Tuesday, July 9, 2013

குழந்தை நட்சத்திரமாக 175க்கு மேற்பட்ட படங்களில் நடித்த குட்டி சாவித்திரி பத்மினி

இந்தியாவிலேயே -ஏன், அகில உலகத்திலேயே எந்தக் குழந்தை நட்சத்திரத்துக்கும் கிடைத்திராத பெருமை, குட்டி பத்மினிக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக 175 க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர்! “குழந்தையும் தெய்வமும்” படத்தில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.
சிறு வயதிலேயே விருதுகள் பெற்ற “குட்டி பத்மினி, இப்போது சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக தனது கலைப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
“குட்டி” பத்மினி கூறியதாவது,
“குடும்ப வழியில்தான் எனக்கும் நடிப்பு வந்தது. தாத்தாவுக்கு மதுரை பக்கம் சொந்த ஊர். ஒயில் மில் வேலைக்காக “பொஷியா” நாட்டுக்கு போனார். அங்கே பாட்டிக்கும், தாத்தாவுக்கும் காதல் ஏற்பட, இந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.
தாத்தா, பாட்டியுடன் சொந்த ஊர் மதுரைக்கு திரும்பி வந்த போது, அம்மாவுக்கு 17 வயது அம்மாவுக்கும் காதல் திருமணம்தான். மைசூரைச் சேர்ந்த சீனிவாசன் சக்ரவர்த்தி அய்யங்காரை காதலித்து மணந்து கொண்டார். அப்பாவின் அப்பா மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் போஷகராக இருந்தவர்.
எனக்கு 2 அக்கா 2 அண்ணன்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி. சிறு வயதிலேயே குறும்பு அதிகம் என்று அம்மா சொல்வார்கள்.
அப்பாவுக்கு, சினிமாத்துறை மீது நாட்டம் ஏற்பட்டு சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது அம்மாவுக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். பின்னாளில் சில படங்களில் அம்மா, அக்கா வேடங்களையும் ஏற்றார். “ஜெமினி”யின் பெரும்பாலான படங்களில் அம்மா இருப்பார்.
நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அம்மாவுக்கும் நடிகை சாவித்திரிக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஆழமானபோது சாவித்திரியின் “ஹேர் டிரஸ்ஸராகவும்” அம்மா இருந்தார். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்த நேரத்தில் அம்மா “பாக்யலட்சுமி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிக்க 3 மாதக் கு¡ந்தை ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. குழந்தையை கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் வரத் தாமதமாக, அதற்கு மேல் பொறுமையில்லாத டைரக்டர் பார்வையில் நான் பட்டிருக்கிறேன்.
“இது யார் குழந்தை?” என கேட்டிருக்கிறார். அம்மா “இது என் குழந்தைதான்” என்று சொல்ல “குழந்தையை தொட்டிலில் போட்டு இன்றைய பாடல் காட்சியை எடுத்து விடலாமா?” என்று கேட்டிருக்கிறார் அம்மாவும் சம்மதம் சொல்ல, அந்தப் பாடல் காட்சிதான் சினிமாவில் நான் வந்த முதல் காட்சி.
கொஞ்சம் வளர்ந்த நிலையில் “காத்திருந்த கண்கள்”, “பாசமலர்” படங்களில் குட்டி சாவித்திரியாக வந்ததும் நான்தான் இப்படி “நடிப்பு” என்றே தெரியாமல் இரண்டொரு படங்களில் நடித்த நிலையில் வந்த வாய்ப்புதான் டைரக்டர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு ஸ்ரீதர் சார் படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிய வந்ததும் நிறைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் படக்கம்பெனிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அம்மா என்னை அழைத்துப் போயிருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திர தேர்வுக்கு, பின்னாளில் குணச்சித்ர நடிகையாக பரிமளித்த ஸ்ரீவித்யாவும் வந்திருந்தார். ஆனால், தேர்வு செய்யப்பட்டது நான்தான்!
இந்தத் தேர்வின் போது டைரக்டர் ஸ்ரீதர் சார், கெமரா மேன் வின்சென்ட், பி. மாதவன் உட்பட தனது குழுவினருடன் அறைக்குள் இருந்தார். அந்த அறைக்கு இருந்த தள்ளு கதவு மூலம் அறைக்குள் நடப்பதை பார்க்க முடியும். நான் கீழே குனிந்து “என்னை எப்ப கூப்பிடப் போaங்க அங்கிள்?” என்று கேட்டேன். “அட யாரது? சரியான சுட்டிக் குழந்தையாக இருக்கிறதே’ என்று என்னைப் பார்த்து ஸ்ரீதருடன் இருந்த பி. மாதவன் வியந்தார். அறைக்குள் நான் அழைக்கப்பட்டதும் மாதவன் சார் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்து பேசச் சொன்னார். அப்படியே பேசினேன். செல்க்ட் ஆனேன்.
பின்னாட்களில் நடிகையாகி விட்ட ஸ்ரீவித்யா என்னைப் பார்க்கும் போதெல்லாம் “எனக்கு கிடைக்க வேண்டிய “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு உனக்கு வந்திருச்சு” என்று கலாட்டா செய்து கொண்டிருப்பார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜயா வாகினி ஸ்டூடியோவில் ஆஸ்பத்திரி செட் போட்டிருந்தார்கள். காலை 6 மணிக்கு செட்டுக்கு போனால் படப்பிடிப்பு முடிய இரவு 9 மணி ஆகிவிடும்.
படப்பிடிப்பில் நடிகர் நாகேஷ் சார் என்னிடம் ஏதாவது கலாட்டா பண்ணிக் கொண்டே இருப்பார். கல்யாண்குமார், தேவிகா இருவரும் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்கள். முத்துராமன் சார் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பார். செட்டில் எனக்கு பிஸ்கெட், சொக்லெட் தருவார்கள். நடிக்கிற நேரம் தவிர மற்ற நேரம் என் கையில் பிஸ்கெட் அல்லது சொக்லெட் இருக்கும்.
டைரக்டர் ஸ்ரீதர் சேர் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு கணக்கு நோட்டை பார்த்திருக்கிறார். அதில் என் பெயரைப் போட்டு தினமும் 7 பிஸ்கெட் பக்கெட் என எழுதப்பட்டு இருந்திருக்கிறது. “ஒரு சின்னக்குழந்தை எப்படி தினமும் 7 பிஸ்கெட் பக்கெட்டுகள் சாப்பிடும்?” என்று ஸ்ரீதர் சாருக்கு சந்தேகம் எழ, “நிஜமாகவே தினமும் 7 பிஸ்கெட் பக்கெட் நான் காலி பண்ணுகிறேனா?” என்று பார்க்க ஆள் வைத்திருக்கிறார்.
மறுநாள் என் கையில் புரொடக்ஷனில் இருந்து 2 பிஸ்கெட் பக்கெட்டுகள் கொடுத்தார்கள். அடுத்த வினாடியே அங்கு வந்த நாகேஷ் சார், அதில் ஒரு பக்கெட்டை என்னிடம் இருந்து பறிக்காத குறையாக வாங்கிக் கொண்டார் பக்கெட்டை பிரித்து அவர் “கறுக் மொறுக்” என்று தின்றதோடல்லாமல் தன் யூனிட் நண்பர்களுக்கும் ஆளுக்கு இரண்டு பிஸ்கெட் கொடுத்து பக்கெட்டை காலி செய்தார். இந்தத் தகவல் ஸ்ரீதர் சேருக்கு போனது. அவர் நாகேஷ் சேரை அழைத்து “அடப்பாவி! சின்னக் குழந்தை கிட்ட இருந்து பிஸ்கெட்டை பிடுங்கி சாப்பிடுறது நீதானா?” என்று கேட்டார் இந்த வகையில் தினம் 7 பிஸ்கெட் பக்கெட் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்தது”.
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

No comments:

Post a Comment