Wednesday, November 14, 2018

மருதகாசிக்கு சவாலாக அமைந்த பாடல்


எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப் படத்தில் என்.எஸ்.கே.யும் டி.ஏ. மதுரமும் பாடுகின்ற பாடல் அது என்பதால் என்.எஸ்.கே.யின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் கூட்டிச் சென்றார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக என்.எஸ்.கே.யின் அறிமுகம் மருதகாசிக்குக் கிடைக்கிறது. மருதகாசியிடம் என்.எஸ்.கே. "எனக்கு இதுவரை உடுமலையாரும் கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலை சந்தானகிருஷ்ண நாயுடு மட்டும் எழுதியிருக்கிறார். நீங்கள் எழுதுகின்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் உடுமலையாரைத்தான் அழைக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதற்குச் சம்மதமானால் எழுதுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
மருதகாசி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, "காட்சி என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றிருக்கிறார்.
"ஒரு குருவிக்காரனும் குருவிக்காரியும் தனித்தனியாக வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு தங்கள் குடிசைக்குத் திரும்புகிறார்கள். அப்போது குருவிக்காரன், குருவிக்காரி இருந்த தோற்றத்தைப் பார்த்து சந்தேகத்தோடு சில கேள்விகள் கேட்கிறான் அவளும் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதாவது ஒரு காலிப்பயல் தன்னைக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கைவளையல் உடைந்ததாகவும் சொல்கிறாள். உடனே கோபத்துடன் அவனுக்குப் புத்தி புகட்டப் போவதாகச் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இதுதான் காட்சி'' என்று என்.எஸ்.கே. விளக்கியிருக்கிறார்.
"இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வருகிற சிங்கன் சிங்கி கதைதானே!'' என்று மருதகாசி சொல்ல "ஓ, உங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?'' என்றார் என்.எஸ்.கே."தனக்கு இலக்கியப் பயிற்சியளித்தவர்
பாபநாசம் ராஜகோபாலய்யர்' என்றும் "தனது மானசீக குரு உடுமலை நாராயணகவி'யென்றும் "ராமநாடகக் கீர்த்தனை எழுதிய சீர்காழி அருணாசலக் கவிராயர், நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வமத சமரசக் கீர்த்தனைகள் எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் இவர்களெல்லாம் என் வழிகாட்டிகள்' என்றும் மருதகாசி சொல்லியிருக்கிறார்.
உடனே என்.எஸ்.கே. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "உடுமலையார் இருக்கும் இதயத்தில் உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டேன். நீங்கள் நன்றாக வளருவீர்கள்'' என்று வாழ்த்தினார். மறுநாள் அந்தப் பாடலை எழுதிக்கொண்டு மருதகாசி என்.எஸ்.கே.யைச் சந்தித்துப் பாடிக் காட்டினார். அவரும் பரவசப்பட்டார்.
ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை. அதை என்.எஸ்.கேயும் பாடவில்லை. 1955இல் வெளிவந்த "முல்லைவனம்' என்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது இதுதான்.

ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம்பட்டு ஜரிகைச் சேலை
ஓரங்கிழிஞ்ச தென்னடி - என் குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி

பெண் : பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும்போது
ஆணிமாட்டிக் கிழிஞ்சு போச்சுடா
என் குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா

ஆண் : சீவிச் சிணுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே - என் குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தென்னடி

பெண் : கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமிவந்து ஆடினதாலே - என் குருவிக்காரா
கூந்தல் கலைஞ்சு போச்சுடா -
இப்படிப் போகும் அந்தப் பாடல்


1968 - 2018: சாதனைகளின் பொன்விழா ஆண்டு!



தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்க இயலாத ஆண்டு 1968. தமிழ்த் திரைப்படங்கள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்த ஆண்டு இது. அந்த சாதனைகளின் பொன்விழா ஆண்டு 2018.
இந்த காலகட்டத்தில் 46 படங்கள் வெளிவந்தன. அவற்றுள் "கலாட்டா கல்யாணம்', "ஒளி விளக்கு', "தாமரை நெஞ்சம்', "குடியிருந்தகோயில்', "உயர்ந்தமனிதன்', "எதிர்நீச்சல்', "பணமா பாசமா', "குழந்தைக்காக', "தில்லானா மோகனாம்பாள்' போன்ற படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடிய வெற்றிப்படங்கள். இந்த ஆண்டில் குடும்பக்கதையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அதிகம் வெளிவந்தன.
இந்த ஆண்டில்தான் "ஜீவனாம்சம்' படத்தின் மூலம் லட்சுமி நடிகையாக அறிமுகமானார். சின்னப்பா தேவர் தான் தயாரித்த "நேர்வழி' படத்தில் எம்.ஜி.பாலு என்ற புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.
"புத்திசாலிகள்' படத்தில் இசையமைப்பாளர் வி.குமார், பின்னாளில் தனது மனைவியாக்கிக் கொண்ட ஒய். சொர்ணாவை பாடகியாக அறிமுகப்படுத்தினார். "குடியிருந்தகோயில்' படத்தில் இடம்பெற்ற "நான் யார்.. நான் யார்..' என்ற பாடல் மூலம் புலவர் புலமைப்பித்தன் தமிழ்ப்படவுலகிற்கு அறிமுகமானார். இதே படத்தில் பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்ற பாட்டின் மூலம் அறிமுகமானார். இப்படி பல புதுமுகங்கள் திரைத்துறையில் நுழைந்த ஆண்டு இது.
1968 -ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான மூன்று விருதுகள் முறையே "உயர்ந்த மனிதன்', "தில்லானா மோகனாம்பாள்', "தாமரை நெஞ்சம்' ஆகிய படங்களுக்கு கிடைத்தன.
திரைப்படத்திற்கான தேசியவிருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தாலும் 1968-ஆம் ஆண்டில்தான் பாடல் ஆசிரியர்களுக்கு தேசிய விருதினை மத்திய அரசு வழங்க ஆரம்பித்தது. தமிழ் பாடலாசிரியர்களில் பாடலுக்கான முதல் தேசிய விருதை பெற்ற பெருமை கவியரசர் கண்ணதாசனையே சாரும். "குழந்தைக்காக' என்ற படத்தில் இடம்பெற்ற "ராமன் என்பது கங்கை நதி, அல்லா என்பது சிந்து நதி, ஏசு என்பது பொன்னி நதி..' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்காக அந்த விருது வழங்கப்பட்டது.
இதே ஆண்டில்தான் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசியவிருதினை "உயர்ந்த மனிதன்' படத்தில் இடம் பெற்ற "பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்' என்ற பாடலுக்காக பி. சுசீலா பெற்றார். பிரிவினால் பெண்படும் விரக வேதனையை இந்தப் பாடலில் தன் வரிகள் மூலம் வாலி அழகாக வெளிப்படுத்த அதற்கு தன் குரலால் மேலும் மெருகேற்றியிருப்பார் சுசீலா. இந்த விருதின் மூலம் தமிழில் தேசியவிருதுபெற்ற முதல் பின்னணிப் பாடகியானார் சுசீலா. இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் சுசிலாவின் நெருங்கிய உறவினர் காலமானார். எனவே இப்பாடலைப் பாடுவதற்கு அவரை அழைத்து வருவது கஷ்டமாக இருந்தது.
உறவினர் காலமான துக்கத்தைத் தாங்கிக்கொண்டு பாடினார். ஆனால் பாடி முடித்தவுடன் மயக்கமாகிவிட்டார். சமீபத்தில் கண்ணதாசன் - விஸ்வநாதன் நம்பிக்கைநிதியம் நடத்திய விழாவில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளராக இருந்த மதுரை ஜி.எஸ். மணி இச்சம்பவத்தைக் கூறி அந்தப்பாடலையும் பாடி பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். அவர் மேலும் கூறிய போது, "உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பு முடிந்து அதனை போட்டுப் பார்த்த ஏவி. மெய்யப்ப செட்டியார், இந்தப் பாடல் காட்சி முடிந்தவுடன் சுசிலாவை அழைத்து பாடலைப் அருமையாக பாடியுள்ளீர்கள், உங்களுக்கு நிச்சியமாக தேசிய விருது கிடைக்கும்'' என்றார். செட்டியாரின் வாக்கும் பலித்தது.
"குழந்தைக்காக' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பேபிராணிக்கு கிடைத்ததும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் பணியாற்றிய கே.எஸ். பிரசாத்திற்கு கிடைத்ததும் இதே ஆண்டில்தான்.
1968-ஆம் ஆண்டில் பதிமூன்று படங்களில் ஜெய்சங்கரும் இருபத்தி இரண்டு படங்களில் நாகேஷூம் பதிமூன்று படங்களில் ஜெயலலிதாவும் நடித்து புகழ்பெற்றது இதே ஆண்டில்தான். இத்தனைக்கும் 1967ஆம் ஆண்டு மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகளை சந்தித்தார் ஜெயலலிதா. அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போதும் தொடர்ந்து நடித்தது தொழில் மீது அவருக்கிருந்த அர்ப்பணிப்பைக் காட்டியது. அதற்குரிய பலனும் அவருக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த "குடியிருந்தகோயில்', "ஒளிவிளக்கு', "புதிய பூமி', "ரகசிய பொலிஸ்' மற்றும் சிவாஜியுடன் நடித்த "கலாட்டா கல்யாணம்' போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்கள். இந்த வெற்றிகளின் மூலம் ஜெயலலிதா புகழின் உச்சிக்கே சென்றார்.
"தாமரை நெஞ்சம்' கே. பாலசந்தர் இயக்கிய படமாகும். இவர் எதையுமே வித்தியாசமாக செய்பவர். முதலில் படத்திற்கு அழகான பெயரை வைத்தார். ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா மஞ்சம் "தாமரை நெஞ்சம்'. ஜெமினி கணேஷனை நடிக்க வைத்து பாலசந்தர் இயக்கிய முதல் படம். பின்னர் பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்.
"தாமரை நெஞ்சம்' படம் சரோஜா தேவிக்கு திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைப் படம் என்றால் அது மிகையில்லை. அளவான நடிப்பை அற்புதமாக வெளிபடுத்தியிருப்பார்.
ஜெமினி கணேஷனும் சரோஜா தேவியும் நடித்த மற்றுமொரு வெற்றிப்படம் "பணமா பாசமா'. வாழ்க்கைக்குத் தேவை "பணமா பாசமா' என்ற பிரச்சினையை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இப்படத்தின் இறுதியில் பாசமே வெற்றி பெறும் என்று முடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலா இப்படத்தில் "எலந்தபழம் எலந்தபழம்' என்ற பாடலைப் பாடி நடித்திருப்பார். இந்தப் பாடல் காட்சி அவர் திரை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தது. இதே 1968-ஆம் ஆண்டு "சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக நடித்து தனக்கு நகைச்சுவையும் வரும் என நிரூபித்துக்காட்டினார் விஜய நிர்மலா.
அடுத்து 1968ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று "தில்லானா மோகனாம்பாள்' நாதத்திற்கும் நாட்டியத்திற்கும் நடந்த போட்டி என்றாலும் உண்மையாக சிவாஜிக்கும் பத்மினிக்கும் நடந்த போட்டியாக இன்றும் கருதப்படுகின்றது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நிற்கும்படி செவ்வனே செய்திருந்தார்கள். சிவாஜி, பத்மினி தவிர வாய்ச்சவுடால் பாத்திரத்தில் நடித்த நாகேஷையும் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமாவையும் தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எந்த வயதினரும் ரசித்துக் கேட்கும் பாடல்களாக அமைந்தன. இப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் நாதஸ்வரத்திற்கு மதுரை எம்பி.என் சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களை பயன்படுத்தியிருப்பார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் "தில்லானா மோகனாம்பாள்' ஆவணப்படுத்த வேண்டிய படம்.
பக்திப் படங்கள், குடும்பப் படங்கள் என்று அடுத்தடுத்து வெளிவந்த 1968-ஆம் ஆண்டில் முழுநீள நகைச்சுவையைச் சுமந்து வந்த படம் "கலாட்டா கல்யாணம்'. இப்படத்தில் மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். கோபுவின் வசனத்தில் சி.வி. ராஜேந்திரன் இயக்கிய சுப்பர் டூப்பர் வெற்றிப்படம். இப்படத்தின் பாடல்களும் சுப்பர் ஹிட்டாகும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் தவிர 1968ஆம் ஆண்டில் ஜெய்சங்கர் நடித்த அனைத்துப் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றன. இவர் நடித்த "நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் கதைக்குத் தகுந்தவாறு சிஐடி அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு சோ திரைக்கதை - வசனம் எழுதியிருப்பார். 1967ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். இப்படத்தை இயக்கியவர்கள் திருமலை - மகாலிங்கம் இரட்டையர்கள், இயக்குநர் ஏ.பீம்சிங்கிற்கு உறவினர்கள்.
ஜெய்சங்கர் நடித்த "அன்பு வழி'படத்தில் தெள்ளூர் தர்மராசன் கீரைவகைகளையும் காய்கறிகளின் பெயர்களையும் மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் அருமையாக எழுதியிருப்பார்.
இசை மனிதனின் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இவ்விசையின் மகத்துவத்தைக் "கல்லும் கனியாகும்' என்ற படத்தில்
கல்லும் இசையில் கனியாகும்
முள்ளும் அதனால் மலராகும்
உள்ளம் உருகும் பண்பாடும் - அந்த
ஓசையிலே நாதம் நின்றாடும் என்று கவிஞர் வாலி எழுதியிருப்பார்.
தன் திரை வாழ்வில் எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம் "கணவன்'. அந்தக் காலகட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமுகரும் சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்டவருமான எஸ்.எஸ். தென்னரசு வசனம் எழுதிய ஒரே படம் மற்றும் ஜேயார் மூவீஸ் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "புதிய பூமி'.
ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "ஒளிவிளக்கு' அதுவும் கலரில் தயாரிக்கப்பட்டது.
கே. பாலசந்தர் இயக்கத்தில் சரோஜா தேவி நடித்த ஒரே படம் "தாமரை நெஞ்சம்'.
பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் திரைப்படத்திற்கு எழுதிய ஒரே பாடல் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்று தொடங்கும் பாடல்
பின்னணிப் பாடகர்கள் டி.எம்.செளந்திரராஜன் மற்றும் ஏ.எல். ராகவன் செüந்தர் ராகவன்மூவீஸ் என்ற பெனரில் தயாரித்த ஒரே படம் "கல்லும் கனியாகும்'.
மோகன் காந்திராமன் இயக்கத்தில் புகழேந்தி இசையில் வெளிவந்த ஒரே படம் "செல்வியின் செல்வன்' . இவர் இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்குத்தான் இசையமைத்தார். மற்றொரு படம் "குருதட்சணை'. நடிகை எல்.விஜயலட்சுமியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் "குடியிருந்த கோயில்'.
கவிஞர் பூவை செங்குட்டுவன், எம்.ஜி.ஆர் நடித்த "புதியபூமி' மற்றும் "காதல் வாகனம்' படங்களுக்கு பாட்டு எழுதினார். இரு படங்களும் 1968ஆம் ஆண்டு வெளிவந்தன. அதன்பிறகு அவர் எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதவில்லை "உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
சிவாஜி, செளகார் நடிப்பிற்கு இணையாக சிவகுமாரும் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார். இப்படத்தில் காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரரான டி.எம்.செளந்திரராஜன் தன் குரலில் வேற்றுமையைக் காட்டி சிவாஜிக்கும் சிவகுமாருக்கும் பாடியிருப்பார்.
விநாயகா பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய முதல் படத்திற்கு "நீ' என்றும் இரண்டாவது படத்திற்கு "நான்' என்ற பெயரையும் மூன்றாவது படத்திற்கு "மூன்றெழுத்து' என்று பெயர்களை வைத்து திரைப்படங்களைத் தயாரித்தனர். 1968-ஆம் ஆண்டு வெளிவந்த "மூன்றெழுத்து' படத்தில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த ஆண்டு ரவிச்சந்திரன் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக ஓடின.
இந்த பொன்விழா ஆண்டில் (2018) அன்றைய படங்களில் நடித்து நம்முடன் வாழும் நடிகர்களையும், நடிகைகளையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் போற்றுவோம். நடிகர் சங்கம் பொன்விழா ஆண்டு கலைஞர்களுக்கு விழா எடுத்தால் வரலாற்றில் வாழ்வார்கள்.

Friday, November 9, 2018

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவு: கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படத்தை மறு தணிக்கை செய்யும் பணிகள் முடிந்தன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜூ மேலும் கூறும் போது, “மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்புக்குழு உறுதி அளித்ததால் பிரச்சினை முடிந்தது எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, முதல்வர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்கவில்லை” என்றார்.

அ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக போராட்டம்!


பல்வேறு நகரங்களில் சர்கார்
படத்தின் காலை காட்சிகள் ரத்து

அ.தி.மு.கவினர் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் நேற்று காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையிலான காட்சி மற்றும் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சியை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதே போல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்திலும் அ.தி.மு.கவினர் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கு முன்பு திரண்டு சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பெனர் வைத்ததாக தஞ்சையில் 25 பேர் மீதும் திருவாரூரில் 24 பேர் மீதும் நாகையில் 20 பேர் மீதும் கரூரில் 10 மீதும் திருச்சியில் 4 பேர் மீதும் புதுக்கோட்டையில் - 4 பேர் மீதும் என மொத்தம் 87 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாயகிக்கு டூயட் பாடிய `மெளனராகம்' வர்ஷா ரஞ்சித்

நான் உன்பாடல்
நீயென் தேடல்
இடையில் ஏனிந்த மெளனங்கள்.... ***
இது விஜய் டிவியின் `மெளனராகம்' சீரியலின் டைட்டில் பாடல். அந்த சீரியலின் கதையே ஒரு சிறுமி, தனது பாடல் திறமையால் இந்த உலகுக்குத் தன்னை அடையாளப்படுத்த விரும்புவதே. அதில் கிருத்திகா எனும் சிறுமி மிக அழகாக நடித்துவருகிறார். அவர் பாடுவது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது சொந்தக் குரலில் அவரே பாடுகிறாரோ என நினைக்கவைக்கும். ஆனால் அவருக்குப் பின்னணி பாடியிருப்பவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா.

மெளனராகம்' பாடலை வர்ஷா பாடிய வீடியோ யூ-டியூப்பில் நான்கரை இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. இந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்துவருகிறார். சோஷியல் மீடியாவில் பலராலும் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறார் வர்ஷா. சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். சின்ன வயதில் இவ்வளவு ஆச்சர்யங்களைத் தரும் வர்ஷாவிடம், `எப்போதிருந்து மியூசிக் கத்துக்கறீங்க?" எனப் பேச்சைத் தொடங்கினோம்.
சின்னச் சிரிப்புடன், `` நான் முறைப்படி மியூசிக் கத்துக்கலை. அப்பா ரஞ்சித் வாசுதேவ், சித்தார், மிருதங்கம், தபேலா, கீபோட், டோலக் எனப் பல இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாசிப்பார். பாடல்கள் பாடியிருக்கார். படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கார். சமீபத்தில், `செம்மறி ஆடு' படத்தில் அவர் மியூசிக்கில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். அம்மா பாட்டு டீச்சர். இவங்கக்கிட்ட கத்துக்கிட்டதோடு சரி. லெவன்த் படிக்கும் அண்ணன், டிரெம்ஸ் கத்துக்கிட்டிருக்கான். அவனோடு நிறைய சண்டை, கொஞ்சம் சமாதானம்னு இருப்பேன். எனக்கு ரெண்டு ஆசை. ஒண்ணு, சிங்கர் ஆகணும். இன்னொண்ணு, டாக்டர் ஆகணும். அப்பா நான் விரும்பும்போது பாட்டு பிராக்டீஸ் பண்ணவும், பாடம் படிக்கவும் விடுவாங்க. ஆனா அம்மாதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்.
மலையாளத்தில் `வானம்பாடி' என்ற சீரியலுக்கு மியூசிக் ஜெயசந்திரன் அங்கிள்தான். அவர் அப்பாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட். அவருக்கு என் குரல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் என்னை அந்த சீரியலில் பாடவெச்சார். அவர்தான் `மெளனராகம்' சீரியலின் மியூசிக் டைரக்டர். அதனால் நான் பாடறதுக்கு சான்ஸ் கிடைச்சது. பழநிபாரதி அங்கிளின் வரிகள் எல்லாம் சுப்பரா இருந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி சீரியலில் நடிக்கும் கிருத்திகாவே அந்தப் பாட்டைப் பாடுற மாதிரி இருக்குனு நிறைய பேர் சொல்றாங்க. அந்தளவுக்கு என் குரல் அவங்களுக்குப் பொருத்தமா இருக்குதுன்னா எனக்கும் ரொம்ப சந்தோஷம். பலரும் அப்பாவுக்கு போன் பண்ணி என்னைப் பாராட்டறாங்க. ஒருநாள் பெரியப்பாகிட்டேயிருந்து போன் வந்துச்சு. (அவரும் மியூசிக் டைரக்டர்தான்) நான் பாடினதை எஸ்.பி.பி அங்கிள் யூ-டியூப்பில் பார்த்தாராம். உடனே போன் பண்ணி `வர்ஷா ரொம்ப நல்லா பாடியிருக்கா, நல்ல எதிர்காலம் இருக்கு. என் ஆசிர்வாதங்களைச் சொல்லு'னு சொன்னாராம். இதைக் கேட்டதும் எனக்குக் காத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. அவ்வளவு பெரிய லெஜண்டின் ப்ளஸிங் கிடைச்சிருக்கு." எனச் சொல்லும் வர்ஷாவின் குரலில் அவ்வளவு சந்தோஷம்.
`சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வருகிறதாமே?' என்றதும் `நிறைய வருது. `டிராஃபிக் ராமசாமி' படத்தில் `போராளி அனந்தம்...' பாடலில் நானும் பாடியிருக்கேன். அமேசான் வெப்சைட்டுக்கான ரைம்ஸ் பாடிட்டிருக்கேன். வித்யாசாகர் அங்கிள் மியூசிக்ல பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் `ஆருத்ரா' படத்தில், `செல்லம்மா செல்லம்' என்ற பாடலை சமீபத்தில் பாடினேன். கார்த்திக் சாரும் நானும் சேர்ந்து பாடியிருக்கும் டூயட் பாடல். இதன் ஓடியோ பங்ஷனில் `இந்தப் படத்துல பா.விஜய் பாடகராக அறிமுகமாகிறார். அவர் மட்டுமல்ல வர்ஷாவும்தான். வர்ஷாவோட குரல் அருமையாக இருக்கும். என்கிட்ட மூணு வருஷமா பாடிட்டிருக்கா. இப்போதுதான் தனியா பாடுகிறாள். ஹீரோயினுக்குச் சின்னப்பொண்ணோட குரல் பொருந்துமான்னு சந்தேகமாக இருந்துச்சு. பா.விஜயிடம் இதைச் சொல்லி வேறு யாரையாவது பாடவைக்கலாமான்னு சொன்னப்போ, `யார் பாடினாலும் வர்ஷா பாடினது மாதிரி வராது'னு மறுத்துட்டார். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தற்கு வித்யாசாகர் அங்கிளுக்கு பா.விஜய் சாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்.
ஆருத்ரா படப் பாடலின் சில வரிகளைப் பாடச் சொன்னதும் இனிய குரலில் நிறைவாக முடிக்கிறார்...
செல்லம்மா செல்லம்....
என் பேச்சு வெல்லம்
தித்திக்குதா... தித்திக்குதா...
குட்டிம்மாகூட குயிலம்மா பாட
ஒத்துக்குதா... ஒத்துக்குதா...



“என்ன புள்ள! களைப்பு தெரியாமல் இருக்க பாடுவதுதானே நாட்டுப்புறப் பாடல்"

`சுப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என் ஊர். வானம் பார்த்த பூமி. விவசாயம் செய்ய நீர்ப்பாசனம் பெரிய அளவில் இல்லை. சுத்தி இருக்கிற தைல மரங்கள், இருக்கின்ற கொஞ்சநஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளும். மழைக்காலம் தவிர, மற்ற காலங்களில் எங்கள் ஊரில் வறட்சிதான். அதனால் ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் செல்வார்கள். அங்கே களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது உண்டு'' - பாடலுக்குப் பின்னால் இருக்கும் பிளாஷ்பேக் கதையிலிருந்து தொடங்குகிறார், செந்தில் கணேஷ். `சுப்பர் சிங்கர்' சீஸன் 6-ல் வெற்றிபெற்று புகழேணியில் ஏறியிருக்கும் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியிடம் பேசினோம்.

``விசேஷ காலங்களில் மைக்செட் கட்டி நாட்டுப்புறப் பாடல்களை ஒலிக்கவிடுவார்கள். எங்கள் ஊரின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கோட்டைச்சாமி, ஆட்காட்டி ஆறுமுகம், மாரியம்மாள். இவர்களுடைய பாடல்களைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன். தவிர பெண்களுக்குப் பேய் ஓட்டுபவர் பாடும்போது அதிலும் ஒரு ராகம் இருக்கும். அதையும் ஆழ்ந்து கவனிப்பேன். நான் கேட்கிற இசையையெல்லாம் `ஹம்' செய்துகொண்டே இருப்பேன். இதெல்லாம் 25 வருஷங்களுக்கு முன்னால்... டி.வி, ரேடியோ என எங்களுக்கு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத காலம். அப்படி ஒருநாள், பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து என் நண்பர்களுடன் தாளம்போட்டுப் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் குருநாதர் செல்லத் தங்கையா அங்கே வந்தார் (அப்போ என் குருநாதர், பிறகு என் அக்காவின் கணவர்). அவர் கல்லூரி மாணவர். நான் எட்டு வயதுப் பையன். அவர் கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வமானவர். எங்களைப் பொறுத்தவரை, அவர் பெரிய ஆள். அவரைப் பார்த்ததும் ஆளுக்கொரு பக்கமாக ஓடிவிட்டோம். எங்களை விரட்டிப் பிடித்து, `என்னடா பாடுறீங்க?' எனக் கேட்டு, அவர் முன்பு என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். `நல்லா பாடுற... நான் பாட்டு எழுதித் தர்றேன், அதைப் பாடு' என்று சொன்னவர், கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்தெடுத்தார்.

ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது

இலங்கை  மேல் மாகாண சபை 2017-12-14ஆம் திகதி  கொழும்பிலுள்ள மேல் மாகாண அழகியற்கலை மண்டபத்தில் நடத்திய விழாவில் தமிழர் நற்பணி மன்றத் தலைவரும் கலைஞருமாகிய கே. ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது வழங்கப்பட்டபோது.....இந்த "சினிமினி" இணையத்தளத்தின் பொறுப்பாளரும் இவரே ஆவார்.