Tuesday, November 12, 2013

சாரதாவை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவாஜிகணேசன்

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (ஊர்வசி பட்டம்) மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.
இவரை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், சிவாஜிகணேசன். சாரதாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி ஆகும். தந்தை வெங்கடேசலு. தாயார் சத்தியவதிதேவி. சாரதா ஆந்திராவில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆந்திராவில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.
சாரதா சிறுமியாக இருந்தபோதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். 1956 ஆம் ஆண்டு என். டி. ராமராவ் நடித்த ‘கன்னியாசுலகம்’ என்ற படத்தில் சிறுமி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் ‘ரத்தக்கண்ணீர்’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடித்தார்.
தனது 14 வது வயதில் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். 1961 ஆம் ஆண்டு நடிகர் நாகேஸ்வரராவின் சொந்த படக் கம்பெனியான அன்னபூர்ணா பிக்சர்ஸ் மூலம் ‘இத்தரு பித்ருலு’ (இரு நண்பர்கள்) படத்தில் தங்கை வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
இது பற்றி சாரதா கூறியதாவது :-
‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு இல்லை. சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் என் தாயாருக்கு இருந்ததால், 6 வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 13 வயதில் நாடகத்தில் எப்போதாவது ஒரு முறை நடித்து வந்தேன்.
சென்னைக்கு வந்தபின், படங்களில் சிறுமி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு முறை ‘அனார்கலி’ என்ற படத்தில் அஞ்சலிதேவி நடித்துக்கொண்டு இருந்தபோது அவரை சந்தித்தேன். தன் தலையில் இருந்த கிரீடத்தை, என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார் சிறந்த நடிகராக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.
என் தாயாரின் முயற்சியால்தான் நான் கலைத்துறைக்கு வந்தேன். இல்லையென்றால் கலைத்துறைக்கு வந்து இருக்க முடியாது. எல். வி. பிரசாத், புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.
நானும் அங்கு சினிமாவில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு நாகேஸ்வரராவ் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’
இவ்வாறு சாரதா கூறினார்.
இந்த நிலையில் ‘திப்பதி’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘குங்குமம்’ என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.
கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர் செய்தனர். அதனைத் தொடர்ந்து ‘துளசிமாடம்’, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972 ஆம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் ‘ஞானஒளி’ படத்திலும் 1978 ஆம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் ‘என்னைப்போல் ஒருவன்’ படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது :-
‘திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ‘குங்குமம்’ படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.
அப்போது எனக்கு கெரக்டர் நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். ‘குங்குமம்’ படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.
அதற்கு சிவாஜி, ‘நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!’ என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.
ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு ‘இந்த கெமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லித் தருவார்’ இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.

