Tuesday, June 26, 2018

அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ. 220 கோடி

முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.

சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரிலேயே விரட்டிச்சென்று கண்டித்து கணவர் மூலம் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இவருக்கு இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்துக்கு இணையாக பட வாய்ப்புகள் குவிகின்றன.
 
ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். விளம்பரங்களிலும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.

மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

முணுமுணுக்கும் பாடல்களை புனைவதே இலட்சியம்



"காலா"வில் வாடி என் தங்க
சிலை பாடலை தந்த உமாதேவி 


நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே' என 'மெட்ராஸ்' படத்தில் கவிதை எழுத துவங்கி 'நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே... கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே... என மாயநதி இன்று மார்பில் வழியுதே... துாய நரையிலும் காதல் மலருதே' என கபாலியில் முத்திரை பதித்து 'வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி ஒன்னுமில்லை' என்ற 'காலா' பாடல் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்...

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியை, கவிஞர், சினிமா பாடலாசிரியை என பல துறைகளில் சாதித்து வரும் கவிஞர் கு.உமாதேவி. அவருடன் பேசியதில் இருந்து...

செய்யாறு என் சொந்த ஊர். அங்கு இளங்கலை முடித்து சென்னை பல்கலையில் முதுகலை முடித்தேன். எத்திராஜ் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியை துவக்கினேன். கவிதைகள் எழுதுவது பிடிக்கும். 'திசைகளை பருகியவர்கள்' என்ற என் கவிதை தொகுப்பை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் 2014ல் மெட்ராஸ் படத்திற்கு பாட்டு எழுதி தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி 'நான் நீ நாம் வாழவே' என்ற பாடலை எழுதித் தந்தேன். அந்த பாடல் வரவேற்பை பெற மாயா, அறம், கட்டப்பாவை காணோம் என்ற படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்புகள் கிட்டின.

பின் ரஞ்சித் கபாலி படத்தில் இரு பாடல்கள் எழுத வாய்ப்பு தந்தார். அவை படு 'ஹிட்'டாயின. தற்போது காலாவில் வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி ஒன்னுமில்லை பாடல் என்னை உலக அறிய வைத்திருக்கிறது. விஜய்சேதுபதி நடிக்கும் 96, எஸ்.ஜெ.சூர்யாவின் படம் உட்பட பத்து படங்களுக்கு மேல் பாடல் எழுதி வருகிறேன். பிற மொழி கலப்பின்றி துாய தமிழில் பாடல்கள் தருவதில் உறுதியாக இருக்கிறேன்.

கபாலியில் என் இரு பாடல்கள் ஹிட்டான நிலையில் ரஜினியை சந்திக்க முடியவில்லை. காலா படப்பிடிப்பில்தான் சந்திக்க முடிந்தது. வாடி என் தங்க சிலை பாடலை கேட்டு பாராட்டினார். ''பெரிய ஆளா இருப்பீங்க என நினைத்தேன். ஆனால் இந்த சிறிய வயதில் அசத்திட்டீங்க. பாட்டு பிரமாதம்,'' என கையை பிடித்து பாராட்டியது உண்மையில் எனக்கு கிடைத்த பெரிய விருதாக கருதுகிறேன்.

சினிமாவுலகில் பெண் பாடாலசிரியைகள் குறைவு என்பதை நான் ஏற்க மாட்டேன். தாமரை, தமிழச்சி தங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்கள் உள்ளனர். சங்க காலத்திலும் ஔவை, மாசாத்தியார் என ஏராளமான பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

கவிதைகள் படைப்பில் பெண்களுக்கு தனி இடமுண்டு. மக்கள் விரும்பும் முணுமுணுக்கும் பாடல்களை வரும் காலங்களில் தர வேண்டும் என்பதே இலட்சியம் என்றார்.

நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர்

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான திரைப் பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர் எஸ்.பி.பி. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எந்த மொழியில் பாடல் கொடுத்தாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு. எஸ்.பி.பி.யின் அப்பாவும் இசைக்கலைஞர் தான். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் வல்லவர். இதனால் இளம் இளவயதிலேயே எஸ்.பி.பி.க்கும் பாடல் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1966ம் ஆண்டு கோதண்டபாணி இசையமைப்பில் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமானார் எஸ்.பி.பி.
தமிழில் ஜெமினி நடித்த சாந்தி நிலையம் திரைப்படம் தான் அவர் முதன்முதலாகப் பாடியது. ஆனால்அப்படம் திரையிடுவதற்கு முன்னரே எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளியாகி ஹிட்டானது. ஆரம்பமே அமர்க்களமாகிவிடதொடர்ந்து தமிழில் ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி சாதனை படைத்ததால் எஸ்.பி.பி.யின் பெயர் கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.



 முறையாக கர்நாடக சங்கீதம் கற்காதபோதும், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி பாராட்டுகளை அள்ளினார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதைப் பெற்றார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகள், 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது என இவர் விருதுகளின் நாயகன். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். அவர் உடலுக்கு வயது கூடினாலும், குரல் என்றுமே இளமையாகத் தான் உள்ளது. நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் அவரது பயணம் தொடர்வதே இதற்குச் சாட்சி. 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும் இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார். பாடல் மட்டுமின்றி கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். நடிப்பிலும் தான் சளைத்தவரல்ல என தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் இன்றளவும் தொடர்கிறது.

Monday, June 25, 2018

நடன உத்திகளை நுட்பமாக பயின்ற பக்குவப்பட்ட நடிகை





கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர் நாட்டிய பேரொளி பத்மினி. சிறந்த நடன மங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்ட நெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல. இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும் அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.



பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத் தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி. இன்னொருவர் வைஜெயந்திமாலா.




"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்தப் பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும் சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.
அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை. விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.



கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது "தெய்வப்பிறவி".



நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.


பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும் தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.



எந்த நிலையிலும் மரணமில்லை கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேச பக்தர்தான் நடிகை பத்மினி.



அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில் "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும் ஆடிய நடனங்களையும் நாம் பார்த்து கொண்டு இருக்கலாம்" என்றார். மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.

இஸ்லாமிய தந்தை- இந்து தாயின் மகள் ஜரீனா மொய்து?




ஓர் இஸ்லாமிய தந்தைக்கும் ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா.
தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிகளிலும் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர் நதியா.
இவரது முதல் படம் மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 1984இல் வெளிவந்த ‘நோக்கெத்தா தூரத்து கந்நும் நட்டு’ என்ற படம். இதே படம் 1985இல் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு படங்களுமே வெற்றி வாகை சூடியதால் இவர் எடுத்த எடுப்பிலேயே முன்னணி கதாநாயகியாக ஒளி வீசினார்.
1984 தொடங்கி 1994 வரை முதல் சுற்றில் தமிழிலும் மலையாளத்திலும் நடித்து வந்தார். தமிழில் ராஜாதி ராஜா, உயிரே உனக்காக, பூக்களைப் பறிக்காதீர்கள், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரிய தம்பி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
1988இல் மும்பையைச் சேர்ந்த ஷ்ரீஷ் கோட்பொலே என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஷனம், ஜனா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடர்ந்தார். 1994-ராஜகுமாரன் என்ற தமிழ்ப் படத்தில் இவர் நடித்ததுதான் கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
2001-க்குப் பின் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று அங்கு வசித்து வந்தார். பின்னர் சிறிது காலம் இலண்டனில் வசித்து வந்தார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் இரண்டாவது சுற்றில் 2004-இல் தமிழில் எம்.குமரன் சன் ஒஃப் மஹாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். அதிலிருந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் மகா திமிர் பிடித்தவரென திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் கூறப்படுவதுண்டு.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து எழுதிய பாடல்?



கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.
ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும் மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.


பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி நான் மூத்த பெண் என்பதால் என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டொக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்தப் பாட்டை எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமுமாகி கல்யாணமும் செஞ்சு வைச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும்னு சொன்னார். எவ்வளவு பெரிய கூட்டம் நடந்துட்டு இருந்தாலும் சரி என் பையனைதான் மடிமேல தூக்கி வைச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும் வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ். விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.



நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கை கரை தோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேட்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்கக் கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

Sunday, June 17, 2018

பிக் பொஸ் 2 இன்று ஆரம்பம்

பிக் பொஸ் 2 நிகழ்ச்சி குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கிடைத்துள்ளன.
பிக் பொஸ் 2 நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக் பொஸ் வீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
வாஸ்து பார்த்து பிக் பொஸ் வீட்டு செட்டை போட்டுள்ளார்களாம். கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமான வீடாக உள்ளதாம். இந்த சீசனில் நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளார்களாம்.
இந்தி பிக் பொஸ் வீட்டில் சிறை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் பிக் பொஸ் வீட்டு சிறையில் கழிப்பறை வசதி கிடையாது. இம்முறை தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் சீஸனில் போட்டிகளில் தோற்றவருக்குத் தண்டனையாக அவர்மீது முட்டையை உடைத்து ஊற்றுவது, அரிசி மாவை ஊற்றுவது, மிளகாய்ப்பொடியைக் கரைத்து ஊற்றுவது, நீச்சல் குளத்துக்குள் தள்ளி விடுவது போன்றவை இருந்தன. ஆனால், இந்த முறை தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது.
காரணம், இந்த முறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஜெயில் செட்டும் போடப்பட்டுள்ளது. அதற்குள் இரும்பாலான ஒரு கட்டில் மற்றும் மேசை, விளக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே சிறைத் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், மெத்தை, தலையணை, போர்வை, ஏசி என எதுவுமே இல்லாமல் வெறும் கட்டிலில்தான் தூங்க வேண்டும்.
யார் யார் இந்தத் தண்டனைக்கு உள்ளாகின்றனர், எந்தப் போட்டியில் தோற்றவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசனில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேராம். கடந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்கள், 7 பெண் போட்டியாளர்கள் என 15 பேர் கலந்து கொண்டனர். அது போக வைல்ட் கார்ட் மூலம் நான்கு பேர் வந்தனர். இதற்காக ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிக் பொஸ்’ வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது.

பிக் பொஸ் 2 சீசனை 100 நாட்களுக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். வீட்டில் பேய் எதுவும் வந்துவிடாமல் இருக்க தகடுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாம்.

பெண்களுக்கான படுக்கையறையில் இம்முறை கழிப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் அறை தனியாக வைக்காமல் கழிப்பிடத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் தம்மடிப்பவர்களுக்கும் இடையே சண்டையை தூண்ட இந்த ஏற்பாடோ?. வீட்டை கலர்ஃபுல்லாக உருவாக்கியிருக்கிறார்களாம்.

Tuesday, June 12, 2018

தமிழ் கலைஞா்கள் பலருக்கு களம் அமைத்து கொடுத்த "கலியுக காலம்" இது

கே. எஸ். பாலச்சந்திரன் உள்ளிட்ட பல வானொலி கலைஞர்கள் திடைப்படத்துறையோடு முதல் தொடர்பை எற்படுத்திக்கொண்டது கலியுக காலம் என்ற மொழிமாற்றப்படத்தின் மூலமாகததான்.

"கலியுக காலய" என்ற சிங்களப்படத்தை T.அர்ஜுனா என்ற தமிழர் தயாரித்தார். இவர் எற்கெனவே "வசந்தயே தவசக்" என்ற சிங்களப்படத்தை தயாரித்து இயக்கியவர். அந்தப்படத்திற்காக சிறந்த படம் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். கலியக காலய படத்தில் ரொனி ரணசிங்க, நீற்றா பெர்னாண்டோ போன்ற நடிகர்கள் நடித்தனா்.( இந்த நடிகை பின்னாளில் கனடாவிற்கு குடிபெயர்ந்து, மொன்றியேல் மருத்துவமனையில் வரவேற்புபணியாளராக வேலை பார்த்தவர்) சிங்களப் படத்தை திரையிடுவதற்கு முன்னரே தமிழில் மொழிமாற்றம் செய்துவிட்டு இரண்டு மொழிகளிலும் வெளியிடலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்கவேண்டும்.

தமிழில் குரல் என்றவுடன் இலங்கை வானொலிதானே நினைவுக்கு வரும். அப்போது வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த கே.எம்.வாசகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வானொலி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகர் பட்டாளத்தை அழைத்துக்கொண்டு "சிலோன் ஸ்டூடியோ" வுக்குப் போனார்.

அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ கதாநாயகன் ரொனி ரணசிங்கவுக்கு குரல் கொடுக்க, "தணியாதாகம்" விஜயாள் பீற்றர் கதாநாயகிக்கு (நீற்றா பெர்னாண்டோ) பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடாகியது. இப்படியே ராம்தாஸ், ராஜகோபால், செல்வசேகரன், சுப்புலக்சுமி காசிநாதன் ஆகியோருடன் கே. எஸ். பாலச்சந்திரனும் குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் விஜய் கொரியா என்றொரு பிரபல ஆங்கில அறிவிப்பாளர் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். (பின்னாளில் இலங்கை ஒலிப்ரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்) அவருக்கு நடிக்கும் ஆசை ஏன் வந்ததோ தெரியவில்லை. அர்ஜுனாவின் நண்பராக இருக்கவேண்டும். அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. பீ.எஸ்.வீரப்பாவின் "ஹஹஹா" சிரிப்பு ஒன்றும் இல்லை. ஒரு சாதா வில்லன். அவருக்குத்தான் கே. எஸ். பாலச்சந்திரன் பின்னணிக் குரல் கொடுத்தார்.

ஈழத்து இரத்தினம் தமிழ் வசனங்களையும் அத்தனை பாடல்களையும் எழுதினார். தமிழ், சிங்களப்படங்களுக்கான இசையமைப்பாளராக "சண்" அறிமுகமானார். தற்போது நோர்வேயில் வசிக்கும் "சண்" 5 பாடல்களுக்கு இசையமைத்தார். "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்.. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்' என்றொரு இனிமையான பாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஏ.குலசீலநாதன், சுஜாதா என்று பலரும் பாடினார்கள். அமுதன் அண்ணாமலை ஆரம்பப் பாடலைப் பாடி அறிமுகமானார். கோணேஷ் பரமேஸ் குழுவின் எம்.பி.பரமேஸ் தனது முதலாவது திரைப்படப்பாடலை பாடியது பற்றி இவ்வாறு கூறினார்.

"கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை இசையமைப்பாளர் 'சண்' கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது"

சிங்களப்படம் வெளியிடப்படுவதற்கு முன்ன்ரே வெள்ளவத்தை
"சவோய்" தியேட்டரில்1974 ஏப்ரல் 14ந் திகதி
"கலியுகாலம்" திரையிடப்பட்டது.


இது பற்றி கே. எஸ். பாலச்சந்திரன் கூறியது, எங்கள் குரல் பெரிய திரையில் ஒலிப்பதை கேட்க ஆவலுடன் நாங்கள்தான் முண்டியடித்துப் போனோம். மற்றப்படி தியேட்டர் ஈயோட்டிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் ஓடியதே பெரிய காரியம். படத்தை இயக்கி, தயாரித்த அர்ஜுனா ஒரு ஆங்கிலப்படப்பிரியராக இருக்கவேண்டும். ஆங்கிலப்படப் பாணியில் Light Comedy படமாக எடுத்திருந்தார். சென்சார் கத்திரிக்கோல் பாவிக்கவேண்டிய காட்சிகளும் இருந்தன.

1975 மார்ச் மாதம் 3ந்திகதி ஒரிஜினல் படமான " கலியுகாலய"(சிங்களப் படம்) வெளியானது. ஆனால் அதற்குள் இது தமிழ்ப்படத்தை "டப்" பண்ணியது என்று யாரோ கதையைக் கட்டிவிட சிங்கள்ப்படமும் ஓடாமல் விட்டுவிட்டது.