தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. நடிகர் விஜயகுமார் சொந்தமாக தயாரித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜிகணேசன் – மஞ்சுளா தம்பதியின் மகளாக நடித்திருந்த மீனா பல தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை மீனா குட்டிப் பெண்ணாக நடித்த “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தினை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார்.
ரஜனிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இவருக்கும் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ’பார்வையின் மறுபக்கம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘சுமங்கலி’, ‘திருப்பம்’, ‘பன்னீர் நதிகள்’ , ‘உயிரே உனக்காக’ , ‘லட்சுமி வந்தாச்சு’ , ‘கெட்டி மேளம்’ போன்ற படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக ஜோடி சேர்ந்து பிரபலமானார். ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பரவலாக கவனிக்கபட்ட அவர் அடுத்ததாக ரஜினியின் எஜமான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். எஜமான் வெளியான வருடமான 1993-இல் மீனாவிற்கு வயது 17 தான். அப்போழுது அவருடைய உடல் பூரிப்பை கண்ட பத்திரிகைகள் அவர் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டார் என பரபரப்பாக எழுதின. அப்போதேல்லாம் பதின்மவயதுக்காரர்களின் கனவுக்கன்னி மீனா. அந்த தெத்துப் பல் அவருக்கு மிகப்பெரிய பிளஸ். முத்து, வீரா, அவ்வை சண்முகி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தவர் மீனா.
இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாளத்தில் நடித்தார். கடந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இதில் மோகன்லாலுக்கு மனைவியாக மீனா நடித்திருந்தார். அப்படம் 150 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றார். ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மீனாவே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். நாயகனாக வெங்கடேஷ் நடித்திருக்க, நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார்.
தெலுங்கு த்ரிஷ்யமும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி, மலையாளம் மற்றும் தெலுங்கு த்ரிஷ்யம் படங்களில் நடித்த மீனாவையும், தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியாவையும், லிங்கா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
90-களிலிருந்து 2009 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தன் அழகாலும் குடும்பபாங்கான முகத்தோற்றதாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் மக்கள் மனத்தில் தனி இடம்பிடித்தவர்.
பெங்களூரில் வசிக்கும் மென்பொருள் பொறியியலாளர் வித்யாசாகரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள். இவரது தாயார் ராஜ் மல்லிகாவும், சித்தி ராஜ்கோகிலாவும் நடிகைகளாக ஜொலித்தவர்கள். இவரது தந்தை துரைராஜ். துரைராஜ் பாடசாலை ஆசிரியராக பணியாற்றியவர்! இவர் தனது 67-ஆவது வயதில் 20.6.2014-இல் காலமாகிவிட்டார்.
1976-ஆம் ஆண்டில் பிறந்த மீனாவுக்கு தற்போது வயது 42. விஜய்யின் ‘தெறி’ படத்தில் அவருக்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மீனா கலைமாமணி விருது, கிருஷ்ண தேவராயர் விருது, உகாதி புரஸ்கார் விருது, சிறந்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகைக்கான விருது , நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment