Thursday, May 25, 2023

பொன்விழா நாயகன் கலைஞர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

கலைஞர், கவிஞர், நாடக நெறியாளர் என கலைத்துறையிலே பல்வேறு ஆளுமைகளைக் கொண்டவர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

இலங்கையில் கலைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்து 50 வருடங்களுக்கு மேலாக கலைத்துறைக்கு அரும்பணி ஆற்றி வருபவர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

பெயரிலேயே செல்வத்தையும் ராஜாவையும் கொண்ட இவர் காசு பணம் இருக்குதோ இல்லையோ கலைத்துறையிலே செல்வச் செழிப்புடன் என்றும் ராஜாவாகத் திகழ்கிறார்.

இவர் கலைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 2023.05.28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் பொன்விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில் கலைஜோதி விருது வழங்கி 35 கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இங்கு சிறப்பு அம்சமாக துள்ளுவதோ இளமை என்ற நகைச்சுவை நாடகமும் அரங்கேறவுள்ளது. இந்த நாடகத்தை பொன் பத்மநாதன் தயாரித்து அளிக்கிறார். இந்த நாடகத்தில் பி. நந்தகுமார், எம். கே. சிதாகர், தேவர் முனிவர், கே. விஷய், எஸ். யுவராஜா, பி. மாக்ரட், ஏ. வீரபுஸ்பநாதன், எஸ். சரவணா, ஆர். கணேறன், வீ. டிலுக்‌ஷன், எஸ். சந்தியா ஆகியோர் நடிக்கின்றனர். கலாபூஸணம் கே. செல்வராஜன் இயக்கும் இந்த நாடகத்தின் உதவி தயாரிப்பு பணியில் எஸ். யுவராஜாவும் இசையமைப்பில் கே. அசோகனும் தங்கள் திறன்களை காட்டவுள்ளனர். இவ்விழாவில் கலைஞர்களின் பரத நாட்டியமும் நாட்டிய நாடகமும் திரையிசை நடனங்களும் இடம்பெறவுள்ளன. கலாபூஷணம் கே. செல்வராஜனின் பொன்விழா சிறப்பு நிகழ்வை சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ் அமைப்பின் போஷகர் பொன் பத்மநாதன், செயலாளர் எம். தேவர் முனிவர், வித்யாசாகர் ஏ. சசாங்கன் சர்மா ஆகியோர் நடத்துகின்றனர். நிழ்ச்சிகளை வித்யாசாகர் ஏ. சசாங்கன் சர்மா தொகுத்து வழங்குகிறார்.

இதில் வரவேற்புரையை கலைமாமணி பொன் பத்மநாதனும் தலைமையுரையை கே,டீ. குருசாமி, பாராட்டுரையை தமிழ்மணி மானா மக்கீனும் சிறப்புரையை கலாபூஷணம் கலைச்செல்வன், வாழ்த்துரையை டீ. மகேந்திரனும் நிகழ்த்தவுள்ளனர்.

1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி வடகொழும்பில் சுப்பிரமணியம் கந்தையா, சங்கரம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர், ஜிந்துப்பிட்டி, ஊருகொட வத்தை, புதுச்செட்டித்தெரு ஆகிய இடங்களில் வளர்ந்தவர். கொழும்பு 09, தெமட்டகொடை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இந்த பாடசாலை இன்று விபுலானந்தர் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பாடசாலை அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், நடிகரும் தயாரிப்பாளருமான கே. சந்திரசேகரன், கல்வியியலா

ளர் ஜி.போல்அந்தனி, வி.கே.டி. பாலன், எம். கனகராஜ் பிரபல்யங்களை பலரை உருவாக்கிய பாடசாலையாகத் திகழ்கிறது.

பாடசாலையிலே பயில்கின்ற காலத்திலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டவர் கலைஞர் கலாபூஷணம் கே. செல்வராஜன். இவர் கவிதை எழுதும் திறனைக் கண்ட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

ஊருகொடவத்தையில் ஒரு நாள் 'அரிச்சந்திரா' நாடகத்தை மேடையேற்றினார்கள். பலகைகளை அடுக்கி மேடை

அமைத்து ஓலைகளால் மறைத்து, மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த நாடகத்தை மேடையேற்றினார்கள். சுமார் மூன்று மணி

நேரம் மேடையேற்றப்படும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பரவசம் அடைந்து இருக்கும் தருவாயில் இரவு

பதினொரு மணிக்கு மீண்டும் இந்த நாடகம் இரண்டாவது தடவையும் மேடையேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் அதே பரவசத்துடன் ஒரு மணி நேரம் காத்திருந்து மீண்டும் அந்த நாடகத்தைப் பார்த்து விட்டுத் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். நாடகத்தின் மீது அவருக்கு அப்போதே அவ்வளவு ஆர்வம் இருந்தது.

இந்த நாடகம் தந்த ஈர்ப்பால் தன்னுடன் பாடசாலையில் படிக்கும் சக மாணவர்களையும் இழுத்துக் கொண்டு 'நல்ல நாடு' என்ற ஒரு நாடகத்தைத் தானே எழுதி மாணவர்களை நடிக்க வைத்து பாடசாலைக் கலைவிழாவில் அரங்கேற்றியுள்ளார்.

தனது 18வது வயதில் பெற்றோர்களுடன் இவர் ஜிந்துப்பிட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவருக்குள் இருந்த அரங்கு பற்றிய ஆர்வமும் செல்வராஜனை அங்கிருந்த நாடகக் கலைஞர்களுடன் இணைத்து விட்டது.

எம்.எம்.ஏ. லத்தீப், கே.ஏ.ஜவாகர், ஆர்.பி. மகாராஜா, ஏ.ஸி.எம் ஹூசைன் பாருக், ஜோபு நசீர் போன்றவர்களுடன் இளம் கலைஞர் குழுவில் இணைந்து கொண்டார்.

இவருடைய கவிதைகள் மெட்டமைத்த பாடல்களாக இவர்களின் நாடகங்களில் இடம்பிடித்துக் கொண்டன.

1973ல் இவர் எழுதிய 'பாவ சங்கீர்த்தனம்' என்னும் நாடகம் ஏ.ஸி.எம் ஹூசைன் பாருக் இயக்கத்தில், லத்தீப் ப்ரொடக்சன் மூலம் மேடை ஏறப் போவதாக விளம்பரங்கள் வந்தன.

அடுத்த நாள் செல்வராஜனை பாதையில் இருவர் வழிமறித்து 'நீ தான் செலவராஜனா?

பாவ சங்கீர்த்தனம் நாடகம் நீ தான் போடுகின்றாயோ... பாவ சங்கீர்த்தனம் என்னும் பெயரை மாற்று அல்லது நாடகத்தை நிறுத்திக் கொள். எங்கள் லடீஸ் வீரமணி அண்ணன் உனக்கு முன்பிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெயரில் நாடகம் போட அவருக்கே உரிமை உண்டு. மரியாதையாக நிறுத்தி விடு' என்றார்கள்.

அவர்களது அடாவடித்தனம் இவருக்குப் பிடிக்கவில்லை. பாவ சங்கீர்த்தனம் என்பது ஒரு பொதுச் சொல். யாருக்கும் சொந்த மானது அல்ல.

போஸ்டர், நோட்டீஸ் என்று அடித்தாகிவிட்டது. ஆகவே தீர்மானமாகக் கூறினார் 'பெயரை மாற்ற மாட்டேன். நாடகத்தை நிறுத்தவும் மாட்டேன்' என்று. பலத்த வாக்கு வாதம் நடந்தது. அவர்களில் ஒருவர் செல்வராஜனின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்தார்.

'நிறுத்துடான்னா சும்மா சொன்னதையே சொல்லிகிட்டு.........' பேரை மாற்றாமல் பாவ சங்கீர்த்தனம் நாடகம் போட்டுப் பார் என்ன நடக்குதுன்னு...' என்றபடி போய்விட்டார்.

இளங்கலைஞர் குழு கூடியது. ஆராய்ந்தது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் 'கேளுங்கள் தரப்படும்' என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான பாதிரியார் வேஷசத்தை ஏற்று நடித்தவர் லடீஸ் வீரமணியே என்பது எத்தனை ஆச்சர்யமானது. கே.செல்வராஜின் இந்த முதல் நாடகம் தந்த வெற்றியுடன் உருவானது தான் 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்' என்னும் அரங்கியல் அமைப்பு. இந்த நாடக மன்றத்தின் இயக்குனர் கே.செல்வராஜ் இந்த மன்றத்தின் தயாரிப்பில், செல்வராஜனின், கீழ் கண்ட நாடகங்கள் மேடை ஏறியுள்ளன.

1973 - கேளுங்கள் தரப்படும், 1974 - உறவுகள் - பொரளை வை. எம். எம்.ஏ மண்டபம், 1975 - புதுப் பணக்காரன் - பொரளை

வை. எம். எம்.ஏ மண்டபம், 1976 - அவள் ஒரு மெழுகுவர்த்தி -

பொரளை வை. எம். எம்.ஏ மண்டபம், 1976 - உனக்கு நான் சொந்தம் -பம்பலபிட்டி கதிரேசன் மண்டபம், 1977 - மோகம் முப்பது நாள் - லயனல் வெண்ட் அரங்கு, 1988 - இங்கேயும் மனிதர்கள் - டவர் அரங்கு, 1997 - பிரளயம் - எல்பின்ஸ்டன் மாளிகை, 1998 - வரம் - கலைஞர் எஸ். உதயகுமார்

டவர் அரங்கு, சத்திய சோதனை - கே. செல்வராஜன்

டவர் அரங்கு.

இரண்டு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றிய ஒரு புதுமையையும் செய்தவர் இந்த செல்வராஜன்.

2002 - ஒரு கொலைவலை - பொரளை வை. எம். எம்.ஏ மண்டபத்தில் இரண்டு காட்சிகள். இவைகள் அனைத்தும் இவர் எழுதி இயக்கி மேடையேற்றிய நாடகங்கள்.

இவை தவிரவும் தனது நாடக மன்றம் (சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்) மூலமாக மற்றக் கலைஞர்களின் நாடகங்களையும் மேடை ஏற்றி இருக்கின்றார்.

1975 'உதிர்ந்த ரோஜா' (திவ்யராஜன்), 1977 சுஜாதாவின் 'முதல் நாடகம்', 1979 ஜீவகீதம், 1980 சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார், 1981 கோமல் சுவாமிநாதனின் தண்ணீர்

தண்ணீர், 1981 வியட்நாம் வீடு சுதந்திரத்தின் ஞான

ஒளி, 1987 கோமல் சுவாமிநாதனின் மனிதன் என்னும் தீவு;

1994 பூகம்பம், 1997 சலங்கையின் நாதம் -எம். உதயகுமார்,

1999 ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இதற்குத் தானே ஆசைப்பட்டாய்.

(1998ல் காரைதீவு குண்டு வெடிப்பில் பார்வை பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் பிச்சையப்பாவின் கண் சிகிச்சைக்காக 1999 மார்ச், ஏப்ரல்

மாதங்களில் இரண்டு முறை மேடையேறி அதன்மூலம் திரட்டப்பட்ட நிதி ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

2001 பேராதனை ஜூனைதீனின் சலனம், 2002 நீர்க் கொழும்பு முத்துலிங்கத்தின் மௌனத்திரை, 2003 ஜூனைதீனின் 'வேலி', நாகூர்கனியின் இப்போ இதெல்லாம் சகஜங்க கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் இத்தனை நாடகங்களை மேடை யேற்றியுள்ள ஒரு அசுரத் துணிவைக் கொண்ட மனிதர்

இந்த கே.செல்வராஜன். இதுமட்டுமா முத்தாக மூன்று நுால்களையும் அச்சிட்டு வௌியிட்டவர். இவர் தன்னுடைய நாடக உலக அனுபவங்களை 'என் நினைவுகளும் நிஜங்களும்' என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். நாடக உலகோடு தனது தொடர்புகள் பற்றியும் தன்னுடன் நடித்தவர்கள் பற்றியும் தனது அனுபவங்களை விரிவாகக் கூறியுள்ளார்.

தனது ஐம்பது வருட காலத்தை கலையுலக அனுபவங் களோடு கலை உலகிற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திருக்கின்ற ஒரு அற்புதமான மனிதர் இவர்.

தனது 'சிலோன் யுனைட்டெட் ஆர்ட் ஸ்டேஜ்'

என்னும் நாடக மன்றத்தினூடாக கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல நாடகங்களை மேடைமேற்றியிருக்கின்றார். இவர் அவ்வப்போது கலைஞர்களைப் பாராட்டி பரிசில்கள் கொடுத்து கௌரவித்திருக்கின்றார். இலங்கை வானொலி, மற்றும் ரூபாவாஹினி சேவைகளிலும் இவரது ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் கூடுதலாக இடம் பெற்றதுண்டு.

No comments:

Post a Comment