ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்தவர் வைஜந்திமாலா
வசுந்தரா
தேவியின்
மகள்

இதற்கு முன் 1949 ல் ஏவி.எம். தயாரித்த ‘வாழ்க்கை’ படமும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகியாக அறிமுகமான வைஜயந்திமாலா, ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் திரைப்படக் கதாநாயகிகளில் பெரும்பாலானோர் முதிர்கன்னிகளாக இருந்தார்கள்.
ஒன்றிரண்டு குழந்தை பெற்றவர்கள்தான் கதாநாயகிகளாக வலம் வந்தார்கள்! டி. ஆர். மகாலிங்கம் போன்ற இளம் நடிகர்கள், தங்களைவிட மூன்று நான்கு வயது மூத்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது! அந்த நேரத்தில், இளமையும், அழகும், திறமையும், படிப்பும், கொண்ட 17 வயது வைஜயந்தி மாலாவின் திரை உலகப் பிரவேசம், ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. வைஜயந்திமாலாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வெளிவந்தன.
எல்லா பத்திரிகைளும் வைஜயந்தியின் பேட்டியையும், புகைப்படங்களையும் போட்டி போட்டுக் கொண்டு பிரசுரித்தன. ‘வாழ்க்கை’ படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கிலும், ‘பஹார்’ என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டன.
அந்தப் படங்களிலும் வைஜயந்திமாலாதான். “பஹார்” படத்தின் மகத்தான வெற்றியினால் வைஜயந்திமாலா வடநாட்டிலும் புகழ் பெற்றார். அந்தக் காலகட்டத்தில், நர்கீஸ், மதுபாலா, நளினி ஜெய்வந்த், சுரையா போன்றவர்கள், இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளாக விளங்கினர்.
அவர்களும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே, வைஜயந்திமாலாவை வட இந்திய ரசிகர்களும் விரும்பி வரவேற்றனர். ஏராளமான இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வைஜயந்தியைத் தேடிவந்தன. இதன் காரணமாக, தமிழ்ப்படங்களை விட இந்திப் படங்களில் அதிகமாக வைஜயந்திமாலா நடிக்க நேரிட்டது.
வெகு விரைவிலேயே, இந்திப்பட உலக கதாநாயகிகளில் முதல் இடத்தைப் பெற்றார். தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டுக்குச் சென்று, வெற்றிக் கொடி நாட்டிய முதல் நடிகை வைஜயந்தி மாலாதான்.
ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற வசுந்தராதேவியின் மகள்தான் வைஜயந்திமாலா. தந்தை பெயர் எம்.டி. ராமன் சிறு வயதிலேயே வைஜயந்திமாலா வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் நடனம் கற்றார்.
1946ல் நடன அரங்கேற்றம் நடந்தது. தாயார் வசுந்தராதேவியைப் போல, சொந்தக் குரலில் பாடக் கூடியவர் வைஜயந்தி, ‘வாழ்க்கை’ படம் வெளிவருவதற்கு முன்பே இவர் பாடிய பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளி வந்த ஏவி. மெய்யப்பன் செட்டியார்.
காரைக்குடியில் ‘நாம் இருவர்”, “வேதாள உலகம்” ஆகிய படங்களைத் தயாரித்த பின், தன் ஸடுடியோவை சென்னை கோடம்பாக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
சென்னைக்கு வந்த பிறகு, ஏவி.எம். புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’ வைஜயந்திமாலாவின் நடனத்தைப் பார்த்துவிட்டு, அவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஏவி.எம். இந்தப் படத்துக்குப் பிறகு வைஜயந்திமாலா இந்திப் பட உலகிற்கு சென்றுவிட்ட போதிலும், இடையிடையே தமிழ்ப்படங்களிலும் நடித்தார். இதில் கதாநாயகன் ஜெமினி கணேசன் மற்றும் அஞ்சலி தேவி, எஸ். பாலச்சந்தர் ஆகியோரும் நடித்தனர்.
‘வாழ்க்கை’ படத்தைப் போல ‘பெண்’ பெரிய மெகாஹிட் படம் அல்லவென்றாலும், இனிய பாடல்களும், நடனங்களும் நிறைந்த படம் இந்தப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாகவே நடித்திருந்தார். இதே படத்தை ‘லட்கி’ என்ற பெயரில் இந்தியிலும் ஏவி.எம். தயாரித்து வெளியிட்டது. தமிழ்ப் படத்தைவிட இந்திப் படம் வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து
உங்கள் “பராசக்தி” வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா?
உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.
நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம்பெற்றன!
M. G. இராமச்சந்திரனிடம் இருந்த இரு குறைகள்
அன்றொரு நாள் ஒப்பனை அறையில் ஆரூர் தாஸ் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். அவரிடம் கூறியது. “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன்.
இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50-60 இலைங்க விழுது ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை! இன்னொண்ணு...’
நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு என்றேன்.
அப்படி இல்லே காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!

அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில. நிபுணர்களான ரெண்டு, முணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.
இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.
சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கு உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.
அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.
என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை. ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?
எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும் போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும் ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்... நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!
என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.
அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன்.
ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை, அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை. இவ்வாறு ஆருர்தாஸ் கூறினார்.
No comments:
Post a Comment