Friday, October 18, 2013

வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள்: இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு

திரைக்கு வந்து 60 ஆண்டுகளாகியும் இன்றும் பேசப்படும் தமிழ்ப் படங்களின் வரிசையில் பராசக்தியையும் ரத்தக் கண்ணீரையும் தவிர்க்கவே முடியாது. முதல் படத்திற்கு கலைஞர் திரைக்கதை வசனம், இரண்டாவது படத்திற்கு திருவாரூர் தங்கராசு கதை - வசனம், பராசக்தியில் சிவாஜி தன் அபார நடிப்பினாலும் வசன உச்சரிப்பாலும் அசத்தினார்.
ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதா தனக்கேயுரிய நக்கல் - நையாண்டி நடிப்பால் கலக்கினார். இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய பேசப்படுகின்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்த் திரையுலகின் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சு. அதிகம் பேசப்படாத சாதனையாளர்களில் இவர்கள் இருவரும் அடக்கம்.
பஞ்சு என்கிற பஞ்சாபகேசனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். பிராமண சமுதாயத்தில் பிறந்த இவர், தனது பூணூலைக் கழற்றி காவிரி ஆற்றில் எறிந்து விட்டு முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்பட்டவர். அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்த் திரைப்பட இயக்கத்தின் முன்னோடியான ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்து, எடிட்டிங் பயிற்சியும் பெற்றார். அப்போது கோவை கந்தன் ஸ்டுடியோவில் (பின்னர் இது பட்சிராஜா ஸ்டுடியோ எனப் பெயர் பெற்றது) லெபராட்டரியில் கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். பஞ்சுவும் கிருஷ்ணனும் நண்பர்களானார்கள்.
மனுநீதி சோழன் கதையை ‘ஆராய்ச்சி மணி’ என்ற பெயரில் ராஜா சாண்ட்டோ இயக்கினார். அதில் பசுமாடு அழுதுகொண்டே மணி அடிப்பது போன்ற காட்சி சரியாக எடுக்கப்பட முடியாமல் இருந்தது. இதைக் கவனித்த பஞ்சுவும் கிருஷ்ணனும் ராஜாசாண்டோவிடம் இதை இப்படி எடுக்கலாமே என ஆலோசனைகள் சொன்னார்கள்.
சொல்வதைவிட செய்துகாட்டுவதே சிறந்தது என்று அவர்களிடம் சொன்ன ராஜாசாண்ட்டோ அவர்களையே அந்தக் காட்சியை எடுக்கச் சொன்னார். மிகச் சிறப்பாக எடுத்து அருமையாக எட்டிங் செய்து தந்த இருவரையும் பாராட்டியதுடன், தான் இயக்கவிருந்த ‘பூம்பாவை’ என்ற படத்தையும் அவர்கள் இருவரையுமே இயக்கச் சொன்னார் ராஜா சாண்டோ. இயக்குநர்கள் கிருஷ்ணன். பஞ்சு உருவான பின்னணி இதுதான்.
பூம்பாவை படம் 1944 இல் வெளியானது. கே.ஆர். ராமசாமி, ஜீவரத்னம், கலைவானர், டி.ஏ. மதுரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைவாணர் என்.எஸ்.கே. சிறையில் இருந்த போது அவரது குழுவினரின் நலனுக்காக ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணனும் பஞ்சுவும். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பு கலைவாணர் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரையும் நடிக்க வைத்து படத்தை வெளியிட்டனர். அண்ணாவின் கதை வசனத்தில் கலைவாணர் தயாரித்து நடித்த ‘நல்லதம்பி’ படமும் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், பெற்றால்தான் பிள்ளையா, எங்கள் தங்கம் போன்றவை இந்த இரட்டையர்கள் இயக்கிய முக்கியமான படங்களாகும். இவற்றில் சில படங்கள் இந்தியிலும் எடுக்கப்பட்ட போது அவற்றையும் இந்த இரட்டையர்களே டைரக்ட் செய்தனர்.
கதை - திரைக்கதையை சீராக அமைப்பதில் கிருஷ்ணனும், படப்பிடிப்பு படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக கவனிப்பதில் பஞ்சுவும் கெட்டிக்காரர்கள்.
இருவரும் தங்கள் பணியை சரியாகப் பகிர்ந்த கொண்டு தொடர்ந்து படங்களை இயக்கினார்கள். இருவரும் சேர்ந்து சுமார் 50 படங்களை இயக்கியுள்ளனர். 1984 இல் பஞ்சு தனது 70வது வயதில் உடல் நலமின்றி காலமானார்.
அதன் பிறகு கிருஷ்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில ஆண்டுகளில் அவரும் மறைந்தார். சிறந்த கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.

