Wednesday, August 7, 2013

காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்

சீப்பாவின் கதை - வசனம் இயக்கத்தில் “மச்சரேகை” நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர். மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.
இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர். மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர். சுப்பராமன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ். ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
ஒரு சமயம் டைரக்கடர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாராய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் &8!னிrதிருக்கிறார்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது.
ஆனால் அப்பா அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
கலைஞர் மு. கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த “குறவஞ்சி” படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி “எந்நாளும் ‘தண்ணி’யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா... ரா...” என்று எழுதினார்.
சினிமாவில் ‘கேட்டது கிடைக்கும்’ என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ! அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தனது “தங்கரத்தினம்” படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் “உதசூரியன்” என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் “எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குவது வயது, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு” என்று எழுதிக்கொடுத்தார்.
அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது “மாலையிட்ட மங்கை” என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த ‘பிஸி’யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.
அந்தக் காலத்தில் ‘கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் ‘பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ், சுவாமிகளின் ‘ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்.” இவ்வாறு கவிஞர் தஞ்சை ராமையா தாஸின் மகன் ரவீந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment