ராஜேஷின் மனைவியாக வாழ விரும்பாமல், தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார். தக்க சமயத்தில் அவரை ராஜேஷ் காப்பாற்றுவார். "இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறேன்'' என்று ராஜேஷ் கூறுவார்.

பாக்கியராஜ்க்கு அம்பிகாவை திருமணம் செய்து வைக்கத் தயாராவார், ராஜேஷ். ஆனால், பாக்கியராஜின் நல்ல உள்ளத்தால், ராஜேசும், அம்பிகாவும் ஒன்று சேருவார்கள்.

புரட்சிகரமான - அதே சமயத்தில், `சென்டிமெண்ட்'டும் கலந்த கதை. மலையாளம் கலந்த தமிழ் பேசி அனைவரையும் அசத்தினார், பாக்கியராஜ்.

"கணவனா, காதலனா?'' என்ற மனப்போராட்டத்தை அழகாகச் சித்தரித்தார், அம்பிகா. இந்தப் படத்தின் மூலம், முதல் வரிசை கதாநாயகிகள் வரிசையில் இடம் பெற்றார்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது:-

"அந்த 7 நாட்கள் படத்தில் நடிக்க, பாக்கியராஜ் சார் என்னை அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கதைச் சுருக்கத்தை என்னிடம் கூறியபோது, கதாநாயகிதான் மலையாளம் கலந்த தமிழில் பேச வேண்டி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பாக்கியராஜ்தான் மலையாளியாக நடித்தார். மலையாளப் பெண்ணான நான், தமிழ்ப் பெண்ணாக நடித்தேன்!

பாக்கியராஜ் சார், மலையாளமும் தமிழும் கலந்து டயலாக் பேசுவார். "நான் சரியாகப் பேசுகிறேனா'' என்று அவ்வப்போது என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

இந்தப் படத்திலேயே மிக முக்கியமானது "கிளைமாக்ஸ்'' காட்சிதான். அதைப் படமாக்குவதற்கு, ஒரு மாத இடைவெளி விட்டார்கள்.