கணவருடனும் கைக்குழந்தையுடனும் சினிமாவுக்கு வந்தேன்

சௌகார் ஜhனகி
பெயர் சொன்னால் போதும் அறிமுகமே தேவையில்லாத, நடிப்பாற்றல் மிக்க அற்புதமான நடிகை செளகார் ஜானகி. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் பங்குகொள்வதற்காகவே சென்னை வந்திருந்தார். “இந்திய சினிமா பேசத் தொடங்கிய 1931ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன்.
பேசும் படத்துடன் சேர்ந்தே வளர்ந்த நான் கறுப்பு வெள்ளைப் படங்கள், கலர் படங்கள், சினிமாஸ்கோப், 70 எம். எம்., 3டி என்று எல்லாத் தொழில் நுட்ப வளர்ச்சிகளையும் பார்த்துவிட்டேன். என் தந்தை பெயர் வெங்கோஜிராவ். தாயார் பெயர் சாச்சி தேவி. கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த ஆச்சார்யமான பிராமணக் குடும்பம் எங்களுடையது. காந்திய கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட என் தந்தை சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறைக்கும் சென்று வந்தவர். இந்திய ஜனாதிபதியாக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் என் தந்தைக்கு நெருங்கிய நண்பர்.
அவரது ஆலோசனைப்படியே லண்டன் சென்று காகிதத் தயாரிப்பு தொடர்பாக மூன்றாண்டு தொழில் படிப்பைப் படித்துவிட்டு வந்தார் என் தந்தை. இதன் காரணமாக கைகளால் காகிதம் தயாரிக்கும் முறையிலும் யந்திரம் மூலம் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஏராளமான படங்களில் நடித்திருக்கும் என தங்கை கிருஷ்ண குமாரியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மற்றொரு சகோதரி தேவகி காலமாகிவிட்டார். தம்பி பாஸ்கர் குளிர்சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். எங்கள் எல்லோரையும் ஒழுக்கமான குழந்தைகளாகவும், கண்ணியமான பழக்க வழக்கங்கள் உடையவர்களாகவும் எங்கள் தந்தை வளர்த்தார். திரைப்படத் துறையினர் என்னுடைய நேரம் தவறாமை குறித்து பாராட்டிப் பேசுவார்கள். இதற்குக் காரணம் இது போன்ற நல்ல குணங்களை சாப்பாட்டுடன் சேர்த்து எங்களுக்கு ஊட்டி வளர்த்தது என் தந்தைதான். மேலும் இன்று நான் சிறப்பாக ஆங்கிலம் பேசுவதற்குக் காணமும் என் தந்தைதான்.
தினமும் காலை ஆங்கிலச் செய்தித்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது படித்து, புதிது புதிதாக ஆங்கிலச் சொற்களை அன்றாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை எங்களுக்கு அவர் ஏற்படுத்தினார். என் தந்தை முதலில் ஆந்திராவிலுள்ள தாயாராம் சன்ஸ் என்ற பேப்பர் மில்லில் பணியாற்றினார்.
பின்னர் பெங்காலில் உள்ள ஷட்டகா பேபர் மில்லுக்குச் சொன்றார். இப்படி பல மாநிலங்களுக்கும் அவர் பணி மாறிய காரணத்தால் என்னால் பள்ளிப்படிப்பை இரண்டாவது பாரத்துக்கு மேல் தொடர முடியவில்லை. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் சிறிது காலம் வசித்த போது, சாரதா வித்தியாலயா பள்ளியில் நான் படித்தேன்.
அப்போது சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வேன். அப்போது பல ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பிறகு, எனது குரல் நன்றாக இருப்பதாகக் கூறி பெரியார்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளிலும் எனக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர். எனக்கு அப்போது ‘ஏ கிரேட் ஆர்டிஸ்ட்’ என்ற அந்தஸ்தையும் அளித்தனர். பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு கணக்கு கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை. கணக்கு என்றாலே அலர்ஜியாக இருந்தது.
எனவே என் தந்தையிடம் மன்றாடி கணக்குப் பாடம் இல்லாத வகையில் வேறு பள்ளியில் என்னை மாற்றிவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனவே என் தந்தை சமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்ட பாடத் திட்டத்தின் கீழ் ஆந்திரா மகிள சபா பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆந்திரா மகிள சபா பள்ளியில் படித்த போது என்னால் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காந்தி அப்போது சென்னை வந்து மூன்று நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தி பிரசார சபாவில்தான் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு மூன்று நாட்களும் உடனிருந்து பணிவிடை செய்ய ஆந்திரா மகிள சபா நிர்வாகி துர்காபாய் தேஷ்முக் என்னை தேர்வு செய்து அனுப்பினார். காந்தி சென்னையில் இருந்த மூன்று நாள்களும் அவருக்குப் பணிவிடைகள் செய்ததை என் வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் பள்ளியில் நடக்கும் கலை விழாவின் போது நான் நாடகங்களில் தவறாமல் பங்கு கொள்வேன். ஒரு முறை துர்க்காபாய் தேஷ்முக் என் தந்தையிடம் உங்கள் பெண்ணுக்கு படிப்பைவிட கலைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கிறது.
நாடகங்களில் சிறப்பாக நடிக்கிறாள்’ என்று பாராட்டிச் சொன்னார். ஒரு முறை நான் பங்கு பெற்ற ரேடியோ நாடகம் ஒன்றைக் கேட்ட தயாரிப்பாளர் பி. என். ரெட்டி ரேடியோ ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் மூத்த சகோதரர் இவர் பின்னர் ரேடியோ ஸ்டேஷனுக்கே வந்து அங்குள்ள அதிகாரிகள் மூலம் என்னைப் பார்த்தார்.
‘உன் குரலைப் போலவே நீயும் அழகாகத்தான் இருக்கிறாய். நான் எடுக்கும் ‘குண சுந்தரி கதா’ என்ற படத்தில் நீ நடிக்கின்றாயா? என்று கேட்டார் அவர் இப்படிக் கேட்டதும் நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என் ஆழ மனதில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. “வீட்டில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லி விட்டேன். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை எனது அண்ணனின் ஆதிக்கம்தான் அதிகம். பல முக்கிய முடிவுகளை அண்ணன்தான் எடுப்பார்.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் சொன்னதுதான் தாமதம் அவ்வளவுதான்... பெல்ட்டை எடுத்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார் அண்ணன். வீடே இரண்டுபட்டுப் போனது. சினிமாவில் நடிப்பது குறித்து பேச்சு வந்ததுதான் தாமதம், உடனடியாக எனக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற முடிவுக்கு வீட்டில் உள்ளவர்கள் வந்துவிட்டார்கள்.
அவசரத்தில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. காக்கிநாமாவிலுள்ள ரேடியோ நிலையத்தில் பணியாற்றும் சீனிவாசராவ் என்பவரை முடிவு செய்துவிட்டனர். என் அப்பாவுக்கு இவரை மிகவும் பிடிக்கக் காரணம் நன்கு படித்த நல்ல வேளையில் இருந்த இவருக்கு சிகரட், மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருப்பார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி என் சுதந்திரம் பரிபோனது. ஆம் அன்றுதான் என் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு விஜயவாடாவில் சத்திய நாராயணபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடி புகுந்தோம். அப்போது என் தந்தை அஸ்ஸாம் மாநிலத்தின் ஷில்லங்கல் உள்ள ஒரு காகித ஆலையில் பணியாற்றி வந்தார். என் கணவருக்கு தான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் என்ன காரணத்தாலோ ஏற்பட்டுவிட்டது.
உடனே என் தந்தையுடன் தொடர்பு கொண்டு அஸ்ஸாமிலேயே தனக்கு ஒரு ‘ரி(ளிlழி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்க, அவரும் சரி வாருங்கள் என்று சொல்லிவிட்டார். உடனே என் கணவரும் அப்போது பார்த்து வந்த வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு அஸ்ஸாம் புறப்படத் தயாராகி விட்டார். இவையெல்லாம் எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது. என்னைக் கலந்தாலோசிக்காமலேயே அவர் எல்லாவற்றையும் செய்து விட்டார். வேறு ஒரு நல்ல வேலை உறுதியாகாமல் தற்போது பார்த்து வந்த வேலையை விட்டது தவறு என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். கணவரும் நானும் ஷில்லாங் போய் இறங்கும் போது எனக்கு நல்ல காய்ச்சல்.
ஆஸ்பத்திரிக்குச் சென்றால் நான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார் டொக்டர். ஷில்லாங்கில் என் கணவர் வேலை தேட ஆரம்பித்தார். அப்போது மெட்ரிக்குலேஷன் படித்து வந்த என் தங்கையின் புத்தகங்களை நானும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். பகலில் தங்கை படிக்கும் அதே புத்தகங்களை இரவில் நான் படிப்பேன். இப்படியே படித்து தனியாக மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதினேன்.

Tuesday, October 1, 2013

சினிமாத் துணுக்குகள்

உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளின் தந்தையுமான தோமஸ் அல்வா எடிசன் தான் இன்றைய சினிமாவிற்கும் தந்தையும் தாயுமாவார். அவர் கண்டுபிடித்த கருவியின் பெயர்: ‘கினிடாஸ்கோப்’ இந்த ‘கினிடாஸ்கோப்’ என்ற கருவியை பெட்டி போன்ற அமைப்பில் உருவாக்கினார்.
இந்தப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஒரு லென்சு அமைக்கப்பட்டிருந்தது. இந்த லென்சின் வழியாகப் பார்த்தால் உள்ளே படங்கள் தெரியும். இதிலுள்ள குறை, ஒருவர் மட்டுமே இதைப் பார்க்க முடியும் என்பதே. என்றாலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு படம் பார்த்தனர்.
* தோமஸ் அல்வா எடிசன்தான் முதன் முதலில் காதல் காட்சியைப் படமாக்கியவர்.
இவர்தான் முதன்முறையாக பலரும் கண்டுகளிக்கும் விதத்தில் திரையில் காண்பிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். 1894ஆம் ஆண்டு ‘ரிச்மண்ட்’ என்ற இடத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
* இவர்தான் முதன்முதலில் திரைப்படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கினார். ஸ்டுடியோவின் பெயர் ‘பிளாக் மரியா’
* திரைப்படம் எடுக்கின்ற ஃபிலிமின் அளவு 35ணிணி என்பதை நிர்ணயம் செய்தவர் ‘எடிசன்’ தான்.
* ஃபிலிம்கள் கெமராவிலும், புரொஜக்டரிலும் ஒரே சீரான அளவில் சுழல்வதற்கு ஏற்ற விதத்தில் ஃபிலிமின் இரு புறங்களிலும் முதல்முறையாகத் துளையிட்டவர் ‘தோமஸ் அல்வா எடிசன்’ ஆவார்.
* சலனப்படத்திற்கு வித்திட்டவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லூமியர் சகோதரர்கள்’ ஆவர். ஒருவரின் பெயர் லூயிஸ், இன்னொருவரின் பெயர் அகஸ்டஸ் லூமி. இந்த இரண்டு சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து ‘லியான்ஸ்’ நகரில் புகைப்படக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினர். திரைப்படத்தின்மேல் கொண்ட காதலால் தாங்கள் தயாரித்த கெமராவின் மூலம் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வெளியேறும் காட்சியைப் படம் பிடித்தார்கள். இப்படத்தை 1895ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் பாரீஸ் நகரிலுள்ள வியாபாரிகளுக்குப் போட்டுக் காண்பித்து அவர்களை வியக்க வைத்து, தொடர்ந்து படமெடுத்தனர்.