பாலு அன்று பறக்கவிட்ட பாட்டுக்கொடி இன்றும் பாட்டொளி வீசி பறக்கிறது

சோதனைகளைச் சந்தித்து துவண்டுவிடாமல் போராடி வெற்றி பெறுபவர்கள் மட்டுமே சாதனைகள் பலவற்றைச் செய்கிறார்கள்.
இது சரித்திரம். நமக்குச் சொல்லும் உண்மை. இந்த உண்மை சினிமா உலகத்திற்கு அதிகமாகப் பொருந்தும் திறமையிருந்தும் வாய்ப்பில்லாத ஏராளமானவர்கள் நம்பிக்கையுடன் போராடும் இடம் சினிமா உலகம். காரணம், என்றாவது முன்னுக்கு வந்தால் பணத்தோடு புகழும் கிடைக்கும். இதைக் கனவுத் தொழிற்சாலை என்று பலரும் அழைக்கிறார்கள்.
சினிமா உலகில் வெற்றி பெற்று நிலைத்து நிற்பவர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அது நம்பிக்கையில் வாழும் தொழிற்சாலை என்பது புரியும். என்றாவது ஒருநாள் சினிமா உலகின் சரித்திரத்தில் நாம் இடம்பெறுவோம் என்ற நம்பிக்கையோடு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சினிமா உலகில் வளைய வருபவர்கள் இன்றும் பலர் உண்டு. இது போன்ற சோதனைகள் பலவற்றைச் சந்தித்த அனுபவம் எஸ். பி. பிக்கு உண்டு. அதில் ஒரு மிகப் பெரிய சோதனைதான் தெலுங்குப்பட உலகில் ஏற்பட்டது.
நடிகர் கிருஷ்ணாவைச் சந்தித்ததிலிருந்து புத்துணர்ச்சி பெற்ற பாலு என். டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பாட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதே நேரத்தில் மாபெரும் இசை மேதை கண்டசாலா மாதிரி பாடவும் அவருடைய மனம் இடம் தரவில்லை. தன் குரலிலேயே என்.டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பொருந்தும் மாதிரி பாட முடிவெடுத்தார் பாலு.
ஏ. என். ஆர். என். டி ஆர். நடித்த படங்களை, சமயம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தார் பாலு. இரு பெரும் நடிகர்களும் ஒரு குறிப்பிட்ட டைமிங்கில் பேசுவதைக் கவனித்தார்.
நடிப்புத் துறையில் எல்லாவற்றுக்கும் ஷ¤ட்டிங்கிற்கும் டைமிங்குந்தான் முக்கியம். சண்டைக் காட்சிகளில் அடிபடாமலே சண்டை போட டைமிங் முக்கியம். இதே மாதிரி பாடல் காட்சிகளில் பின்னணிக் குரலுக்கேற்ப வாயை அசைக்க டைமிங் தேவை. எல்லாத் துறைகளிலும் டைமிங் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாத்துறையில் வெற்றிபெற டைமிங்கோடு நல்ல டைமும் தேவை.
பாலுவின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் காட்சியும் வந்தது. அவர் அந்த இயக்குநரிடம் தன் எண்ணத்தைக் கூறி சம்மதம் வாங்கி, பாடலைப் பாடினார். பாடல் அமோகமாக வெற்றி பெற்றது. பார்த்தவர்கள் பாலு பாடுவதாகவே நினைக்கவில்லை. ஏதோ நாகேஸ்வரராவ் பாடுவதாகவே நினைத்தார்கள். இன்றளவும் பாலு ஏ. என். ஆர். அவருடைய மகன். எல்லோருக்கும் பாடி வருகிறார். இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கருதுகிறார். அன்று பறக்கவிட்ட பாலுவின் பாட்டுக்கொடி இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுதான் இருக்கிறது.
தெலுங்குப் பட உலகைப் பிடித்த பாலு தன் பார்வையை தமிழ்ப்பட உலகை நோக்கித் திருப்பினார்.

எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

எம்.ஜி.ஆர். பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் சில.
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி (1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜீ.ஆர். அத்தனையும்என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என். ஜானகி.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா.... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் iட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி. ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ். வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம். ‘மலையக்கள்ளன’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது.
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான் உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரி¨மைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மூன்றும் எம்.ஜி.ஆர். டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
னிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம் அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரை முருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான் அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிடங்களுக்கு ஒரு களைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.
“பொன்னியின் செல்வன்” கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து “நான் எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமா நடிகர்” என்று அறிமுகம் செய்துகொள்வார்.
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே’ என்றுதான் அழைப்பார்.
அடி¨மைப் பெண் பட ஷ¥ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைக் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர் நடிகர் எம்.கே. ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறைய பின்பற்றினார். எம்.ஜி.ஆர்.
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி கண்ணாடி இருந்தாதான் கண்டுபிடிப்பாங்க போல” என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
“நான் ஏன் பிறந்தேன்” ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதைத் தொடர் அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய “எனது வாழ்க்கை பாதையிலே” தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றுப் பெறவில்லை அவர் பெருமைகள்.

