Thursday, June 12, 2014

தனது அரசை விமர்சித்துப் படம் எடுத்த பாலச்சந்தரை வாழ்த்தி நெகிழ வைத்தவர்

ஹீண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய “தண்ணீர் தண்ணீர்” படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.
கமலஹாசனையும் ஸ்ரீதேவியையும் வைத்து “வறுமையின் நிறம் சிவப்பு” என்ற படத்தை 1980ல் பாலசந்தர் உருவாக்கினார். கருத்தாழம் மிக்க படம்.
பொதுவாக. பாடல் காட்சிகளை சிறப்பாகவும் புதுமையாகவும் படமாக்க வேண்டும் என்பதில் பாலசந்தர் அதிகம் சிரமம் எடுத்துக் கொள்வார். உதாரணமாக, அவள் ஒரு தொடர் கதையில் “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் காட்சி புதுமையானது.
பாடலில் சிங்கம் கர்ஜிப்பது. யானை பிளிறியது போன்ற சத்தங்கள் வரும். எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாட. கமல்ஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். பாடல். இசை, நடிப்பு, டைரக்ஷன் எல்லாம் சிறப்பாக அமைந்த காட்சி அது.
“அவர்கள்” படத்தில்பேசும் பொம்மையுடன் கமல்ஹாசன் பாடும் பாடலும் இவ்வாறே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
“வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில் மறக்க முடியாத ஒரு பாடல் காட்சி.
பாடலுக்கான மெட்டை (எஸ். ஜானகியின் குரலில்) இசை அமைப்பாளர் போல் ஒவ்வொரு வரியாக ஸ்ரீதேவி பாடிக்காட்ட சிப்பி இருக்குது முத்து இருக்குது என்ற பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே வருவார் கமல்ஹாசன்.
இசை, நடிப்பு, டைரக்ஷன் மூன்றும் திரிவேணி சங்கமம் போல் அமைந்த அற்புதக் காட்சி அது.
இதையடுத்து பாலசந்தர் எடுத்த படம் “தண்ணீர் தண்ணீர்” அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் “தண்ணீர் தண்ணீர்” இதற்கு திரைக்கதை எழுதி டைரக்ட் செய்தார் பாலசந்தர்.
படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.
அப்போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக எம். ஜி. ஆர். இருந்தார்.
தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது- படம் வெற்றிகரமாக ஓடியாது.
படத்தில் அரசை தாறுமாறாகத் தாக்கி இருப்பதாக எம். ஜி ஆருக்கு தகவல் போயிற்று.
“இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று எம். ஜி. ஆர். கூறியதாக எனக்குத் தெரியவந்தது.
‘படத்தின் முடிவில் எல்லோரும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வன்முறைப் பக்கம் திரும்புவதாகக் காட்டப்பட்டி ருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார்கள்.
ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகின்றான் என்பதைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் நாசூக்காக இருக்கும்.
படத்தைப் பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “துப்பாக்கித் தூக்கச் சொல்கிறார் பாலச்சந்தர்” என்று முணு முணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும் அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன்.
அந்த ஆண்டு விருதுக்காக. மத்திய மாநில அரசுகளுக்கு “தண்ணீர் தண்ணீர்” அனுப்பப்பட்டது.
மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால் சிறந்த மாநில மொழிப்படம் என்றும் தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது.
“தண்ணீர் தண்ணீர்” படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும். சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான போது எந்தப் பரிசும் கிடைக்கவில்லை.
ஆனால் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
பரிசளிப்பு விழா எம். ஜி. ஆர். தலைமையில் நடந்தது.
விருது வழங்கும் விழாவில் எம். ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. “என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக. எம். ஜி. ஆர். கைளயால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டேன்.
எம். ஜி.ஆர். பேசும் போது என் பேச்சுக்கு பதிலளித்தார். “அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகின்றோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது’ என்று குறிப்பிட்டார்.
எம். ஜி. ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். ‘எம். ஜி. ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எமுதுகிறார் என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment