Tuesday, March 13, 2012

 

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை பானுமதி




தென்னிந்திய நடிகைகளில் நடிப்பின் சிகரத்தை தொட்டவர் பி. பானுமதி. இதனால் ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
ஆந்திராவில் உள்ள தெட்டாவரம் கிராமத்தில் 1925ல் பிறந்தவர் பானுமதி. தந்தை பெயர் பொம்மராஜி வெங்கடசுப்பையா. இளம் வயதிலேயே நடிப்பிலும், இசையிலும் பானுமதிக்கு ஆர்வம் ஏற்பட்டது. பானுமதி தனது 13 வது வயதிலேயே திரை உலகில் நுழைந்தார்.
‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்குப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அவர் பாடிய பாடல்கள் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டன. இதன்பின், பிரபல டைரக்டர் பி.புல்லையா, ‘மாலதி மாதவம்’ என்ற படத்தில் பானுமதியை கதாநாயகியாக நடிக்க வைத்தார். பின்னர், ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கருட கர்வபங்கம்’, ‘கிருஷ்ண பிரேமா’ ஆகிய படங்களில் பானுமதி நடித்தார். ‘கிருஷ்ண பிரேமா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பானுமதிக்கும், துணை டைரக்டர் ராமகிருஷ்ணாவுக்கும் காதல் ஏற்பட்டது.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 8.8.1943 ல் ராமகிருஷ்ணாவை பானுமதி மணந்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட வேண்டும் என்பதே பானுமதியின் எண்ணம். ஆனால், அவர் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
திரைப்பட முன்னோடியான பி.என்.ரெட்டி (நாகிரெட்டியின் சகோதரர்), ராமகிருஷ்ணாவை சந்தித்து, ‘நான் தயாரிக்க இருக்கும்’ “சொர்க்க சீமா’ படத்தில் பானுமதி நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
பானுமதி மீண்டும் சினிமாவில் நடிப்பதை ராமகிருஷ்ணா விரும்பவில்லை. எனினும், பி.என்.ரெட்டியின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. ‘இந்த ஒரு படத்தில் மட்டும் நீ நடி’ என்று பானுமதியிடம் கூறினார்.
சாதாரண நிலையில் இருந்து பெரிய நட்சத்திரமாக உயர்ந்த நாடக நடிகை, ஒரு டைரக்டரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏற்கனவே திருமணம் ஆன டைரக்டரின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது.
குடும்பப் பிரிகிறது. பல திருப்பங்களுக்குப் பிறகு, அவர் குடும்பம் ஒன்று சேருகிறது. வி.நாகையா டைரக்டராகவும், பானுமதி நடிகையாகவும் நடித்தனர். படம் பிரமாதமாக அமைந்தது, வரலாறு கண்டறியாத வெற்றியைப் பெற்றது.
அந்தப் படம் தமிழ்நாட்டிலும் திரையிடப்பட்டு, தமிழ்ப்படம் போல வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில், கையில் வெள்ளைப் புறாவை வைத்துக்கொண்டு, ‘ஓகோ... கோ... பாவுரமா!’ என்று பானுமதி பாடுவார். தமிழ் ரசிகர்களும் அந்தப் பாட்டை முணுமுணுத்தனர். ‘சொர்க்க சீமா’ அடைந்த வெற்றி காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தை பானுமதி கைவிட்டார்.
இந்த காலகட்டத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி விடுதலையடைந்த எம்.கே. தியாகராஜா பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ் படம். இது மற்றும் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, எம்.ஜி. சக்ரபாணி ஆகியோரும் நடித்த இந்தப் படம் 9.10.1948ல் வெளிவந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அடுத்து, பேரறிஞர் அண்ணாவின் கதை - வசனத்தில், என்.எஸ். கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்த ‘நல்லதம்பி’ என்ற படத்தில் பானுமதி நடித்தார். 4.2.1949ல் வெளியான இப்படம் வெற்றி பெற்றது. இதில், பானுமதியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது.
அடுத்து, பி.யு. சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ என்ற படத்தில் பானுமதி நடித்தார். இரண்டு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தின் மற்றொரு நாயகி கே. மாலதி இந்தப் படத்தை, கிருஷ்ணன் – பஞ்சு டைரக்ட் செய்தனர்.
15.12.1949ல் வெளிவந்த ‘ரத்னகுமார்’ சுமாராகவே ஓடியது.
பானுமதியின் நடிப்புத் திறமையை முழுவதுமாகப் பிரகாசிக்கச் செய்த படம் ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ இதில் பானுமதியின் நடிப்பை ‘அற்புதம்’ என்றே கூறவேண்டும். படத்தில் இரட்டை வேடங்களில் மிகப்பிரமாதமாக நடித்தார். எம்.கே. ராதா அவருக்கு இணையாகப் புகழ் பெற்றார், பானுமதி ‘அபூர்வ சகோதரர்கள்’, தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் பானுமதிதான் கதாநாயகி. மூன்று படங்களிலும் சிறந்த நடிகைக்கான பரிசு பெற்றார்.
இதன்பின், சொந்தப் படத் தயாரிப்பில் பானுமதி ஈடுபட்டார். ‘லைலா மஜ்னு’ கதையை, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்தார். இரண்டு மொழிகளிலும் கதாநாயகன் ஏ. நாகேஸ்வரராவ் பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இப்படத்தை டைரக்ட் செய்தார். இனிய பாடல்களும் சிறந்த நடிப்பும் கொண்ட ‘லைலா மஜ்னு’ வெற்றிகரமாக ஓடியது. பிறகு பானுமதி ‘சண்டி ராணி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்ததுடன், டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். கதாநாயகன்: என்.டி. ராமராவ்
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தமிழில் சுமாராகவே ஓடியது.

 

 

குடும்பத்தின் கடைக்குட்டியான ரஜனியின் தந்தை பொலிஸ்காரர்

அவருக்கு கிடைத்த மாதாந்த ஓய்வு+தியம் 30 ரூபாவே!

uஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழரானார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்புதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கினார்.
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் துள்ளும்” என்று “ராஜா சின்ன ரோஜா” படத்தில் ரஜினியைப் பற்றி பாடல் வரிகள் உண்டு. அதில் எள்ளளவும் மிகையில்லை என்பதற்கு குழந்தைகளே சாட்சி. அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இன்று ரஜினியின் பெயரைச் சொன்னால் போதும், சோறு ஊட்டுவதற்கும் ரஜினிதான் உதவிக்கு வருகிறார்.
வானில் தோன்றும் நிலவல்ல இன்றைய வேகமான உலகில் திரையில் ரஜினியின் வேகம் பார்க்கும் எவருக்கும் அவர் காந்த சக்தியாகத் திகழுகிறார். அதற்கு வெறும் ஸ்டைல் மட்டுமே காரணமா? விடை காண முடியாத வினா அது.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமாகி, ‘மூன்று முடிச்சு’ மூலம் புகழின் உச்சிக்குச் சென்று ரஜினி மேலும் மேலும் ஏற்றம் கண்டு வருகிறாரே தவிர சிறு அணுவளவும் குன்றிவிடவில்லை. இந்திய திரையுலகம் காணாத சாதனை இது.
இந்த ரஜினியின் தாய்மொழி மராத்தி பிறந்தது கர்நாடகம் என்றாலும் இளமையிலிருந்து ‘தமிழ்ப்பால்’ அருந்தி வளர்ந்தவர். அவர் தனக்கு ஆதரவு கரம் நீட்டிய தமிழ்நாட்டில்தான் ரஜினியின் உயிரும், மூச்சம் இருக்கிறது. அதனால்தான் தமிழ் மக்களால் தனக்குக் கிடைத்த அபரிமிதமான புகழைப் பயன்படுத்தி தமிழ் மக்கக்கு நல்லது செய்யத் துடிக்கிறார் அவர்.
சினிமாவுக்கு அப்பாற்பட்டு ரஜினியிடம் பந்தா, வீண் பகட்டு எதுவும் கிடையாது. வெளிப்படையாக, எதையும் மனம் திறந்து பேசும் தனது தனித்தன்மையால் எம்.ஜி.ஆருக்குப் பின் திரையுலகிலும் நல்ல பெயரையே தேடிக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் உடன் பிறப்புகளெல்லாம் இன்றைக்கும் பெங்களூரிலேயே அவர்களது பூர்வீக வீட்டிலேயே (மாற்றியமைக்கப்பட்டது) வசித்துக் கொண்டு அவரவர் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
ரஜினியின் தந்தை ரானோஜி ராவ், தாயார் ராம்பாய் (இருவரும் இப்போது இல்லை) இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் என்று மொத்தம் நான்கு வாரிசுகள். வீட்டுக்கு மூத்தவர் அஸ்வத் பாலுபாய், அவரையடுத்து சத்யநாராயண ராவ், பெங்களூர் மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவில் சுப்பர்வைசராகப் பணிபுரிகிறார்.
நாகேஷ்ராவ் (உயிரோடு இல்லை) அடுத்து கடைக்குட்டி சிவாஜிராவ் கெய்க்வாட் (ரஜினிகாந்த்). இப்போதும் ரஜினியை அவரது உடன் பிறப்புகள் ‘சிவாஜி’ என்றுதான் அன்புடன் அழைக்கிறார்கள். வெளி மனிதர்களிடம் மட்டும் ‘ரஜினிகாந்த்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
ரஜினியின் தனித் தன்மைகளில் ஒன்று அவரது அடக்கம், அதில் அவரிடம் மாறுபாடே காணமுடியாது எந்த நிலையிலும். அது போலவே பெங்களூரில் அவரது குடும்பத்தினரும் உள்ளனர்.
பரபரப்பான பெங்களூர் மாநகரத்தின் அனுமந்தா நகரில் நடுத்தர மக்கள் வசிக்கும் இடத்தில் இருக்கிறது ரஜினியின் வீடு. ரஜினி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த வீட்டில்தான்.
ரஜினியின் தந்தை ரானோஜிராவ் பொலிஸ்காரராகப் பணிபுரிந்தவர். அவர் ஓய்வு பெற்ற போது 3 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதில் 800 ரூபாய்க்கு இப்போதிருக்கும் இடத்தை வாங்கி மீதிப் பணத்தில் வீட்டைக் கட்டி முடித்தார். மாதாந்தோறும் அவருக்கு வந்த ஓய்வூதியம் 30 ரூபாய் மட்டுமே. இது படிப்படியாக அதிகரித்து 160 ரூபாயானது.
2 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 300 சதுர அடியில் சிறிய வீடொன்றைக் கட்டினார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவின் திருமணம் நடந்தது இந்த வீட்டில்தான்.
ரஜினியை பற்றி சத்யநாராய ணராவ் கூறும்போது, நான் என்ன உதவி கேட்டாலும் உதவுவதற்குத் தயாராக இருப்பார் என்றார்.
சத்யநாராயணராவ் ரஜினியை ‘அவர்’ ‘இவர்’ என்று மரியாதையுடனேயே குறிப்பிடுகிறார்

Friday, March 9, 2012


 

பிரச்சினைகளை சந்தித்த சோனியா அகர்வால்



xரு நடிகையின் வாக்கு மூலம் என்ற படத்தை அடுத்து, சோனியா அகர்வால் இயக்குநர் ராஜ் பிரபு இயக்கத்தில் ‘அச்சம் என்ன’ என்ற படத்தில் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் கதை முழுவதும் பெண்களின் பிரச்சினையை மையமாக கொண்ட கதையாகும். இது குறித்து சோனியா அகர்வால் கருத்து தெரிவிக்கையில், பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ஏனென்றால் பெண்கள் தமது வாழ்க்கையிலும், வெளியிடங்களிலும் நாளுக்கு நாள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்சினைகளை சந்தித்த பெண்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

நாய் வேண்டுமா?  

த்ரிஷாவை நாடவும்



நாய் வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகை த்ரிஷா அவ்வப்போது தனது பேட்டியில் நாய்கள் பற்றி பேசுவார்.
ஐதராபாத்தில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் நாய்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதில், நான் இரு நாய்க்குட்டிகளை வீட்டில் வளர்க்கிறேன். அதில் ஒரு குட்டியை பிராணிகள் நலப்பாதுகாப்பு அமைப்பான

புளு கிரா சுக்கு சென்று எடுத்து வந்தேன். அங்கு சென்ற போது, அக்குட்டி முணங்கிக் கொண்டு இருந்தது. உடம்பிலும் சில காயங்கள் இருந்தன. அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டிலேயே வைத்துக் கொண்டேன். அதற்கு மைலோ என்ற பெயரும் சூட்டி உள்ளேன். நாய்களை வளர்த்து தத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
தெருவோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் நாய்களை எடுத்து வந்து அவற்றின் படங்களை ட்விட்டரில் வெளியிடுவேன். தத்து எடுக்க விரும்புவோர் என்னை தொடர்பு கொண்டு அந்த நாய்களை வாங்கிச் செல்லலாம்.
வாய் இல்லாத ஜீவன்களை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா சென்னையில் செட்டிலாக முடிவு


நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். இதனால் மீண்டும் நடிக்க வருகிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில்தான் இருந்தார். கடைசியாக தெலுங்கில் ராமராஜ்ஜியம் படத்தில் நடித்து முடித்து விட்டு கண்ணீருடன் விடைபெற்று சென்றார்.
பல மாதங்கள் திருமணத்துக்காக காத்து இருந்தார். ஆனால் பிரபுதேவா பிடிகொடுக்கவில்லை. ஆரம்பத்தில் திருமணத்துக்கு ஆர்வமாக இருந்தவர் பிறகு ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
அஜீத்துடன் பில்லா2 படத்திலும் சில சீன்களில் நடிக்க பேசி வருகின்றனர். தமிழ் படங்களில் முழு வீச்சில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையிலேயே குடியேற முடிவு செய்துள்ளார். வீடு தரகர்கள் மூலம் வடபழனி, சாலிகிராமம் பகுதிகளில் பங்களா வீடு தேடி வருகிறார். வீடு அமைந்ததும் அங்கு தங்குவார். அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் நிரந்தரமாக தங்கப் போகிறார்.

