வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். வாலிக்கு ஓவியத்தின் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி. அவரைப்போல தானும் பிரபலமான ஓவியனாக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக் கொண்டாராம். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார். அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, ‘அதென்னப்பா பேரு வாலி? வாலே இல்ல, நீ வாலியா? என்றாராம்... நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே.

வாலியாகக் கூடாதா?
கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?
என்று சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்... ‘ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது. நீ ஒழுங்கா கவிதை எழுது’னு அவர் தான் வாவியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்...
அப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார். கண்ணதாசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டுகொள்ளவில்லை. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனில் காத்திருந்தார். அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது. ‘மயக்கமா கலக்கமா... மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.
அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்தப் பாடலை எழுதியவர் வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன்!!!! இது தான் விதி என்பது...
****

வார்த்தையெல்லாம் நல்லாதான் இருக்கு, வாசனைதான் சரியில்லை என்று சொல்லி ஊதுபத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார் செட்டியார்.
நான் ஆணையிட்டால் பாடலை வாலி முதலில் வேறு மாதிரி எழுதியிருந்தார். நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்... படத்தை தயாரித்த நாகிரெட்டிக்கு உடன்பாடில்லை. ரொம்ப அரசியல் என்கிறார்.
சென்சார் உறுப்பினர் பத்து வரியை நீக்கச் சொல்லியிருக்கிறார். கடைசியில் பஞ்சாயத்து வந்தது எம். ஜி. ஆரிடம் நானாக இருந்தால் பிள்ளையார் சுழியைத் தவிர எல்லாத்தையும் நீக்கச் சொல்லியிருப்பேன் என்கிறார். பின்னே... அண்ணா இருக்கையில் எம். ஜீ. ஆர். நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால்.... பாடுவதா? கடைசியில் அண்ணாதான் வாலிக்கு வார்த்தை தந்தார். நான் ஆணையிட்டால் தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசியதை வைத்து நான் அரசன் என்றால், நான் ஆணையிட்டால் என மாறியது. பாட்டும் இன்றுவரை சூப்பர்ஹிட்.
படகோட்டி சமயம் வாலிக்கு ஃப்ளு காய்ச்சல், 104 டிகிரி 7 பாடல்களில் 6 முடித்தாயிற்று. ஒன்று பாக்கி, வாலியை தொந்தரவு பண்ண வேண்டாம் வேறு யாரையாவது எழுதச் சொல்லலாம் என்கிறார் தயாரிப்பாளர். மெல்லிசை மன்னர் எம். எஸ். வி.க்கு அதில் உடன்பாடில்லை. இசைச் சக்கரவர்த்திக்கு ஏது ஈகோ. ஆர்மோனிய பெட்டியுடன் வாலியின் வீட்டுக்கே சென்று டியூன் போட, படுத்துக் கொண்டே வாலி பாட்டெழுதினார்.
வாலி ஸ்கொட்ச் அடித்தும் பாட்டெழுதியிருக்கிறார். காய்ச்சலில் படுத்தும் எழுதியிருக்கிறார்.
இவை வாலி என்னும் வார்த்தை கடலின் சில துளிகள் மட்டுமே. அள்ளி குடிக்க விரும்புகிறவர்களுக்கு நெல்லை ஜெயந்தனின் வாலிப வாலி ஒரு தெள்ளிய நீரோடை.
‘ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்’
இது 1950 களில் கவிஞர் வாலி எழுதி டி. எம். எஸ். மனமுருகப் பாடிய முருகப் பெருமானைப் பற்றிய பாடல்.
வாலிக்கு வந்த தீராத வினையையெல்லாம் தீர்த்து, வாராத நிலைக்கும் அவரை வரவைத்த முருகப் பெருமானின் திருவடியை 18.07.2013 அன்று சரணடைந்துவிட்டார் வாலி.

முத்துராமனுக்கு, ஜெமினிகணேசனுக்கு, ஜெய்சங்கருக்கு, ரவிச்சந்திரனுக்கு, நாகேசுக்கு என பாட்டுக்கட்டி வந்த வாலியின் புகழ்க் கொடி, எம். ஜி. ஆருக்கு, சிவாஜிக்கு எழுத ஆரம்பித்ததும் மேலும் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என நீ...ண்ட அவரது திரைப்பாடல் இன்றைய தனுஷ் வரை தொடர்ந்தது.
அதேபோல டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனில் தொடங்கி இப்போதைய ஷங்கர் வரை அனைத்து இயக்குனர்களுடனும் ஐக்கியமானவர் வாலி. திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், இப்படி புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களுடன் மட்டுமல்ல, புகழ் பெறும் லட்சியத்தோடு வந்த புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பேதம் பார்க்காமல் கீதம் வளர்த்தவர் வாலி.
ஐயராத்துப் பெண் ஒருத்தி, தாழ்த்தப்பட்டவள் என சான்றிதழல் வாங்கி கலெக்டரும் ஆகிவிடும் கதையுடன் வந்த படம். ‘ஒரே ஒரு கிராமத்திலே’ அந்தப் படத்திற்கு கதை, வசனம், எழுதிய வாலியும் கலெக்டராகும் கதாநாயகியாக நடித்த லட்சுமியும் தங்கள் வேலையைக் காட்டிவிட்டார்கள் என்று அப்போது பெரிய சர்ச்சை கிளம்பியது. அதே போல் ‘சமஞ்சது எப்படி’ என்ற பாட்டெழுதியும் சர்ச்சையில் சிக்கினாலும் ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலே எழுதி இளைஞர்களின் மனசில் வாலிபக் கவிஞன் ஆனார் காவியக் கவிஞர் வாலி.
‘அழகர்மலைக் கள்ளனில் முதல் வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, எனக்கு விலாசம் தந்த விசால மனதுக்குச் சொந்தக்காரன் வி. கோபாலகிருஷ்ணன்’ என அந்தக் குணச்சித்திர நடிகரை இன்றும் நன்றி மறவாமல் தன் இதயத்தில் சித்திரமாய் பதிய வைத்திருக்கும் ஓங்கி உயர்ந்த குணசீலர் வாலி. ‘மரணம் என்பது மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளி தான். ஆனால், வெற்றுப் புள்ளிகளுக்குத்தான் அந்த முற்றுப் புள்ளி பொருந்தும்.
அரும்புள்ளி, பெரும்புள்ளி என்றெல்லாம் ஏத்துமளவு அரிய பெரிய சாதனைகளை ஆற்றியோர் விஷயத்தில் அது கரும்புள்ளியல்ல, காற்புள்ளி, ஆம் அவர்கள் இறந்தும் இருக்கிறார்கள். குரலால் தேன் வார்த்த பி. பி. ஸ்ரீனிவாசுக்கும் விரலால் தேன்வார்த்த (விஸ்வநாதன்) ராமமூர்த்திக்கும் இது பொருந்தும்’ என மனம் உருகி எழுதியிருந்தார்.
No comments:
Post a Comment