உலக சினிமா

* நியூயோர்க்கில் உள்ள ‘§டியோ சிட்டி மியூசிக் ஹால்’ என்ற சினிமா தியேட்டரே உலகில் மிகவும் பெரியது. இதில் ஒரே சமயத்தில் 6400 பேர் உட்கார்ந்து சினிமா பார்க்கலாம்.
* மறைந்த தயாரிப்பாளர் ‘சாண்டோ சின்னப்பதேவர்’ தான் தயாரிக்கும் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தன் முகத்தைக் காண்பிக்காமல் இருக்கமாட்டார். இவரைப் போல மயிர்க்கூச்செறியும் மர்மப் படங்களைத் தயாரித்து உலகப் புகழ்பெற்ற ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ கிற்கும் இந்தப் பழக்கம் உண்டு. தான் தயாரிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வினாடியாவது தம் தலையை நீட்டி வைப்பார்.
அவர் தயாரித்த ‘லைட் போட்’ என்ற படத்தில் ஒன்பது நடிகர்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. அவரது வழக்கப்படி தன் த¨லையைக் காண்பிப்பதற்கு அந்தப் படத்தில் இடம் இல்லாதிருந்தது.
ஹிட்ச்காக் தமது வழக்கமான ஆசையை இந்தப் படத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றே அனைவரும் கருதியிருந்தார்கள். ஆனால் படத்தின் கடைசிக் கட்டத்தில் நடிகர் ஒருவர் பத்திரிகையைப் பார்க்கும் காட்சி வந்தது. அந்தப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் காணப்பட்டது. அந்த விளம்பரத்தில் ‘ஹிட்ச்காக்’ படம் இடம்பெற்றிருந்தது.
* பக்திப் படங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஒரு குருமகா சந்நிதானத்தின் (சாமியாரின்) அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டு வெளிவந்த தமிழின் முதல் படம் ‘சந்திரகாந்தா’ (கதை ஜே. ஆர். ரங்கராஜு : இயக்கம் பி. கே. ராஜா சாண்டோ, தயாரிப்பு ஜுபிடர் பிக்சர்ஸ்)
* பேரறிஞர் அண்ணா எழுதிய புகழ்பெற்ற நாடகங்களுள் ஒன்று ‘ஓர் இரவு’ இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டது. இதனை முதன் முறையாக ‘ப. நீலகண்டன்’ இயக்கினார். இப்படத்தில் ‘ஏ. நாகேஸ்வரராவ்’ முதன் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த ஆண்டு 1951.
* ட்ரூமன் கேபார்ட் என்ற நாவலாசிரியர் எழுதிய சிறுகதையைப் படமாக்க ஐந்து இலட்சம் டொலருக்கு வாங்கினார் படத் தயாரிப்பாளர்.... இது இங்கிலாந்தில்....ஹிட்ச்காக் ஒரு கட்டுரையில் ‘சஸ்பென்ஸ்’ பற்றி இவ்வாறு கூறுகிறார். ‘சஸ்பென்ஸ்’ என்பது கொலை, கொள்ளைகள் நிறைந்த கதைகளில்தான் இடம்பெற வேண்டும் என்று சிலர் நினைப்பது பைத்தியக்காரத்தனமானது.
வெறும் காதல் மட்டுமே உள்ள கதையில்கூட சஸ்பென்ஸ் இருக்க முடியும். காதலர்கள் கடைசியில் ஒன்றாக இருக்கின்றார்களா... என்பதே ஒரு சஸ்பென்ஸ்தான் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவலை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய எல்லாக் கதைகளுமே ‘சஸ்பென்ஸ்’ கதைகள் தான்.
* ‘நல்ல தம்பி’ படத்திற்கு கதை வசனம் எழுதியதற்காக பேரறிஞர் அண்ணா கலைவாணர் என். எஸ். கேயிடம் எந்தவித சன்மானத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், என். எஸ். கே. அண்ணாவிற்கு ஒரு கார் வாங்கி கொடுத்திருந்தார். இந்தக் காரையே அண்ணா, கலைவாணர் கடைசி காலத்தில் கஷ்டப்படும்போது திரும்பிக் கொடுத்துவிட்டதான செய்தி பல ரசிகர்களுக்குத் தெரியாது.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
நான் பாத்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்.
பாடல்: நான் பார்த்ததிலே
திரைப்படம்: அன்பே வா
பாடியவர்: டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1966

Friday, November 1, 2013

பாலுவின் முதல் தமிழ் பாடல் இதுவரை வெளியாகவில்லை

“முதல் கோணல் முற்றும் கோணல்” என்ற பழமொழி பொய்யானது குறித்து மகிழ்ச்சி
nkல்லிசை மன்னரைச் சந்தித்த ஒரு வருடத்திற்குப் பின் அவரை மீண்டும் பாலு எங்கே சந்தித்தார் தெரியுமா? அது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் நடந்த சந்திப்பு ஒரு தெலுங்கு பாடலை பாடிவிட்டு பாலு வெளியே வர, அதே ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பாடல் பதிவிற்காக மெல்லிசை மன்னர் உள்ளே நுழைந்தார். பாலு அவரைப் பார்த்து ‘விஷ்’ செய்ய தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார் எம்.எஸ்.வி.
தன்னை எம்.எஸ்.வி. மறந்து விட்டார் என்று பாலு நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார். உள்ளே சென்ற மெல்லிசை மன்னர் திரும்பி வந்து பாலுவை கூப்பிட்டார். “தம்பி, நீதானே அன்னைக்கு ஸ்ரீதர் ஒபிசிலே என்னைப் பார்த்தே” என்றார்.
“ஆமாங்க” என்றார் பாலு
“அதுக்கு அப்புறம் ஏன் என்னை வந்து பார்க்கலே” என்றார் எம்.எஸ்.வி.
“நீங்கதான் என் தமிழை இம்பரூவ் பண்ணச் சொன்னீங்களே, அதுதான் உங்களை வந்து பார்க்கலை”
“இப்ப உங்கள் தமிழ் நல்லாத்தானே இருக்கு? நீங்க நாளைக்கே என்னை வந்து பாருங்க” என்று கூறிய எம்.எஸ்.வி. தன் உதவியாளர் நாராயணனைக் கூப்பிட்டார்.
“நாராயணா, இந்தப் பையனை நாளைக்கு கொம்போசிங் வரச்சொல்லு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாள் “ஹோட்டல் ரம்பா” என்ற படத்திற்காக கொம்போஸிங் நடந்தது. பாலுவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள். கொம்போஸிங் நடந்தது. அடுத்த நாள் ரெக்காடிங் அது ஒரு ஜாலி டைப் பாடல். பாடல் நன்றாக வந்திருப்பதாக எல்லாம் கூறினார்கள். ஆனால் பாலு முதலில் பாடிய படம் இதுவரை வெளியாகவில்லை.
இதுபற்றி பாலுவிடம் கேட்டால், “என்னுடைய முதல் தமிழ் பாடல் இதுவரை ஏனோ வெளியாகவில்லை என்பது வருத்தம்தான் ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழி பொய்யானது குறித்து மகிழ்ச்சி, இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் கூட தன்னுடைய முதல் ரெக்கார்டிங் போது பவர்கட்டானது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார்.
பவர்கட்டானது கெட்ட சகுனமாக அவருக்கு அமையவில்லை அதே மாதிரி, என் முதல் பாடலும் வெளியாகாமல் போனது எனக்கும் கெட்ட சகுனமாக அமையவில்லை” என்கிறார். வாழ்க்கையில் எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பாலுவிற்கு என்றுமே உண்டு.
அடுத்து பாலு, மெல்லிசை மன்னரின் இசையில் “சாந்தி நிலையம்” படத்திற்காக “இயற்கையென்னும் இளைய கன்னி” என்ற பாடலை பி. சுசிலாவுடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன்னரே “ஆயிரம் நிலவே வா” பாடல் வெளியாகி எஸ்.பி.பி.என்ற பெயர் (பிரபல்யமாகி விட்டது. இதற்கிடையில் 15 படங்களில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடிவிட்டார் பாலு.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகிவிட்ட பாலு சொந்தமாக ஓர் இசைக்குழு நடத்த ஆரம்பித்தார். அவரது இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசித்தது இன்றைய இசைஞானி இளையராஜா அன்று அவருடைய பெயர் ‘ராஜ’தான். கங்கை அமரன் கிட்டார் வாசிக்க, அவரது சகோதரர் பாஸ்கர்... என்று அவரது குடும்பமே எஸ்.பி.பியுடன் இணைந்து பணியாற்றி வந்தது. சினிமா உலகில் பிரபல்யம் ஆன பின்பு எஸ்.பி.பி.க்கு நிறையக் கச்சேரிகள் கிடைத்தன.
அவர் பாடிய பாடல்கள் மட்டும் இல்லாமல் மற்ற பின்னணி பாடகர்களின் பாடல்களையும் எஸ்.பி.பி. மேடையிலே பாடிவந்தார். டி.எம்.எஸ். குரலுக்கு மட்டும் பாலுவின் நண்பர் “பாபு வாசு” என்பவர் பாடினார். அசல் டி.எம்.எஸ். மாதிரியே பாடக்கூடிய குரல்வளம் பெற்றவர் வாசு. பாலு புகழேணியின் உச்சிக்குச் சென்ற காலகட்டத்தில் ஒரு சமயம், ஒரு கார் விபத்தினால் வாசு பாடுவதை விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது, மேலும் பாலுவின் நல்ல நண்பர்களில் ஒருவராக வாசு திகழ்ந்தார்.
தமிழ்ப்பட உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட பாலுவிற்கு ஒரு சோதனைக் காலமும் வந்தது. மற்றொரு திறமையான பாடகராலேயே ஆனால், பாலுவின் கண்ணோட்டத்தில் அந்தப் பாடகர்தான் பாலுவுக்கு மிகவும் பிடித்த பாடகர். பாலுவிற்கு தமிழில் பாடல்கள் குறைய்க் காரணமாக இருந்த பாடகர் யார் தெரியுமா? எந்தப் பாடல் மூலம் இந்த நிலை உருவாயிற்று தெரியுமா? பாடலைச் சொன்னால் பாடகர் யார் என்று உங்களுக்கே தெரிந்துவிடும்.
பாலுவிற்கு ஒரு சவாலாக அமைந்த அந்தப் பாடல் எது? (தொடரும்)