தமன்னா பற்றி தவறான செய்திகள்


தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இந்நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனல் கால்iட் குழப்பம் காரணமாக அப்படத்திலிருந்து தமன்னா விலகிவிட்டார்.
அவருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவது தவறு. அந்தப் படத்தில் நடிப்பது உறுதி.
ஆனால் மற்ற படங்களில் நடிப்பதால் கால்iட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தி படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்றார்.






பாப்பாமலரில் பாடத் தொடங்கிய புலப்பாக்க சுசீலா


பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13.1935) இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நான்கு தசாப்தங்களாக 2500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலம்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
சுசீலா 1950ம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ம் ஆண்டில் இப்படத்தில் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இயைமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார்.
1955 ல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த ‘டொக்டர்’ என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். கலைமாமணி பட்டம் பெற்ற இவருக்கு ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப் படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.
1957 ம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.


 

 

கேட்டவரெல்லாம் பாடலாம்....  பாடல் எழுந்த விதம்


கே. பாலாஜியின் ‘தங்கை’ படத்துக்காக பாடல் எழுத கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம். எஸ். வி., தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ. சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும் அமர்ந்திருந்தார்கள். திருலோக் சிட்டுவேஷனைச் சொன்னார்.
கதாநாயகி கே. ஆர். விஜயாவின் பேர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானோர் சொல்ல, விஸ்வநாதன் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப் போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றாக இருக்கிறதே! இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப் போக நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
அப்போது கண்ணதாசன் கோபத்துடன் ‘விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச் சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே’ என்று சொல்ல எம். எஸ். வி. முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
‘சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன். நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க’ என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
அப்போது வாசலில் ‘சார்... போஸ்ட்’ என்று குரல் கேட்டது. உடனே கவிஞர் ஆப்பீஸ் பையனை அழைத்து ‘யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு’ என்றார். ‘அவனை எதுக்கு கூப்பிடுaங்க?’ என்று பாலாஜி கேட்க ‘பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு, நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்பந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்’ என்றார்.
போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் ‘தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?’ என்று கேட்க ‘சரி சொல்லுங்க சார்’ என்றார்.
‘இது ஒரு பேர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்’ என்று சொல்லி விட்டு ‘விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு’ என்று சொல்ல எம். எஸ். வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் ‘சார், அந்த மூணாவது மெட்டு அருமையாக இருக்கு சார்’ என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப் புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு. ‘ரொம்ப நன்றிப்பா’ என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
புன்னகையுடன் பாலாஜியை இயக்குனர் பாலு பார்த்தார். உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்’ என்றார்.
அப்போது கண்ணதாசன் ‘விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாசலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா’ என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.
கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும் பாவையரின் கதையிருக்கும்


ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் மலைக்கள்ளன்


கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது, 1932ல் எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு சென்றது.
அங்கு அவர்கள் வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும். நாடக உலகில் அறிமுகமாகி கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமுகமானார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி, கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி.
இருப்பினும் மலைக்கள்ளன் படத்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார். எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார்.
அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்துவிட்டார். பின்னர் வீ. என். ஜானகியை மணந்துகொண்டார். துரதிஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த திகதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917). எம்.ஜி.ஆர் தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும். எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.
அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவர் வைத்திருந்த வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத்தொகை 7 ஆகும். எம்.ஜி.ஆர். நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137. இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ பவானி, ஊமையன், கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூகமே நான் உனக்கே சொந்தம்.
1951ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
1963ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
1967ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா ‘இதயக்கனி’ என்ற பட்டத்தை வழங்கினார். - 1972ல் எம்.ஜி.ஆருக்கு ஏ. கே. கிருஷ்ணசாமி ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
எம்.ஜி.ஆர். - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை ‘மலைக்கள்ளன்’ பெற்றது.
இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம்.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படத்தில் நடிக்க வேண்டாம்’ என்று அண்ணா கூறியதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். ‘அடிமைப்பெண்’ பட ஷ¤ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர் குளிருக்காக வெள்ளைத் தொப்பிவைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கைகொடுத்து ‘நான் எம்.ஜி. ராமச்சந்திரன், சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார். முழுக்கை சில்க் சேர்ட், சாரத்துடன், தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கமாக இருந்தது. சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் 24.12.1987ல் மறைந்தார்.