Thursday, May 25, 2023

52 ஆண்டுகால வரலாற்றை கொண்ட பொரளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

கொழும்பு 08, பேஸ் லைன் வீதி, பொரளை சந்தியின் சந்தைக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது 66ஆம் இலக்க தோட்டம். இந்த தோட்டத்தில் 66ஆம் ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம். இந்த ஆலயம் இங்கு அமைக்கப்பட்டு 52 வருடங்களாகின்றன. இவ்வாயத்தில் செவ்வாய், வௌ்ளி தோறும் பூஜைகள் நடத்தப்படுவதுடன் வருடாந்த திருவிழாவும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடாந்த தேர்த்திருவிழாவின் போது அம்பாள் வண்ணமிகு தேரில் ஆரோகணித்து வௌிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்வாயலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் போது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுவதுடன் இந்த வருடாந்த உற்சவம் நடைபெறுகின்றபோது இப்பகுதியில் உள்ள பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படும்.

இங்குள்ள இளைஞர்கள் 52 ஆண்டுகளுக்கு முன் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். இவர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடுவதற்கு ஒன்று கூடுகின்ற இடம் தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடம். இவ்வாறு உதைப்பந்தாட்டம் விளையாட ஒன்று கூடியவர்களின் எண்ணத்தில் இங்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்பயனாக ஆரம்பத்தில் சூலாயுதம் ஒன்று வைத்து வணங்கி வந்தார்கள். காலப்போக்கில் அம்மன் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

இந்த பகுதியிலே பௌத்தா்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். எனவே இவ்வாலயத்தில் திருவிழா நடைபெறுகின்றபோது அனைவரும் உதவி ஒத்துழைப்புகள் வழங்கத் தவறுவது இல்லை.

இந்த ஆலயம் பொரளை சந்தியில் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளதால் சந்தையிலுள்ள வர்த்தகர்களும் வியாபாரிகளும் இவ்வாலய உற்சவசத்துக்கு நிதியுதவிகளும் பொருள் உதவிகளும் வழங்கி வந்தார்கள்.

இவ்வாறு ஆலயம் அமைக்கப்பட்டதும் காலப்போக்கில் இங்கு நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டு அந்த நிர்வாக சபையின் பரிபாலத்தின் கீழ் பூசைகள், வருடாந்த உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



No comments:

Post a Comment