தமிழ்த் திரையில் சாதனைப் பெண்கள் முதல் இயக்குநர் டி.பி.ராஜலட்சுமி

ஆண்களே ஆதிக்கம் செலுத்திய திரையுலகில் ஒரு பெண் இயக்குனராக வெற்றி பெறுவதென்பது இப்போதும் கூட சாதனைதான். எனில் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண், திரைப்படத்தை இயக்குவது என்பது ஆண்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் செயல். அந்த செயலை செய்தவர் டி.பி. ராஜலட்சுமி.
இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்தவர். இசையும் நடனமும் பயின்ற அவர், நாடகக்காவலர் சங்கரதாஸ் சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பெயர் பெற்றார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்ததும், ஆச்சாரமான அவரது குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப, ராஜலட்சுமியை விவாகரத்து செய்தார் அவரது கணவர்.
மெளனப் படங்களை இயக்கிய ராஜாசாண்டோவின் இயக்கத்தில் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் ராஜலட்சுமி நடித்தார். தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) படத்தில் நடித்த பெருமை ராஜலட்சுமிக்கு உண்டு. எல்லீஸ் ஆர்டங்கன் இயக்கத்தில் சீமந்திரி, கே. சுப்ரமணியம் இயக்கத்தில் பக்த குசேலா, டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் பரஞ்ஜோதி எனத் தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்தார்.
தனது 20வது வயதில் டி.வி. சுந்தரத்தை காதல் மறுமணம் செய்தார் ராஜலட்சுமி. மல்லிகா என்ற ஆதரவற்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்த அந்த இணையருக்கு, அதன்பின் பிறந்த குழந்தையின் பெயர் கமலா. அக்குழந்தை பிறந்த பிறகு 1936 இல் டி.பி.ராஜலட்சுமி இயக்குநரானார். படத்தின் பெயர் மிஸ் கமலா. இப்படம்தான் தமிழில் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய முதல் படம். அதன்பின் மதுரை வீரன் (எம்.ஜி.ஆர். நடித்தது அல்ல) என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். திரைத்துறையை பெண்களாலும் ‘ஆட்டிவைக்க’ முடியும் என நிரூபித்தவர் டி.பி. ராஜலட்சுமி.
முதல் சகலகலாவல்லி - பானுமதி:
அஷ்டாவதானி எனப் பெயர் பெற்றவர், நடிகை பானுமதி. ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர். அவரது அப்பா வெங்கடாச்சலய்யா கர்நாடக இசை அறிந்த மேடை நாடகக் கலைஞர். அதனால் சிறு வயதிலேயே பானுமதிக்கு பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் பயிற்சி கிடைத்தது. ‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்கு படத்தில் 1938 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் பானுமதி. தமிழ்ப் படங்களிலும் அவருடைய நடிப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட ‘தர்மபத்தினி’ என்ற படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பானுமதி.
நாகேஸ்வரராவுடன் லைலா மஜ்னு, அறிஞர் அண்ணா வசனத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. எடுத்த நல்லதம்பி, எம்.கே. ராதாவுடன் அபூர்வ சகோதரர்கள், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் போன்ற படங்களில் நடித்த பானுமதி, 1953 இல் சண்டிராணி என்ற படத்தை இயக்கினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கதை, கலைஞர் மு. கருணாநிதியின் வசனம், நாயகனாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மெகாஹிட் படமான மலைக்கள்ளனில் பானுமதிதான் நாயகி.
சிவாஜியுடன் கள்வனின் காதலி படத்தில் முதன் முதலில் ஜோடி சேர்ந்த பானுமதி அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், நாடோடி மன்னன், தாய்க்குப்பின் தாரம், ராஜாதேசிங்கு, கலையரசி, காஞ்சித்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ரங்கோன்ராதா, மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, ராணி லலிதாங்கி, ராஜபக்தி, அறிவாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சதாரம், அன்னை உள்ளிட்ட பல படங்களில் அவருடைய நடிப்பு முத்திரை பதித்தது. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த போதும் பானுமதிக்கு படங்களில் தனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அளிக்கப்பட்டு வந்தன. தங்களுக்கு ஜோடி பானுமதி என்றால் பெரிய நடிகர்கள் கூட சற்று அச்சத்துடன் சில அடிகள் தள்ளி நின்றே நடிப்பார்கள்.
நடிப்பில் ஹீரோக்களுடன் போட்டிபோட்ட பானுமதி, தனித்துவம் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் சொந்தக் குரலில் பாடியும் வந்தார். (எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நாயகர்களுக்குப் பாடல் காட்சிகளில் பின்னணிக் குரல்தான்) ‘அழகான பொண்ணு நான்.. அதற்கேற்ற கண்ணு தான்...’ ‘மாசிலா உண்மைக்காதலே....’, ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா....’ ‘ஆசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’ ‘சம்மதமா நான் உங்கள்கூட வர சம்மதமா’.... என அவர் பாடிய பல தமிழ்ப்பாடல்கள் இன்றும் நம் காதுகளுக்கு சுகம் தரும்.
1986 இளையராஜாவின் இசையில் ‘கண்ணுக்கு மை எழுது’ என்ற படத்தில் ‘வாடா மல்லியே நான் சூடா மல்லியே’ என்ற பாடலைப் பானுமதி பாடினார். 1992 இல் ‘செம்பருத்தி’ படத்திலும் இளையராஜா இசையில் ‘செம்பருத்திப் பூவு.. சித்திரத்தைப் போல’ என்ற பாடலை பாடினார் பானுமதி. தெலுங்கில் சில நடிகைகளுக்கும் பானுமதி பின்னணி பாடியுள்ளார்.
படங்களை இயக்கியதுடன் இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் (எடிட்டர்) பானுமதி செயல்பட்டார். அதனால்தான் அவரால் தொடர்ச்சியாக சொந்தப் படங்களைத் தயாரிக்க முடிந்தது. நாயகியாக நடிப்பது குறைந்த பிறகும் தனக்குப் பிடித்த கதைகளை அவர் இயக்கி வந்தார்.
குழந்தைகளுக்காக அவர் இயக்கிய ‘பத்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கதை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து தெலுங்கில் (நாலு நேனு) தனிப்புத்தகமே எழுதி அதற்காக தேசிய விருதும் பெற்றவர் பானுமதி. 2003இல் அவருக்கு பத்மபூஷன் விருதை இந்திய அரசு வழங்கியது. தமிழ்த் திரையுலகின் (தென்னகத் திரையுலகின்) சகலகலாவல்லி பானுமதி.
முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி:
தமிழ்த் திரையுலகின் முதல் கனவுக்கன்னி, டி.ஆர்.ராஜகுமாரி. முகப்பொலிவும் பேசும் கண்களும் பல ரசிகர்களின் தூக்கத்தைக்கெடுத்தன. தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயிதான் திரையுலகில் டி.ஆர். ராஜகுமாரி எனப் புகழ்க்கொடி நாட்டியவர். நடனமும் பாட்டும் அறிந்த ராஜகுமாரி அறிமுகமான படம், குமார குலோத்துங்கன்.
1931 இல் வெளியான அப்படம், அப்படியொன்றும் வெற்றிபெறவில்லை. தமிழ்த் திரையுலகம் தனது முதல் கனவுக்கன்னியை அடையாளம் காண மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1941 இல் வெளியானது ‘கச்ச தேவயானி’ கே. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான இப்படம் ராஜகுமாரிக்கு பெயரையும் ரசிகர்களுக்கு தங்கள் மனதில் குடியிருக்க ஒரு நடிகையையும் தந்தது.
அடுத்து வந்தது தமிழின் மெகாஹிட்டான ‘ஹரிதாஸ்’, தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி ஜோடி ‘:wsஜி நடித்த இப்படத்தில்தான் ராஜகுமாரியின் முழுப் பரிமாண நடிப்பும் அழகும் வெளியிடப்பட்டன. 1944 இல் வெளியான இப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெருவெற்றிப்படம். அதில் இடம் பெற்ற ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டிற்கு பாகவதருடன் ஜோடி சேர்ந்து கலக்கியிருந்தார் டி.ஆர்.ராஜகுமாரி.
அன்றைய முன்னணி நாயகர்களான பி.யு. சின்னப்பா டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் நடித்த ராஜகுமாரி அடுத்த தலைமுறை நாயகர்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி ஆகியோருடனும் நடித்தார். கலைஞரின் திரைக்கதை வசனத்திலும் சிவாஜியின் அபார நடிப்பினாலும் உருவான ‘மனோகரா’ படத்தில் வில்லி பாத்திரமான வசந்த சேனையாக நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி. எம்.ஜி.ஆருடன் குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்.
காலமாற்றத்தால் புதுபுது நாயகிகள் திரையுலகில் கொடிநாட்டியபோது, டி.ஆர். ராஜகுமாரி தன் சகோதரரும் இயக்குநருமான டி.ஆர். ராமண்ணாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற அவர்களது பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, 1953 இல் வெளியான வாழப்பிறந்தவன். அடுத்த ஆண்டில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யைத் தயாரித்தனர். படம் வெற்றிபெறவில்லை. எனினும் குலேபகாவலி, பாசம், பெரிய இடத்துப்பெண், பணம் படைத்தவன், பறக்கும்பாவை என எம்.ஜி.ஆரை வைத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களைத் தயாரித்தார். டி.ஆர். ராஜகுமாரி கடைசியாக நடித்த படம், ‘வானம்பாடி’ சென்னை தியாகராய நகரில் அவர் பெயரிலேயே ராஜகுமாரி என்ற திரையரங்கத்தையும் கட்டினார்.
ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக இருந்த டி.ஆர். ராஜகுமாரி தனக்கான வாழ்க்கை நாயகனைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. தனிமையிலேயே வாழ்ந்த அவர் 1999 ஆம் ஆண்டு தனது 77வது வயதில் காலமானார். அவருடைய கடைசிக்காலங்களில் யாரையும் சந்திக்கவில்லை. அவரது புகைப்படமும் வெளிவராமல் பார்த்துக்கொண்டார். இறக்கிவைக்க முடியாத சோகத்துடன் முடிந்து போனது அந்த கனவுக் கன்னியின் வாழ்வு.

உலக சினிமா

* இந்திப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குனர் வி. சாந்தாராம். இவர் தனது பிரபாத் ஃபிலிம் கம்பெனியில் தயாரித்த படம் - ‘சீதா கல்யாணம்’, வெளிவந்த ஆண்டு 1933. மொழி தமிழ்.
* 1949 ஆம் ஆண்டு ‘மனதேசம்’ என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும், 1950 ஆம் ஆண்டு கதாநாயகனாக ‘பாதாள பைரவி’ மூலம் அறிமுகமானவர் ‘என்.டி.ராமாராவ்’.
* 1938 ஆம் ஆண்டு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘தக்ஷயாகம்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த வேடம் என்ன தெரியுமா? ‘மகா விஷ்ணு’.
* தான் விரும்பியவனை திருமணம் செய்து கொள்ள பெண்ணுக்குள்ள சுதந்திரத்தை உரிமையை முழக்கிய தமிழகத்தின் ஆரம்பகால கலைப் படைப்புகளில் முதன்மையானது ராஜா சாண்டோ தயாரித்தளித்த படம் ‘அனாதைப் பெண்’. ராஜா சாண்டோ மெளனப் படங்களில் நடித்து இந்தியாவில் புகழ்பெற்ற புதுக்கோட்டை தமிழர் ஆவார்.
* சென்னை நகரில் ‘சீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டுடியோவை ஏ. நாராயணன் என்பவர் உருவாக்கினார். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு ‘சவுண்ட் சிட்டி’ உருவான நாள் 1.4.1934. அந்தஸ்டுடியோவில் தயாரித்த படம் “ஸ்ரீநிவாச கல்யாணம்”.
* சேத்துப் பட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உருவான இந்த ஸ்டுடியோவில் ஏ. நாராயணனின் துணைவியார் மீனா நாராயணன் ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
* திரைப்படங்களில் அந்த காலத்தில் இயக்குனர் பெயரும், கம்பெனி பெயரும் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. நடிகர் நடிகைகளின் பெயர்களையும் இந்தியப் படங்களில் முதன் முதலில் வெளியிடச் செய்தவர் ‘ராஜா சாண்டோ’ ஆவார்.
* 1923 ஆம் ஆண்டில் சென்னையில் ‘கோவர்த்தனா’ என்ற ஆய்வுக்கூடம் (ழிaboratory) ஆர்.எஸ். பிரகாஷ் என்பவரால் முதன் முதலில் நிறுவப்பட்டது.
* சினிமாச் செய்திகளை வெளியிடுவதற்காக முதன் முதலாக ‘மூவி மிரர்’ என்ற பத்திரிகை 1927 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் ‘எஸ்.கே. வாசகம்’ ஆவார்.
* 1917 ஆம் ஆண்டு நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பெற்ற ‘திரெளபதி வஸ்திராபகரணம்’ என்ற திரைப்படத்தில் திரெளபதியாக நடிப்பதற்கு எந்த தமிழ்ப் பெண்ணும் நடிக்க முன்வராத காரணத்தால் மேலை நாட்டைச் சார்ந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரால் நடிக்கப்பெற்றுக் காட்சி படமாக்கப்பட்டது.
* திரைப்படத்தில் ஆண் வேடத்தில் நடித்த முதல் பெண்மணி ‘கே.பி. சுந்தராம்பாள்’ ஆவார். அதேபோல் ஒரு இலட்சம் ரூபாய் நடிப்பு ஊதியம் பெற்ற முதல் தமிழ்க் கலைஞர் என்கிற பெருமையையும் இவரே பெறுகிறார்.
* 1936 ஆம் ஆண்டில் ‘ராஜா தேசிங்கு’ என்னும் முதல் சரித்திரப் படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.
* 1937 ஆம் ஆண்டில் சேலம் மொடர்ன் தியேட்டர்ஸின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சதி அகல்யா’ தயாரித்து வெளியிடப்பட்டது.
* ஏ.வி. மெய்யப்ப செட்டியார் (ஏ.வி.எம்) தயாரித்த ‘நந்தகுமார்’ 1938 இல் வெளிவந்தது. இப்படத்தில் தான் ‘டி.ஆர்.மகாலிங்கம்’ முதன் முறையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில்தான் முதன் முறையாக சொந்தக் குரலில் பாடாமல் பின்னணி பாடலுக்கு வாயசைக்கும் முறை புகுத்தப்பட்டது.