அவிசாவளை, மாதொல, கஸ்தூரி உயன் ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்
அவிசாவளை, மாதொல, கஸ்தூரி உயனில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்று காலை 8.05 மணிமுதல் 10.15 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஐயனின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கிரியா கால நிகழ்வுகள் யாவும் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது. அன்று மகா கணபதி ஹோமம், கிராம சாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, தானியாதிராசம், ஜலாதிவாசம், நயனோன் மீளனம், சயனம், கலஸ்தாபனம், யாகசாலை பூஜை மற்றும் முதலாம் கால யாகம் ஆகியவை இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, பிம்ப ஸ்தாபனம், விசேட திரவிய ஹோமம், மகா பூர்ணாகுதி மற்றும் கும்ப வீதி பிரதட்சணம் ஆகியவை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 9.45 மணிமுதல் 10.15 மணி வரை ஐயனின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, பகல் 12.00 மணியளவில் விசேட அலங்காரப் பூஜையும், மகேஸ்வர பூஜையும் (அன்னதானம்) இடம்பெறும்.
எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், விசேட பூஜை, ஐயனின் மணிமாலை அணிவித்தல் மற்றும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) ஆகியவை நடைபெறவுள்ளன.
ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இராதா சிவகுமார் சிவாச்சாரியாரின் தலைமையில் இக்கிரியை யாவும் நடைபெறவுள்ளன. இந்த ஆன்மீகப் பெருவிழாவில் அனைத்து பக்த பெருமக்களையும் கலந்துகொண்டு ஐயனின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய ஆதீன கர்த்தா குருசாமி மகேஸ்வரன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment