Monday, January 6, 2014

திருமணத்தில் பிரிந்த உறவுகளை பாலுவிடம் சரணடைய வைத்த சரண்

ஒரு வாரம் உடல் நலம் சரியில்லாமல் இருந்த இராதாகிருஷ்ணன் திடீரென்று அமரராகிவிட்டார். இராதாகிருஷ்ணன் இறந்தார் என்ற செய்தியை பாலுவால் நம்பவே முடியவில்லை.
தனக்காக உழைத்த இராதாகிருஷ்ணன் இல்லாமல் ‘கோதண்டபாணி ரிகார்டிங் தியேட்டர் திறப்பு விழா நடந்தது. அந்த தியேட்டரின் மாடியில் இராதாகிருஷ்ணன் நினைவாக ஒரு டப்பிங் தியேட்டர் கட்டி அதற்கு இராதாகிருஷ்ணன் பெயரை சூட்டினார். இப்படி பாலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபரானார் இராதாகிருஷ்ணன்.
பாலுவிற்காக உழைத்த நண்பர்கள் சிலர் இருந்த போதிலும், வாழ்க்கையில் நண்பர்களுக்காக உதவி செய்யப்போய் அவர் மாட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு ஒரு சமயம், பாலுவின் நண்பர்கள் சிலர் வந்து பாலுவிடம் ஒரு படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்கள். அவர்கள் கையில் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்களின் விருப்பத்தைத் தட்ட முடியாமல், பாலுவை பூர்ணசந்திரராவ் என்ற விநியோகஸ்தரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்காக தான் உத்தரவாதம் தருவதாகக் கூறினார்.
அதற்கு பூர்ணசந்தர ராவ், பாலுவிடம், ‘இவ்வளவு பிஸியாக இருக்கும் பாலுவால் ஒரு படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்வது கடினமாக இருக்கும்’ என்று உபதேசம் செய்தார். இருந்த போதிலும் பாலுவிற்கு தன் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் உத்தரவாதத்தில் கையெழுத்துப் போட்டார். படம் வளர்ந்தது.
ஆனால் பூர்ண சந்திர ராவ் கூறிய மாதிரியே அந்தப் படம் சரியாகப் போகவில்லை. உடனே அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த படத்தை ஆரம்பித்தார்கள். தெலுங்குப் பட உலகின் அன்றைய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணர் நடிக்க கெப்டன் கிருஷ்ணா என்ற பெயரில் படம் தயாரானது. ஆனால் அந்தப் படம் கூட எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. அந்தக் காலத்திலேயே நட்பிற்காக, தான்போட்ட கையெழுத்துக்காக பாலுகொடுத்த நஷ்டஈடு 7 லட்சம் ரூபாய் அந்த ஏழு லட்சம் ரூபாய் கடனை அடைக்க பாலு மூன்று வருடத்திற்கு மேல் உழைக்க வேண்டியிருந்தது.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பாலுவின் அடுத்த தங்கையான கிரிஜாவின் கல்யாணத்தில், ஜானவாசத்தில் கலந்துகொள்ள முடியாமல் வாங்கிய கடனை அடைக்க பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பாலு. இன்றளவும் அவரது தங்கை பாலுவிடம் இதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் பாலு இதை எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

No comments:

Post a Comment