Sunday, December 28, 2014

கத்ரீனா கைப்பும் மீன் குழம்பும்

உங்களுக்கு ரொம்பவும் பிடித்த சினிமா?

‘மேன் ஆப் லா மஞ்சா’ (1972).

உங்கள் உடைகளில் முக்கியமானது?

எனது டிராக் பேண்ட்கள்.

உங்களிடம் இருக்கும் பழைய ஆடை?

ஜீன்ஸ்.

உங்களுக்குப் பிடித்த காபி வகை?

காப்புச்சினோ.

பிடித்த நகரம்?

நியூயார்க்.

நீங்கள் அதிகம் கேட்கும் பாடல்?

‘ஹார்வஸ்ட் மூன்...’

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பாராட்டு வார்த்தை?

‘ஜீனியஸ்!’

நீங்கள் நடிகையாகியிருக்காவிட்டால்?

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஆகியிருப்பேன் (தமாஷாக சொல்கிறார்).

படம் பார்க்கும்போது விரும்பி சாப்பிடுவது?

ஹாட் டாக்ஸ்.

இப்போது உங்கள் பிரிட்ஜைத் திறந்தால் காணக்கூடிய வித்தியாசமான பொருள்?

காலாவதியாகிப் போன மீன் குழம்பு.

உங்கள் சிறுவயதை ஞாபகப்படுத்தும் உணவுப்பொருள்?

மக்ரோனியும், பாலாடைக்கட்டியும்..

கடற்கரைகள், மலைகள்... இரண்டில் எது பிடிக்கும்?

கடற்கரை.

ஞாயிறு காலை உணவுக்கு விரும்புவது?


பான்கேக்குகள்.

இந்த ஒட்டுமொத்த உலகில் உங்களின் நண்பர்?

அலி அப்பாஸ் ஜாபர்.

பிடித்த வாசனை திரவியம்?

நர்சிஸ்கோ ரோட்ரிகஸின் ‘பார் ஹர்’.

உங்களுக்கு ரொம்ப பிடித்தது காதல் படமா? திகில் படமா?


காதல்.. காதல்.. காதல்..

உங்களுக்குப் பிடித்த கற்பனை கதாபாத்திரம்?

ஸ்கார்லெட் பிம்பர்னல்.

உங்கள் கைப்பையில் இருக்கும் வித்தியாசமான பொருள்?

நான் கைப்பையை சுமந்து செல்வதில்லை.

உங்களின் குழந்தைப்பருவ செல்லப்பெயர்?

கிங்.

நீங்கள் வாங்கியதிலேயே பயனில்லாத பொருள்?

அலங்காரம் செய்த பூட்ஸ்.

உங்களுக்குப் பிடித்த ஆலிவுட் நடிகர்?

ராபர்ட் பேட்டின்சன்.

தற்போது உங்கள் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்?


‘தி ஜங்கிள் புக்’கின் ‘பேர் நெசிசிட்டீஸ்’.

ஷாப்பிங் செய்ய பிடித்த நகரம்?

நியூயார்க்.

நீங்கள் பார்க்க விரும்பிய, ஆனால் இதுவரை பார்க்காத முடியாத சினிமா?

ஸ்ரீ 420.

உங்களை எப்படி அழைத்தால் பிடிக்கும்? ‘அழகானவர்’ என்றா?‘செக்சியானவர்’ என்றா?

‘அழகானவர்’.

நீங்கள் நடித்திருக்கலாம் என்று ஆசைப்படும் பழைய படம்?

‘கான் வித் த விண்ட்’.

நீங்கள் சங்கடப்படுவது?


என்னை என் தோழிகள் ‘கேட்’ என்று அழைப்பது பிடிக்காது.

உங்களின் பெரிய பயம்?

எனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காதோ என்பது.

ஆளில்லா தீவில் யாருடன் கழிக்க ஆசை?

ரண்பீர் கபூருடன்.

கே.பாலசந்தரின் கதாநாயகிகள்

ஆண், பெண்ணுக்கு இடையிலான நேசமும் உறவும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குத் தேவை. ஆனால் ஆதிகாலத்திலிருந்து ஆண்-பெண் உறவு என்பது சிக்கலாகவும், பேதங்கள் நிரம்பியதாகவுமே இருந்துவருகிறது. அந்தச் சிக்கல்களைக் குடும்பம் என்ற அமைப்பு மேலும் சிடுக்காக்கியது.
ஆனால் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு குடும்பத்துக்கு நிகராக இதுவரை வேறு எந்த அமைப்பும் உருவாக்கப்படவில்லை. குடும்பம் என்ற அமைப்பால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் வேட்டையாடப்படுபவர்களாகவும் சரித்திரம் முழுக்கப் பெண்களே இருக்கின்றனர். நிலைப்பாடுகளை முன்வைத்து ஆண்கள் வெளியேறிவிடலாம். ஆனால் பெண்கள் வெளியேற முடியாத நிலையே இன்னமும் உள்ளது. வெளியேற முடியாத அந்தப் பெண்ணைப் பல நிறபேதங்களுடன் தமிழ் சினிமாவில் படைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர்.
தடை தாண்டும் நாயகிகள்
தமிழ் சினிமாவில் பாலசந்தருக்கான இடம் எழுத்துலகில் ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரனின் இடத்துக்குச் சற்றே நெருங்கிவருவது. 20-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் இந்தியப் பெண்கள், கல்வி மற்றும் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு சம்பிரதாயமான தடைகளைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவள் வீட்டைக் கடந்து தெருவையும் தாண்டி, பேருந்தில் ஏறி அலுவலகத்துக்குப் போகிறாள்.
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாக ஒருவர் சொல்லிவிட முடியும். ஆனால் இதற்காக இந்தியாவின் முதல் தலைமுறைப் பெண்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டுக்கும் வெளிக்கும் இடையே பெண் நடத்திய போராட்டத்தை ஜெயகாந்தன் முதலான படைப்பாளிகள் கதைகளாகப் படைத்தார்கள். பாலசந்தர் அவர்களை நாயகிகளாக்கினார்.
பாலசந்தருக்கு முன்பு தமிழ் சினிமாவில் பெண்கள் வலிமையாக படைக்கப்பட்டதில்லையா? படைக்கப்பட்டிருக்கிறார்கள்தான். அன்பான அம்மாவாக, அருமை யான சித்தியாக, கொடுமைக்கார அத்தையாக, தியாக மனைவியாக, வஞ்சகமாக வீழ்த்தும் தாசியாக அவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வை கொண்டே படைக்கப் பட்டார்கள்.
பாலசந்தர் படங்களில்தான் தனித்துவம் கொண்டவர்களாக, தங்களது தரப்பை வெளிப்படுத்தும் தனி ஆளுமைகளாகப் பெண் கதாபாத்திரங்கள் உருவானார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டுத் தப்பிக்க நினைப்பவர்கள் என்றாலும் சம்பிரதாயமாக மீண்டும் குடும்பத்தின் வலைக்குள் விழுபவர்கள்தான்.
வீழ்த்தும் குடும்பச் சூழல்
கே. பாலசந்தர் படைத்த நாயகிகள் சற்றே அதிகப்பிரசங்கிகள்தா

ன். கதாபாத்திரத்தை மீறிய புத்திசாலித்தனத்தைக் காட்டுபவர்கள்தான். ஆனால் பெண்கள் முதலில் பேசத் தொடங்கிய காலகட்டத்தில், தன்னிறைவான வாழ்க்கையை நோக்கிப் பெண்கள் சிந்திக்கத் தொடங்கிய சமூகச் சூழலின் பின்னணியை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் இங்குள்ள வாழ்க்கையின் சகல நிறைகுறைகளோடும் இருப்பவர் கள்தான். அவர்கள்தான் கே. பாலசந்தரின் நாயகிகள்.
காதல், கலப்பு மணம், சம்பிரதாய மணம் என எல்லாத் திருமணங்களிலும் பெரும்பகுதியாக ருசிபேதமே வாடிக்கையாக இருக்கிறது. ஏதோ ஒரு பொருத்தமின்மை வாழ்க்கை முழுவதும் உணரப்படுகிறது. அனுசரணையான, அன்பான ஒரு பெண்ணுக்குக் குரூரமான, ஒடுக்கும் பண்புள்ளவன் கணவனாக அமைந்துவிடுகிறான். பண்பான ஒரு ஆண்மகனுக்கு வாய்ப்பவள் ராட்சசியாக இருக்கிறாள்.
அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக இந்திய-தமிழ் சூழலில் எதிர்கொள்ளும் கதைகளை, நுட்பமான வேறுபாடுகளுடன் விதவிதமாகக் கையாண்டவர் கே. பாலச்சந்தர். நாயகிகளை மட்டுமல்ல, ஒரு காட்சியில் வந்து போகும் துணைப் பெண் கதாபாத்திரங்களையும் மறக்க முடியாமல் செய்தவர். மன்மத லீலையில் உடலின் நிலையாமை குறித்து சபல நாயகனுக்கு அறிவுறுத்தும் நர்ஸ் கதாபாத்திரம் குறுகிய நேரமே வந்தாலும் வலிமையானது.
புதிய பரிமாணம்
அலுவலகத்திலும், சமூக வெளியிலும் மிக நாகரிக மாகவும், பண்பானவர்களாகவும் இருந்துகொண்டே குடும்பத்துக்குள் குறிப்பாக மனைவியிடம் நுட்பமான குரூரங்களை வெளிப்படுத்தும் ஆண்களை அவர் படைத்தார். தமிழ்ப் படங்கள் வழக்கமாகப் படைத்த வில்லன்கள் அல்ல அந்த ஆண்கள். ‘அவர்கள்’ படத்தில் சாடிஸ்ட் ராமநாதனாக வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தமிழ்சினிமாவில் புதுமையானது. உணர்வுரீதியாகப் பெண்ணைக் குரூரம் செய்யும் ஆணை ரஜினிகாந்த் வழியாக அவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
அவரது பெண் கதாபாத்திரங்கள் குடும்பச்சுமை, கணவனின் கொடுமைகள் மற்றும் மைனர்தனங்கள் என அத்தனை சுமைகளையும் தாங்குபவர்கள். எல்லாச் சுமைகளையும் தாங்கி அனைத்துத் தடைகளையும் உடைத்து ஒரு சுதந்திரமான, தன்னிறைவு மிக்க மகிழ்ச்சியை அவரது கதாபாத்திரங்கள் ஒருபோதும் அடைவதில்லை.
பாலச்சந்தர் அவரது நாயகிகளுக்கு விடுதலையை அளித்ததில்லை. திரும்பவும் அவர்கள் குடும்பத்தின் சிலுவையைச் சுமப்பவர்களாகவே வீடுதிரும்புகிறார்கள். அதைத் தாண்டிப் புரட்சிகரமாகச் செயல்பட பாலசந்தர் தனது கதாநாயகிகளை அனுமதித்ததில்லை.
தற்காலிக இளைப்பாறல்
ஆனால் தனது பெண் கதாபாத்திரங்களுக்கு வீட்டிலிருந்து கொஞ்ச காலம் வெளியேறும் வாய்ப்பைத் தற்காலிக அரவணைப்பின் இளைப்பாறுதல்களை, பாலுறவு அல்லாத வெளி ஆண்களின் நட்பு வெளி சாத்தியங்களை அளித்ததுதான் கே. பாலசந்தர் செய்த பங்களிப்பு. அவரது காலம் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் சார்ந்து அதுவே அவரது சாதனையும்கூட.
மூன்று முடிச்சு, மன்மத லீலை, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை என அத்தனை படங்களிலும் பெண்கள்தான் கதையின் சூத்திரதாரிகள். கே. பாலசந்தர் கையாண்ட சினிமாவின் உள்ளடக்கமும் அழகியலும் எவ்வளவோ மாறிவிட்டது. பாலசந்தர் காலத்திய கட்டுப்பெட்டித்தனங்களையும் தமிழ்ச் சமூகம் கைவிட்டு எத்தனையோ வகையில் முன்னேறிவிட்டது.
இன்று பெண் குழந்தைகள் எல்லோரும் கல்வி பெறுவது கூடுமானவரை சாத்தியமாகியுள்ளது. ஆண்களுக்கு இணையாக சம்பாதிப்பதும் பணிபுரிவதும் அரசியலில் பங்குபெறுவதும் நிகழ்ந்துள்ளன. பொதுவெளிகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக வரும் தமிழ் சினிமாக்களில் நினைவுகூரத்தக்க அளவுக்கு ஒரு பெண் கதாபாத்திரமாவது படைக்கப்பட்டுள்ளதா?
மென்பொருள் துறை தொடங்கி எழுத்து, கலைத்துறை வரை சாதித்த தமிழ்ப் பெண்களைப் பிரதிபலிக்கும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் கதாபாத்திரத்தைத் தமிழ் சினிமா படைத்துள்ளதா? பாலிவுட்டில் குயின், கஹானி, ஹீரோயின், சாத் கோன் மாஃப், மேரி கோம் போன்ற படங்கள் பெண்ணை மையப்பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளன.
தமிழ் படங்களைப் பொருத்தவரை பெண்கள் ஆண்களின் இச்சைக்குரியவர்களாக, கேலிக்குரியவர்களாக, ஆதிக்கத்துக்குரியவர்களாக, பாலியல் தேவையை நிறைவு செய்யும் பொம்மை களாகவே குறுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றிடத்தில் இருந்துதான் இயக்குநர் கே.பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்கள் எத்தனை வலிமையுடன் இருந்தார்கள் என்பதை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அவரது பங்களிப்பையும்.
கே. பாலசந்தர் தனது பெண் கதாபாத்திரங்களை நேசித்தார். மரியாதை செய்தார். அவர்களைப் போஷித்தார். அவர்களை வளர்த்தார். அவர்களுக்குப் பேசும் வாய்ப்பை அளித்தார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முற்றத்தில் திரைத்துறையினர் இருந்ததுபோக ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் காரணம் நமக்குப் புரியும். வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத மரியாதை அது.

Monday, December 22, 2014

ஜெயப்பிரதா மகன் படத்தில் ரஜினி

ஜெயப்பிரதா மகன் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உயிரே உயிரே. இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜசேகர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த சத்யம், படத்தை டைரக்டு செய்தவர். ஜெயப்பிரதாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

சமீபத்தில் ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’ படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்து ரஜினியும் பாராட்டினார். அத்துடன் தியேட்டர்களில் தனது ‘லிங்கா’ படத்துடன் இணைத்து அந்த டிரெய்லரை வெளியிடவும் ஏற்பாடு செய்தார்.

அதுமட்டுமின்றி உயிரே உயிரே படத்தில் கவுரவ தோற்றத்தில் சில காட்சிகளில் நடிக்கவும் சம்மதித்தாராம். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியும் ஜெயப்பிரதாவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அதனாலேயே இந்த படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். ரஜினி நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக உள்ளது.

காதல் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. சித்துவும், ஹன்சிகாவும் சென்னையில் இருந்து விமானத்தில் கோவா புறப்படுகின்றனர். அவர்களுக்குள் நடக்கும் மோதலும் காதலுமே கதை. சென்னை விமான நிலையத்தில் முக்கிய காட்சிகள் படமாகி உள்ளது. கோவாவிலும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

200 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

நிர்மலாவின் சொந்த ஊர் கும்பகோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக்மணி.

பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்றத்தில் "ஜுரி"யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு "ஜுரி" என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியில் நியமிப்பார்கள்.

நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். "அரண்மனைக்குடும்பம்" என்று பட்டப்பெயர் பெற்றவர்கள்.

நிர்மலாவின் குடும்பத்துக்கும், கலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந்தது எதிர்பாராமல் நடந்தது.

ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப் பேசினார். "ராஜராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்" என்று கூறினார்.

இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்மலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நடனக் கலைஞரிடம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார்.

நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோணத்தில் நடைபெற்றது. பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இதனால் நிர்மலாவின் தந்தை வருத்தம் அடைந்தார்.

"சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்" என்று சபாவைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். நிர்மலா, நடனத்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜயந்திமாலா நடத்தி வந்த "நாட்டியாலயா" என்ற நடனப்பள்ளியில், நிர்மலாவை அவர் தந்தை சேர்த்து விட்டார்.

பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செலவு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், "படம் எடுக்கக்கூடாது" என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத்தயாரிப்பைத் தொடராமல் பாதியில் கைவிட்டார், பாலகிருஷ்ணன்.

இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, "வெண்ணிற ஆடை" என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார்.

பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலாவின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த்தார். "இவ்வளவு அழகான பெண், சினிமாவில் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்" என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந்தித்து, "டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.

நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர்மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் சென்று, ஸ்ரீதரை சந்தித்தார்.

"மேக்கப்" டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார். "வெண்ணிற ஆடை"யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1965-ம் ஆண்டு "வெண்ணிற ஆடை" வெளிவந்தது. இப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு. மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்த படம் என்பதால் "வெண்ணிற ஆடை"பரபரப்பாக ஓடியது. நிர்மலாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

"நிர்மலா" என்ற பெயர் பட உலகில் பலருக்கு இருந்ததால், `வெண்ணிற ஆடை' நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார்.

இதுபற்றி நிர்மலா கூறுகையில், "வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது" என்று குறிப்பிட்டார்.

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் சூப்பர் ஸ்டார் ஆனார்

அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளிநாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரதில் பறக்கிறது. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்" என்று மாற்றி வைத்தவர், டைரக்டர் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய். கெய்க்வாட் என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் கெய்க்வாட் என்று அழைக்கப்பட்டனர்.

ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான்.

ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், பேலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார்.

ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் ஆனார்.

ரானோஜிராவ் - ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த்.

1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி. ரஜினிக்கு சத்தியநாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய்.

ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி.

குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார். ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார்.

உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதிவிட்டார். கையை எடுத்து முத்தட்டார்.

அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார். விவரம் அறியாத சிறுவயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை.

இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

சின்ன வயதில் அவன் (ரஜினி) ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான். அம்மா இறந்தபோது, அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது. அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்ததை உணராமல், வீதியில் சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு.

மறுநாள், வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும் என்று அழுதான். அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான். அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.

நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட தூங்கியது கிடையாது.

தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது. சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கமாட்டான். உடனே சமாதானமாகி, என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.

தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில், அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாச் சிவனாக இருந்தேன். இப்போது, எந்தத் தாயைப் பார்த்தாலும், எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். அன்னை ஓர் ஆலயம்' படத்தில் நான் நடித்தபோது, அம்மா, நீ சுமந்த பிள்ளை என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, December 18, 2014

படங்களில் பிசியாக இருந்தபோது சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது: பட்டதாரி பெண்ணை மணந்தார்

நடிகர் சந்திரசேகர் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரியை மணந்தார். இவர் "பி.ஏ'' ஆங்கில இலக்கியம் படித்தவர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

"இரவு பகலாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

நடிகர் திலகம் சிவாஜி சாரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பெண் வீட்டார் என்னைப்பற்றி அவரது வீட்டில் விசாரித்திருக்கிறார்கள். சிவாஜி சாரும், "நல்ல பையன். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். தாராளமா பெண் கொடுக்கலாம்'' என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். சிவாஜி சாரின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களும் "சந்துருவுக்கு (சந்திரசேகர் என்பதன் சுருக்கம்) தாராளமாகப் பெண் கொடுக்கலாம்'' என்று அப்பாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்கள்.

1987-ல் குன்றத்தூர் கோவிலில் என் திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் குன்றத்தூர் மலையைச் சுற்றிலும் இருந்து மக்கள் கூட்டமாக வந்து வாழ்த்தினார்கள். சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.

திருமண வரவேற்புக்கு டாக்டர் கலைஞர் வந்திருந்து வாழ்த்தினார்.

என் மனைவி ஜெகதீஸ்வரி கல்லூரியில் "பி.ஏ'' ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் கல்லூரிப் படிப்பின்போது ஆஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.

ஆஸ்டல் மாணவிகளுக்கு மாதம் ஒரு சினிமாப்படம் திரையிட்டுக் காட்டுவார்களாம். ஒருமுறை நான் நடித்த "சிவப்பு மல்லி'' படம் போட இருந்திருக்கிறார்கள். அந்தப் படம் பார்க்க ஜெகதீஸ்வரியின் தோழி அவரை அழைத்திருக்கிறார். "நம்ம ஊர்க்காரர் நடிச்ச படம்'' என்று தோழி சொல்ல, ஜெகதீஸ்வரியோ, "சந்திரசேகர் நடிச்ச படமா? கிராமத்து ஆளை பிடிச்சிட்டு வந்து நடிக்க வெச்ச மாதிரி இருக்கு. ஊர்ல உழுதுக்கிட்டு இருந்தவரை நடிக்க வெச்சிட்டாங்க'' என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒருநாள் இதை என்னிடம் சொன்ன ஜெகதீஸ்வரி, "உங்களைப் பற்றிய என் கணிப்பு அப்போது இப்படி இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. பகுத்தறிவு சிந்தனை, மனித நேயம் நிறைந்தவர் நீங்கள்'' என்று பாராட்டியபோது ஒரு நடிகனாக அல்ல, கணவனாக பெருமைப்பட்டேன்.

1989-ல் எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக சிவஹர்ஷன் - சிவரஞ்சனி பிறந்தார்கள்.

மனைவி மதுரை மண்ணுக்கே உரிய வீரத்திலும் சிறந்திருக்கிறார். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கிராமத்தில் தி.மு.க. மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து மணி தாண்டிய நிலையில் நான் பேசிக்கொண்டிருந்த மேடையை நெருங்கிய ஒரு போலீஸ் அதிகாரி, "சீக்கிரம் பேச்சை முடியுங்கள்'' என்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடையா? பொங்கிவிட்டேன். அப்புறம்தான் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி பலியான சம்பவம் தெரிந்தது. கிராமம் என்பதால் தகவல் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது.

ஒருவழியாக அவசர அவசரமாக ஈரோட்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தேன். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில் ஈரோடு நகரமே தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டு அதிர்ந்தேன். இதற்குள் என்னைப்பார்த்துவிட்ட ஒரு கும்பல் லாட்ஜ் வரை என்னைத் துரத்தியது. அப்போது எனக்குத் துணையாக இருந்த தி.மு.க. நண்பர் இளஞ்செழியன், அவரது தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் அன்று நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பினேன்.

காலையில் என்னிடம் போனில் தொடர்பு கொண்ட ஜெகதீஸ்வரி, "பத்திரமாய் இருக்கீங்களா?'' என்று கேட்டார். "இங்கே நாங்களும் பத்திரம்தான்'' என்றார்.

அவர் சொன்னதன் உட்கருத்து அதன் பிறகே புரிந்தது. அதாவது கட்சிக்காரன் என்ற முறையில் என்னைத் தாக்க ஈரோட்டில் முயற்சி நடந்தது போலவே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள என் வீட்டிலும் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது. 8 அடி உயர காம்பவுண்டு சுவர் கொண்ட வீடு என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்குள் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். ஜன்னலில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.

இந்தத் தகவலை மனைவி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, "பிறகு எப்படித்தான் சமாளித்தீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "அவங்க வீசின கல்லையே எடுத்து திரும்ப வெளியில் வீசினோம். கொஞ்ச நேரத்தில் வந்தவங்க ஓடிட்டாங்க'' என்றார். இக்கட்டான நேரத்தில் சமாளிக்கத் தெரிந்த ஒரு வீரப்பெண்மணியாகவே என் மனைவி ஜெகதீஸ்வரி என் கண்களுக்கு அப்போது தெரிந்தார்.''

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "சம்சாரம் அது மின்சாரம்'' என்ற படத்தை டைரக்டர் விசு இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகருக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க அழைக்கப்பட்டது தனி அனுபவம் என்கிறார், சந்திரசேகர்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

"ஒருநாள் கிஷ்மு (டைரக்டர் விசுவின் தம்பி) என்னைப் பார்க்க வந்தார். ஒரு படம் பண்றோம். விசுதான் டைரக்டர். நீங்க நடிக்கணும்'' என்றார்.

விசு அப்போது "குடும்பம் ஒரு கதம்பம்'', "மணல் கயிறு'' என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்திருந்த நேரம். அவருடைய படத்தில் நடிக்க அழைப்பு என்றதுமே திருப்தி. என்றாலும், "படத்தில் என் கேரக்டர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்று கிஷ்முவிடம் கேட்டேன்.

அவரும் சளைக்காமல், "எங்கள் படத்தில் நீங்கள் நடித்த பிறகு இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள பெயரோடு இன்னமும் அதிக பெயர் தேடிவரும்'' என்றார்.

பதிலுக்கு நான், "சாரி சார்! நான் கதை கேட்காமல் நடிக்கிறதில்லை'' என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் கிஷ்மு பதிலுக்கு, "நம்புங்க சார்! உங்களுக்கான கேரக்டர்ல நிச்சயம் நீங்க பிரகாசிப்பீங்க. இதுக்கு மேலும் உங்களுக்கு சந்தேகம்னா மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. தரேன். படிச்சுப் பாருங்க'' என்றார்.

இந்த வார்த்தை என்னைத் தொட்டது. கதை மேல் வைத்திருந்த அவரது நம்பிக்கை என் கேரக்டர் மீது இருக்கத்தானே செய்யும்! உடனே மறுப்பேதும் இன்றி ஒப்புக்கொண்டேன்.

இந்தப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடல்லாமல், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் (தங்கப்பதக்கம்) பெற்றுத்தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேரின் அந்தஸ்தும் உயர்ந்தது.

இந்த நட்பு இறுகிப்போனதில் தொடர்ந்து "புயல் கடந்த பூமி'', "அவள் சுமங்கலிதான்'' என்று விசு சாரின் பல படங்களில் நடித்தேன்.

டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் நான் நடித்த "ராஜாங்கம்'' படம் மறக்க முடியாதது. படத்தில் நான் ரவுடி. ஒரு பங்களாவுக்குள் நடக்கிற இந்தக் கதையில் எனது ஜோடியாக விஜயசாந்தி நடித்தார். இதே ஆர்.சி.சக்தியின் "கூட்டுப் புழுக்கள்'' படத்திலும் நடித்தேன்.

எனக்கொரு ராசியோ அல்லது என் அணுகுமுறையோ ஒரு டைரக்டரின் படத்தில் நடித்த பிறகு அதே டைரக்டரின் அடுத்தடுத்த படங்களுக்கும் நிச்சயம் அழைப்பு வந்துவிடும். டைரக்டர்கள் விசு, ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் படங்களில் எனக்கொரு கேரக்டர் நிச்சயம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவர்கள் இயக்கும் படங்களில் வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.

இவ்வாறு கூறினார், சந்திரசேகர்.

கலைத்துறையில் நண்பர்களுடன் ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருவது சந்திரசேகர் வழக்கம். 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்திரசேகரும், டைரக்டர்கள் ராம.நாராயணன், கோலப்பன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நண்பர்களுடன் சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது விபத்து ஏற்பட்டு அதில் காயமின்றி கலைக்குழுவினர் மீண்டனர். அதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

"முறைப்படி விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டோம். மஹீந்திரா வேனில் 4 நாட்களுக்கு தேவையான புளியோதரை கட்டிக்கொண்டு பயணித்தோம். வேனில் டிரைவர் சீட் அருகில் ஐயப்பன் படத்தை வைத்து, மாலை அணிவித்து இருந்தோம்.

வேன் சென்னையைத் தாண்டியதும் ஆளுக்கு ஆள் ஒரே ஜோக் மழைதான். அதிலும் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் காமெடிக்கு கேட்கவா வேண்டும்? திருச்சி தாண்டிய பிறகும் இந்த நகைச்சுவை மழை நின்றபாடில்லை. எங்கள் ஜோக்குக்கு டிரைவரும் சிரித்தபடி வாகனத்தை ஓட்டினார்.

விடியற்காலை நேரம் திடீரென ரோட்டின் மையத்தில் இரண்டு மாடுகள் குறுக்கே வர, டிரைவர் அடித்த `சடன் பிரேக்'கில், வண்டி அருகில் இருந்த பெரிய குளத்தருகே குட்டிக்கரணம் அடித்தது.

ஆனாலும் பாருங்கள். ஐயப்பன் படம் உடையவில்லை. போட்டிருந்த மாலை சிதறவில்லை. நாங்கள் சாப்பிட வைத்திருந்த புளியோதரை கூட அப்படியே இருந்தது. ஒரு வழியாக அங்கு வந்தவர்கள் உதவியுடன் வேனை தூக்கி நேராக நிமிர்த்தியபோது, உடனே ஸ்டார்ட்டும் ஆனது! பக்திப்பூர்வமான ஒரு பயணத்தின்போது, எதற்கு கிண்டலும் கேலியுமான விஷயங்கள் என்று அந்த ஐயப்பனே எங்களுக்கு இப்படி ஒரு `ஷாக் ட்ரீட்மெண்ட்' கொடுத்தது போல் உணர்ந்தோம். அதன்பிறகு சபரிமலைக்கு போய்விட்டு வரும் போது கூட, அதாவது சென்னையில் வீடு வந்து சேரும் வரையில் ஜாலியாக ஒரு வார்த்தைகூட நாங்கள் பே

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
சாமல் வந்தோம். இந்த பயணத்தின்போது எங்கள் வாயில் இருந்து உதிர்ந்ததெல்லாம் "சாமியே சரணம்'' கோஷம் மட்டும்தான்.''