
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி.ராமா நாயுடு காலமானார். அவருக்கு வயது 78
தெலுங்கில் 1964 ஆம் ஆண்டு ‘ராமுடு பீமுடு’ படத்தின் மூலம் தயாரிப்பாளரானவர் ராமா நாயுடு. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘கோபாலா, கோபாலா’ வரை பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்தவர். கணையப் புற்றுநோய் காரணமாக சில மாதங்களாக ராமா நாயுடு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆந்திராவின் கரம்சேடு என்ற இடத்தில் பிறந்த டகுபதி ராமாநாயுடு தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிகுந்த தயாரிப்பாளராக திகழ்ந்தார். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து சினிமா மீதுள்ள ஈடுபாட்டால் சினிமா ஏஜென்சி தொடங்கி அதன் மூலம் திரைப்படத்துறைக்கு வந்தார். பின்னர் தனது மகன் பெயரில் சுரேஷ் புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்தார். என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரை வைத்து திரைப்படங்களை தயாரித்தார்.
‘ராமுடு பீமுடு’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உட்பட 13 மொழிகளில் 150 க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். தனிநபராக அதிக திரைப்படங்களை தயாரித்தவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமை ராமா நாயுடுவுக்கு உண்டு.
தமிழில் சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் ‘தாதா சாகேப் பால்கே’ விருது மற்றும் பத்ம பூஷண் விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. ராமா நாயுடுவின் மகன் வெங்கடேஷ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனாக இருக்கிறார். மற்றொரு முன்னணி நடிகரான ராணா, ராமா நாயுடுவின் பேரன். பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி ராமா நாயுடுவின் மகள் லட்சுமி. இவர்களுக்கு பிறந்த நடிகர் நாக சைதன்யாவும் ராமா நாடுவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட்டம் எம்.ஜி.ஆருக்கு கிடைக்க காரணமானவர்.
ராமா நாயுடு தெலுங்கில் தயாரித்த ‘ராமுடு பீமுடு’ படத்தில் என்.டி. ராமாராவ் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து. தமிழில் அதன் ரீமேக் உரிமையை ராமா நாயுடுவிடம் இருந்து விஜயா புரோடக்ஷன்ஸ் அதிபர் நாகிரெட்டி பெற்று எம்.ஜி.ஆர்.இரட்டை வேடங்களில் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை உருவாக்கினார். 7 செண்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய அந்தப் படத்தின் வெற்றி மூலம் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட்டம் நிலைத்தது.
No comments:
Post a Comment