* இன்று ‘அனிமேஷன்.... அனிமேஷன்’ என்று பேசப்படுகிறதே, அதற்கு அன்றே வித்திட்டவர் ‘ஜோர்ஜ் மெல்லீஸ்’ ஆவார். இவர் 1902ல்  Thip to the Moon திரைப்படத்தில் அனிமேஷன்(Animation)  காட்சிகளை இடம்பெறச்செய்தார்.
* ஜோர்ஜ் மெல்லீஸ் தான் இன்று பேசப்படும் தந்திரக் காட்சிகளுக்கு வித்திட்டவர். மேலும் இவர் Disscive, Fade in, Fade out, Slow Motion, Speed motionபோன்ற திரைக் கலை நுட்பங்களை திரைப்படத்தில் இடம்பெறச்செய்தவர்.
* குளோசப் காட்சியை எத்தகைய இடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அறிவித்தமுன்னோடி ‘எட்வின் போர்ட்டர்’ ஆவார். ‘எடிட்டிங்’ கிலும் சாதனை செய்தவர். இன்றைய அக்ஷன் படங்களுக்கு முன்னோடியான இவர், இயக்கி தயாரித்த (தி கிரேட்ட்ரெய்ன் ரொபரி’ (1903) அன்று மகத்தான வசூலைத் தந்தது.
* எடிட்டிங்கால் அடுத்தடுத்து காட்சிகளை உருவாக்கி மக்களை மிகவும் கவர்ந்த இயக்குநர் ‘சிசில் ஹேப்வொர்த்’ ஆவார் இவரின் சாதனைப் படம் ‘ரெஸ்க்யூடு பைரோவர்’ (1905).
* திரைப்படத் துறையில் பல மாறுதல்களைச் செய்து சாதனை புரிந்தவர் இயக்குநர் ‘டேவிட் வார்க் கிரிஃபித்’ ஆவார் இவரை ‘திரைப்படத்தின் தந்தை’ எனப் பாராட்டுகிறார்கள். குளோசப் காட்சிகளுக்கு தனி அந்தஸ்தை உருவாக்கியவர். மேலும் திரைப்படக் காட்சிகளை விறுவிறுப்பாக்கிக் காட்டவேண்டும் என்பதற்காக இரண்டு வெவ்வேறு காட்சிகளை“Cross Cutting என்னும் முறையில் எடிட்டிங்செய்து சாதனை புரிந்தவர்.
* கிரிஃபித் தான் முதன்முதலில் வெளிப்புறங்களில் படம் எடுத்தவர்.
* திரைப்படத்தில் லோங் ஷொட், மீடியம் ஷாட், மீடியம் குளோசப் ஷாட், மீடியம் லோங் ஷொட் குளோசப் ஷொட், டைட் குளோசப் ஷொட் போன்ற பல்வேறு ‘ஷொட்’களில் தேவைக்கேற்ப படம் பிடித்துக் காண்பிக்க முடியும் என்பதை சிந்தித்து செயல் படுத்தியவர் ‘கிரிஃபித்’ தான்.
* முதன்முறையாக பிரம்மாண்டமான படம் எடுத்துச் சாதனை புரிந்தவர்’ கிரிஃபித்’ ஆவார். இவர் உருவாக்கிய ‘தி பார்த் ஆஃப் எநேஷன்’, இன்ட்டாவரன்ஸ்’ (முறையே 1915, 1916) போன்ற படங்கள் இன்று திரைப்பட வல்லுனர்களால் போற்றப்பட்டு வருகின்றன.

கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக ஜெயலலிதா நடித்த படம்

‘அம்மா என்றால் அன்பு’ அடிமைப்பெண்ணில் ஜெயலலிதா பாடிய பாடல்
1969ம் ஆண்டில் ‘அடிமைப் பெண்’, ‘நம் நாடு’ ஆகிய 2 படங்களில் எம். ஜி. ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப் படங்கள் என்றாலும், ‘அடிமைப்பெண்’ மெகாஹிட் படம். எம். ஜி. ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப் பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம். ஜி. ஆர். டைரக்டர் செய்யவில்லை. கே. சங்கர் டைரக்ட் செய்தார்.
அடிமைப் பெண்ணின் கதையை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே. வி. மகாதேவன் இசை அமைத்தார்.
ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே. ஆர். விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன் ஆர். எஸ். மனோகர், ‘சோ’, ஓ. ஏ. கே. தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். ‘அடிமைப்பெண்’ கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது. செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான்.
அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான். ‘உன் குழந்தையைக் கொலை செய்வேன்’ என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக்கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.
மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான். செங்கோடன் பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.
இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான். ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப் பெண்களை விடுவிக்கிறான். 1.5.1969 வெளியான இந்தப் படத்தில், எம். ஜி. ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஆரம்பக் காட்சிகளில் முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம். ஜி. ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இப்படத்தில் ஜெயலலிதா மிகச் சிறப்பாக நடித்ததோடு, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார்.
வாலி எழுதிய ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற பாடலும் புலமைப்பித்தனின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலும் ஹிட்டாகின.
‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம். ஜி. ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.
‘அடிமைப்பெண்’ மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உட்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
திருச்சி, கோவை, சேலம் உட்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்டரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

சந்திரபாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும்பகை புகைய காரணமென்ன?

நகைச்சுவை நடிகர் சந்திரபாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த விரிசல் என்ன? சந்திரபாபு ஏன் தற்கொலை செய்து கொண்டார்?
குலேபகாவலி படப்படிப்பின் போது சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எம்.ஜி.ஆரை தவிர எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர். சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்” (எல்லோரையும் மிஸ்டர் என்றுதான் அழைப்பார்)
“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”
இதனை அவமானமாக உணர்ந்த சந்திரபாபு மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்து கொண்டது அவர் எப்போதும் எதிலும் தான் மட்டுமே பிரயலமாகத் தெரிய வேண்டும் என்றுநினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.
அதை பற்றி சந்திரபாபு சொன்னது,
“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான்கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்”
குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர். படங்களில் கொமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் கொமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு சென்றன.
அதில் இருந்து “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால் நான் கால்iட் தரமாட்டேன்’ என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுக்கு தெரிய வந்தது.
ஆனால் அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்த பேசியிருக்கிறார்.
சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுபோல காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதா விடம் சந்திரபாபு கேட்டதற்கு ஜெயலலிதா சந்திரபாபுவை விழாவில் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம். இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும் ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர். சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முற்பணம் வாங்கிய எம்.ஜி.ஆர். பூஜைக்கும் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆரின் கால்iட் கிடைக்கவே இல்லை.
நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணெதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
‘நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்ஷன் போயும் கூடத்தான்” என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.
கடைசியில் அவரை பார்த்த போது கால்iட் பற்றி கேட்டிருக்கிறார். கால்iட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளுமாறு எம்.ஜி.ஆர். சொல்ல அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.
அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல் ஒரு கட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய் அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துகள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக குடி கெட்டது.
ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கொம்பவுண்டராப் போகலாம்.
இதைப்போன்ற அவரின் வெளிப்படையான பேச்சுதான் அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பகையை வளர்த்தது.
அடுத்ததாக...... சந்திரபாபு தற்கொலையெல்லாம் செய்து கொள்ளவில்லை. எம்.ஜி. ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார் சந்திரபாபு. ஆனால் படம் பாதியுடன் நின்றுவிட்டது. இதன் காரணமாக குடிப்பழக்கம் அதிகரித்தது அவருக்கு.
அதிகரிக்க அதிகரிக்க உடல் நிலை மோசமடைந்து ஒரு நாள் இரத்த வாந்தி எடுத்தார். அத்துடன் அவர் கதை முடிந்துவிட்டது.